பி.இ, பி.டெக் "மவுசு" போனது.. கலந்தாய்வு முடிந்தும் 50,000 இடங்கள் காலி.. ஆர்வம் காட்டாத மாணவர்கள்
சென்னை: தமிழ்நாட்டில் நடப்பு கல்வியாண்டின் பி.இ., பி.டெக் படிப்புக்கான 3ம் சுற்று கலந்தாய்வு முடிந்த நிலையில், 50,000 இடங்கள் காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பொறியியல் கல்வி மீதான ஆர்வம் தொடர்ந்து குறைந்துகொண்டே வரும் நிலையில், சமீபத்தில் நடந்த பி.இ., பி.டெக் படிப்புக்கான 3ம் சுற்று கலந்தாய்வு முடிவுகள் இதனை பிரதிபலித்துள்ளன. தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் பி.இ., பி.டெக் படிப்பில் சேர, கடந்த மே மாதம் 5ம் தேதி முதல் ஜூன் மாதம் 4ம் தேதி வரையில் விண்ணப்பம் பெற்று, தரவரிசைப் பட்டியல் கடந்த ஜூன் மாதம் 22ம் தேதி வெளியிடப்பட்டன.

இந்தக் கலந்தாய்வில் பங்கேற்பதற்கு 1,76,744 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்ட தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்த ஆண்டு பொறியியல் கலந்தாய்விற்கு, இதுவரையில் 442 கல்லூரிகளில் உள்ள 2,19,346 இடங்களில் ஒற்றைச் சாளர முறையில் 1,60,783 இடங்கள் கலந்தாய்வின் மூலம் நிரப்பப்பட உள்ளன. அதனைத் தொடர்ந்து, சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வில் 385 விளையாட்டு வீரர்களுக்கும், 163 மாற்றுதிறனாளிக்கும், 137 முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகளுக்கும் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டன.
முதல் கட்ட பொது கலந்தாய்வில் 16,064 இடங்களும், 2ம் சுற்று கலந்தாய்வில் 40,741 இடங்களும் நிரம்பின. இந்நிலையில் 3ம் கட்ட கலந்தாய்வு நடைபெற்ற நிலையில், 55,000 இடங்கள் காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல 11 கல்லூரிகளில் ஒரேயொரு மாணவர் கூட சேரவில்லை. 263 கல்லூரிகளில் 50 சதவிகிதத்திற்கும் குறைவான மாணவர்களே சேர்ந்துள்ளனர். 61 கல்லூரிகளில் 10%க்கும் குறைவான மாணவர்களும், 37 கல்லூரிகளில் ஒற்றை இலக்கத்திலும்தான் மாணவர்கள் சேர்ந்திருப்பதாக தொழில்நுட்ப கல்வி இயக்குநரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிய வந்துள்ளது.
ஒவ்வொரு கல்வியாண்டிலும் சராசரியாக 50,000 - 75,000 காலியிடங்கள் இருந்து வருகிறது. நடப்பாண்டில் 50-75 கல்லூரிகளில் மட்டுமே முழுமையான இடங்கள் நிரம்பியுள்ளன. கடந்த ஆண்டில் 25 கல்லூரிகளில் இதேபோல ஒரேயொரு மாணவர் கூட சேரவில்லை. அதற்கு முன்னதாக 2021ம் ஆண்டில் 20 கல்லூரிகளுக்கு இதே நிலைமைதான். கல்லூரிகளின் உள்கட்டமைப்பு, வேலை வாய்ப்புக்கான சூழல் போன்றவற்றை கணக்கில் கொண்டுதான் மாணவர்கள் கல்லூரிகளை தேர்ந்தெடுக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications