தமிழ் ஆசிரியர்கள் “நஹி”.. சமஸ்கிருதத்துக்கு “53 பேர்”! மத்திய அரசின் கேவி பள்ளிகளில் அவலம்
சென்னை: தமிழ்நாட்டில் மத்திய அரசின் கல்வித்துறையால் இயக்கப்பட்டு வரும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ஒரு தமிழாசிரியர் கூட இல்லை என்றும், சமஸ்கிருதத்தை கற்பிக்க 53 ஆசிரியர்கள் இருப்பது தகவலறியும் உரிமை சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது.
மத்திய அரசின் கல்வித்துறை அமைச்சகத்தால் நாடு முழுவதும் கேந்திரிய வித்யாலயா என்ற பெயரில் தேசிய பாடத்திட்டத்தை அடிப்படையாக கொண்டு பள்ளிகள் இயக்கப்பட்டு வருகின்றன.
மத்திய அரசு பணியில் இருப்பவர்கள், ராணுவத்தில் பணிபுரிபவர்கள் பல்வேறு மாநிலங்களுக்கு பணியிட மாறுதல் பெற்று செல்லும்போது அவர்களின் பிள்ளைகள் வெவ்வேறு பாடத்திட்டங்களில் படித்து குழம்பிவிடக் கூடாது என்பதற்காக இந்த பள்ளிகள் இயக்கப்பட்டு வருகின்றன.

கேந்திரிய வித்யாலயா பள்ளிகள்
இந்தியா முழுவதும் 1,245 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளும், வெளிநாட்டில் 3 பள்ளிகளும் செயல்பட்டு வருகின்றன. இதில் தமிழ்நாட்டில் மட்டும் பல்வேறு மாவடங்களில் மொத்தம் 49 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் தொடங்கி செயல்பட்டு வருகின்றன. மொத்தமான கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் மட்டும் 14.35 லட்சம் மாணவ மாணவிகள் பயின்று வருகிறார்கள்.

பெற்றோர் ஆர்வம்
இந்த பள்ளிகளில் பல்வேறு பரிந்துரைகளின் அடிப்படையில் மத்திய அரசு பணியில் இல்லாத பெற்றோர்களின் பிள்ளைகளும் பயின்று வருகிறார்கள். தேசிய பாடத்திட்டத்துடன் குறைவான கட்டணமும் வசூலிக்கப்பட்டு வருவதால் போட்டித் தேர்வுகளை எழுத விரும்பும் மாணவர்கள் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் சேர்ந்து படிக்கின்றனர்.

மொழி
ஒவ்வொரு ஆண்டும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் பிள்ளைகளை சேர்க்க போட்டி நிலவி வருகிறது. நாடு முழுவதும் பல மாநிலங்களில் இயங்கி வரும் இந்த கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகியவை பயிற்று மொழியாக உள்ளன. பிராந்திய மொழிகளும் அந்தந்த மாநிலங்களுக்கு ஏற்ப கற்றுக்கொடுக்கப்பட்டு வருகின்றன.

தமிழ் புறக்கணிப்பு
ஆனால், தமிழ்நாட்டின் உள்ள கேந்திரிய வித்யாலயாவில் தமிழ் பயிற்றுவிக்கப்படுவது இல்லை என்றும், இந்தி, சமஸ்கிருதத்துக்கு மட்டுமே முக்கியத்துவம் தரப்படுவதாகவும் குற்றச்சாட்டு உள்ளது. இது தொடர்பாக தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் எழுப்பப்பட்ட கேள்வி பள்ளி நிர்வாகம் அளித்து பதில் இந்த குற்றச்சாட்டுக்களை மெய்பிப்பத்தைபோல் அமைந்து உள்ளது.

தமிழ் O - சமஸ்கிருதம் 53
தமிழ், இந்தி, சமஸ்கிருதம் ஆகிய மொழிகளை பயிற்றுவிக்க எத்தனை ஆசிரியர்கள் உள்ளார்கள்? தமிழ், இந்தி, சமஸ்கிருத மொழிகள் பள்ளியில் கட்டாயமா? என்பன உள்ளிட்ட 15 கேள்விகள் அதில் எழுப்பட்டது. இதற்கு பதிலளித்த பள்ளி நிர்வாகம் இந்தி ஆசிரியர்கள் 109 பேரும், சமஸ்கிருத ஆசிரியர்கள் 53 பேரும் இருப்பதாகவும் தமிழாசிரியர்கள் ஒருவர் கூட இல்லை என்றும் தெரிவித்துள்ளது.

தமிழ் கட்டாயமில்லை
அதேபோல் 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை சமஸ்கிருதம் மற்றும் இந்தி ஆகிய மொழிகள் கேந்திரிய வித்யாலயாவில் கட்டாயமாக படிக்க வேண்டும் என்றும், ஒன்பதாம் வகுப்பு முதல் விருப்ப பாடமாக சமஸ்கிருதம், இந்தியை தேர்வு செய்துகொள்ளலாம் எனவும் குறிப்பிடப்பட்டு உள்ளது. ஆனால், தமிழ் மொழி பாடம் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் கட்டாயம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications