பாஜக டூ நாதக.. போலீஸ் ஸ்டேஷனில் நடந்த சம்பவம்.. 1 ஆண்டில் நாதகவில் டாப் பொறுப்பை பெற்ற வீரப்பன் மகள்
சென்னை: நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளராக வீரப்பன் மகள் வித்யாராணி நியமனம் செய்யப்பட்டுள்ளார். அண்மையில் நடிகை பாலியல் வழக்கு தொடர்பான விசாரணைக்காக நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் காவல் நிலையத்தில் ஆஜராகினார். அப்போது காவல் நிலையத்திற்குள் அனுமதிக்க வேண்டும் என்று வித்யாராணியும் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
சந்தன கடத்தல் வீரப்பன் மகள் வித்யா வீரப்பன் கடந்த சில ஆண்டுகளாகவே அரசியல் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். முதலில் பாமகவில் இருந்து அரசியல் பணிகளில் ஈடுபட்டு வந்த அவர், 2020ல் பாஜகவில் இணைந்தார். அதுமட்டுமல்லாமல் பாஜகவில் இணைந்த அவருக்கு, மாநில ஓபிசி அணியின் துணைத் தலைவர் பொறுப்பு அளிக்கப்பட்டது.

இதன்பின் பாஜகவில் இருந்த அவர், திடீரென கடந்த ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கிருஷ்ணகிரி தொகுதியின் நாதக வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். பாஜகவில் இருந்தவரை, நாம் தமிழர் கட்சி வேட்பாளராக அறிவித்தது பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தியது. இதன்பின் நாம் தமிழர் கட்சிக்காக தொடர்ந்து அரசியல் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை சித்தப்பா என்று அழைத்து பலருக்கும் ஆச்சரியம் கொடுத்தார். இந்த நிலையில் கட்சியில் சேர்ந்து ஓராண்டு கூட நிறைவடையாத சூழலில், வித்யாராணிக்கு நாதகவில் முக்கிய பதவி அளிக்கப்பட்டுள்ளது. அண்மையில் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜரானார்.
அப்போது சீமானுடன் தானும் காவல் நிலையத்திற்குள் செல்வேன் என்று வித்யாராணி போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது அவர், ஒரு தனிமனிதனை அரசியல் செய்யவிடாம இப்படி பண்றீங்க.. எங்கப்பனை ஒழிச்சீங்க.. அடுத்த தலைமுறை தமிழன் வந்தா அவரை ஒழிக்க ஆயிரம் வழி தேடுவீங்களா? நான் என்ன வெடிகுண்டு, துப்பாக்கியா வைத்திருக்கிறேன்..
எங்கப்பாவோட அந்த சகாப்தம் முடிந்து போய்விட்டது.. யார் மக்கள் பிரச்சனையை பேசுறாங்கன்னு கண்ணுக்கு தெரியலையா? இந்த உயிர் உடம்பில் இருக்கும் வரை மக்களுக்காக நின்றே தீருவேன் என்று பேசிய வார்த்தைகள் சோசியல் மீடியாவில் மிகப்பெரிய அளவில் ட்ரெண்டாகியது. இந்த நிலையில் வித்யாராணிக்கு நாதக மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் பதவி அளிக்கப்பட்டுள்ளது.
சில வாரங்களுக்கு முன்பாக நாதகவில் இருந்து மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளரான வழக்கறிஞர் ஞானசேகரன் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அந்த பொறுப்பு வீரப்பன் மகள் வித்யாராணிக்கு அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் 3 கட்சிகள் மாறியுள்ள வித்யாராணிக்கு முக்கிய பொறுப்பு அளிக்கப்பட்டிருப்பது அக்கட்சியினர் மத்தியில் விவாதமாகி இருக்கிறது.












Click it and Unblock the Notifications