பொன்முடிக்கு மட்டும் அல்ல..நேருவுக்கும்தான் வேட்டு.. திருச்சி சிவா.. திமுகவில் இனி கதகளி ஆட்டம்தான்!
சென்னை: தமிழ்நாடு அமைச்சர் பொன்முடியின் சர்ச்சைப் பேச்சு மூலம் அவரது திமுகவின் துணைப் பொதுச்செயலாளர் பதவி பறிக்கப்பட்டுவிட்டது. இதனை திமுக தலைவரான முதல்வர் மு.க.ஸ்டாலினே அறிவித்துள்ளார். இதற்கு அடுத்து வெளியான, திமுகவின் புதிய துணைப் பொதுச்செயலாளர் திருச்சி சிவா எம்பி என்ற அறிவிப்புதான் திருச்சி திமுகவில் தீயாய் பற்றி எரிய தொடங்கி இருக்கிறது.
திராவிடர் கழகத்தில் இருந்து திமுகவுக்கு வந்தவரான பொன்முடி, தமது துடுக்குத்தனமான பேச்சுகளால் பல சர்ச்சைகளில் சிக்கினார். இப்படித்தான் பழைய வரலாறு ஒன்றைப் பேசப் போய் கட்சிப் பதவியை பறிகொடுத்த கையோடு அமைச்சர் பதவியையும் இழக்கும் அபாயத்துக்கு தள்ளப்பட்டுவிட்டார்.

திமுக துணைப் பொதுச்செயலாளர் திருச்சி சிவா
திமுகவின் துணைப் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட பொன்முடிக்கு பதில், திருச்சி சிவா, அப்பதவிக்கு நியமிக்கப்பட்டிருப்பதுதான் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது. திருச்சி சிவா, திமுகவின் இளைஞரணி தொடங்கப்பட்ட காலத்தில் இருந்தே முதல்வர் ஸ்டாலினுக்கு வலதுகரமாக இருந்தவர். திமுகவில் ராஜ்யசபா எம்பி பதவி தொடர்ந்து திருச்சி சிவாவுக்கு வழங்கப்பட்டு. கொள்கை பரப்புச் செயலாளர் பதவியும் தரப்பட்டு ஓரளவு மரியாதையை கொடுத்தது கட்சி மேலிடம்.
திருச்சி திமுகவின் நிலைமை என்ன?
ஆனால் திருச்சி திமுகவில் நிலைமை அப்படி இல்லை. திருச்சியின் அசைக்க முடியாத மாமன்னராக அமைச்சர் நேரு இருந்து வருகிறார். அவருக்கு எதிர் துருவமாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இருக்கிறார். அமைச்சர் நேருவுக்கும் திருச்சி சிவாவுக்கும் எப்போதுமே ஏழாம் பொருத்தம்தான். அமைச்சர் நேரு vs திருச்சி சிவா என்று ஊடகங்களிலும் இரு தரப்பு மோதல் தலைப்புச் செய்தியாக இடம் பிடித்து திமுக தலைமையை நெருக்கடிக்குள்ளாக்கியிருந்தது.
திருச்சி சிவாவுக்கு முட்டுக்கட்டை
திமுகவில் சீனியர்களில் ஒருவராக இருந்த போதும், ஆற்றல் மிகுந்த அறிவாளராக இருந்த போதும் கட்சி உயர்நிலைப் பதவிகளில் திருச்சி சிவா ஏற்றம் பெறுவதற்கு அமைச்சர் நேரு எப்போதும் முட்டுக்கட்டையாகவே இருந்து வந்துள்ளார்.
எப்பவோ கிடைக்க வேண்டிய பொறுப்பு
திமுகவின் துணைப் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து சுப்புலட்சுமி ஜெகதீசன் விலகிய போது, அந்த இடத்துக்கு கொள்கை பரப்புச் செயலாளரான திருச்சி சிவாவின் பெயர் அடிபட்டது. ஆனாலும் கனிமொழி எம்பிக்கு கட்சியின் உயர்நிலைப் பொறுப்பு ஒன்று தரப்பட வேண்டிய நெருக்கடியால் திமுக தலைமை திருச்சி சிவாவுக்கு அந்த வாய்ப்பைத் தரவில்லை. ஆனாலும் திருச்சி சிவா மனம் தளராமல் தமக்கான பணியை சிறப்பாகவே செய்து வந்தார்.
கண்டு கொள்ளாத முதல்வர் ஸ்டாலின்
இது ஒரு புறம் இருக்க.. அண்மையில் அமைச்சர் நேருவை சுற்றி வளைத்திருக்கிறது அமலாக்கத்துறை. அமைச்சர் நேரு, அவரது தம்பி உள்ளிட்டோர் அமலாக்கத்துறையின் விசாரணையில் சிக்கி இருக்கின்றனர். திமுகவில் என்னதான் சீனியராக இருந்தாலும், அவரது அதிமுக மற்றும் டெல்லி தொடர்புகள் குறித்த சர்ச்சை அரசல் புரசலாகவே பேசப்பட்டு வந்தது. இந்த அரசல் புரசலான பேச்சுகளே அமைச்சர் நேரு குடும்பத்துக்கு பூமராங் போல திருப்பித் தாக்கிக் கொண்டிருக்கிறது என்கின்றன அரசியல் வட்டாரங்கள். இதனை எல்லாம் உணர்ந்ததால்தான், அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரத்தில் கோபத்தைக் காட்டிய திமுக தலைமை, அமைச்சர் நேரு விவகாரத்தில் கண்டுகொள்ளாமலேயே கடந்தும் போனது எனவும் கூறப்படுகிறது.
ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்த ஸ்டாலின்
இந்த தருணத்தில் பொன்முடி விவகாரம் விஸ்வரூபம் எடுக்க ஒரே கல்லில் 2 மாங்காய் அடித்திருக்கிறார் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின். எப்போதும் தமக்கு சர்ச்சைகளையே பரிசாக தரும் அமைச்சர் பொன்முடியின் கட்சிப் பதவியை பறிக்கும் அறிவிப்பை தாமே வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின். அதே சூட்டோடு, திமுகவின் துணைப் பொதுச்செயலாளராக, கொள்கை பரப்புச் செயலாளர் என்கிற பத்தோடு பதினொன்று பதவியில் இருந்த திருச்சி சிவா எம்பியையும் நியமித்துவிட்டார் முதல்வர் ஸ்டாலின்.
நேருவின் ஆடுபுலி ஆட்டம் அடங்குகிறது
இதனால் திருச்சியில் அமைச்சர் நேருவுக்கு எதிரான தரப்பு குறிப்பாக திருச்சி சிவாவின் ஆதரவாளர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். திருச்சியில் இதுநாள் வரை தனிக்காட்டு ராஜாவாக வலம் வந்து கொண்டிருந்த அமைச்சர் நேருவின் 'ஆடுபுலி' ஆட்டத்தை அடக்கும் வகையில், தற்போது அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி ஒரு பக்கம்.. இன்னொரு பக்கம் திருச்சி சிவா எனும் திமுக துணைப் பொதுச்செயலாளர் களத்தில் நிற்கின்றனர். தற்போதைய திமுக நிகழ்வுகள், பொன்முடிக்கு முடிவு கட்டக் கூடியது மட்டுமல்ல. திருச்சியின் மாமன்னராக நினைத்துக் கொண்டிருக்கும் அமைச்சர் நேருவுக்கும் வேட்டு வைக்கக் கூடியதுதான் என்கின்றன அறிவாலய சீனியர் வட்டாரங்கள்.












Click it and Unblock the Notifications