சீமானிடம் விசாரணை நிறைவு- 'வெள்ளிக்கிழமை' கைது பயத்தை காட்டிய போலீஸ்..பதறிய நாம் தமிழர் நிர்வாகிகள்!
சென்னை: நடிகையை பலாத்காரம் செய்தது, கட்டாய கருக்கலைப்புக்குள்ளாக்கியது வழக்கில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் சுமார் 1.15 மணிநேரம் போலீசார் துருவித் துருவி விசாரணை நடத்தினர். சீமானிடன் வெள்ளிக்கிழமை பின்னிரவு போலீசார் விசாரணை நடத்தியதால் அவர் கைது செய்யப்படலாம் என்கிற அச்சத்தில் பெரும் திரளாக நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் திரண்டதால் வளரசரவாக்கத்தில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. ஆனால் சீமான் விசாரணைக்குப் பின்னர் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
நடிகை தொடர்ந்த பலாத்கார வழக்கை ரத்து செய்ய கோரி சீமான் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் டிஸ்மிஸ் செய்தது. இம்மனுவை டிஸ்மிஸ் செய்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி இளந்திரையன், சீமான் மீதான புகார் தீவிரமானது; இதனால் போலீசார் விசாரிக்க அதிகாரம் உண்டு; 12 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டார்.

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படியே, போலீசார் பெங்களூர் சென்று நடிகையிடம் 3 மணிநேரம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றனர். அப்போது சீமானுக்கு எதிராக புதிய ஆதாரங்களை நடிகை கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் சென்னை வளசரவாக்கம் போலீசார் சீமானை விசாரணைக்கு வரவழைக்க சம்மன் அனுப்பினர். ஆனால் தாம் விசாரணைக்கு ஆஜராக 4 வார அவகாசம் தர வேண்டும் என்றார் சீமான். இதனை நிராகரித்த வளசரவாக்கம் போலீசார், உடனே விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்டு அவரது வீட்டில் நேரடியாக சம்மன் கொடுக்க சென்றனர். அப்போது சீமான் வீட்டு சுவரில் இந்த சம்மன் ஒட்டப்பட்டது. இதனை சீமான் மனைவி கயல்விழி கிழித்து எறிய சொன்னார். இதனடிப்படையில் சம்மன் கிழிக்கப்பட்டது. இது தொடர்பாக சீமான் வீட்டு காவலாளர் மற்றும் சம்மனை கிழித்த நபர் இருவர் கைது செய்யப்பட்டனர்.
இதனிடையே செய்தியாளர்களை தொடர்ந்து சந்தித்து வரும் சீமான், சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் இன்று ஆஜராக இருக்கிறேன்; நடிகைக்குமாதம் ரூ. 50,000 கொடுக்கப்பட்டது. நடிகையின் ஒப்புதல் இல்லாமலா உடலுறவு வைத்துக் கொள்ள முடியும்? சோளக்காட்டுக்கு தூக்கிச் சென்று பலாத்காரம் செய்யவில்லை; ஒரு ஆண்டுக்கு 7 முறை கருக்கலைப்பு செய்த ஒரே சாதனையாளன் நான் என்றெல்லாம் பேட்டி கொடுத்து புது புது சர்ச்சைகளில் சிக்கியிருக்கிறார். சீமானின் இந்த பேட்டிகள் முழுவதும் ஒப்புதல் வாக்குமூலமாகவே போலீஸ் தரப்பில் பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் சீமான் சென்னை வளசரவாக்கம் காவல்நிலையத்தில் இன்று இரவு ஆஜரானார். அவரிடம் போலீசார் 53 கேள்விகளுடன் விசாரணை நடத்தினர். சீமான் வெள்ளிக்கிழமை பின்னிரவு மிகவும் தாமதமாக விசாரிக்கப்பட்டார். வெள்ளிக்கிழமை இரவு 10 மணி முதல் நள்ளிரவு 11.15 மணிவரை சீமானிடம் இந்த விசாரணை நடைபெற்றது.
பொதுவாக மிக முக்கிய கைது நடவடிக்கைகள் வெள்ளிக்கிழமை- நள்ளிரவை தாண்டி மேற்கொள்ளப்படுவது வழக்கம் என்பதால் சீமானும் வெள்ளிக்கிழமை நள்ளிரவில் கைது செய்யப்படலாம் என்கிற அச்சம் நாம் தமிழர் கட்சியினரிடம் ஏற்பட்டது. இதனால் அந்த நள்ளிரவிலும் நாம் தமிழர் கட்சியினர் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் திரண்டிருந்ததால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது. ஆனால் சீமான் விசாரணையின் போது கைது செய்யப்படவில்லை. அவர் சுமார் 1.15 மணிநேர விசாரணைக்குப் பின் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.












Click it and Unblock the Notifications