சீமான் அண்ணே.. இப்படியே செஞ்சுகிட்டு இருந்தீங்க ரொம்ப ஆபத்தாகிடும்.. எச்சரித்த மாஜி தம்பி 'வெற்றி'
சென்னை: நாம் தமிழர் கட்சிக்காக உழைத்த பலரை தொடர்ந்து கட்சியில் இருந்து நீக்குவது பெரும் ஆபத்தாக முடியும் என அக்கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஒருங்கிணைப்பாளர் வெற்றிக்குமரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் ஒவ்வொரு செய்தியாளர் சந்திப்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் வலதுகரமாக நின்றவர் வெற்றிக்குமரன். ஆனால் திடீரென சீமானுடனான நிகழ்ச்சிகளில் வெற்றிக்குமரன் காணாமல் போனார். ஒரு கட்டத்தில் நாம் தமிழர் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்காமலேயே ஒதுங்கியே இருந்துவிட்டார் வெற்றிக்குமரன்.

பின்னர் திடீரென ஒருநாள் வெற்றிக்குமரன் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாகவும் சீமான் அறிவித்தார். ஆனாலும் சீமானுக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை வைக்காமல் அமைதியாக தவிர்த்தும் வந்தார்.
இந்நிலையில் இன்று வெற்றிக்குமரன் தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது கட்சி தொடர்பாக பதிவுகள் போடவே கூடாது
என்றுதான் இருந்தேன். ஆனால் சமீபத்தில் நடந்துகொண்டிருப்பவைகளை பார்க்கும்போது பெரும் வேதனையாக இருக்கிறது. காரணமே இல்லாமல் 14 ஆண்டுகளாக கட்சிக்கு உழைத்தவர்களை கட்சியின் அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்குவது வாடிக்கையாகி விட்டது.

இன்று நீக்கப்பட்டு இருக்கிற பரமக்குடி தொகுதியைச் சேர்ந்த தம்பிகள் ஜஸ்டின் வளனரசு, அருள் விக்டர், கார்த்திகன், பெருங்கரை பாலா ஆகியோர் கடினமான உழைப்பாளிகள். கொள்கை உறுதி கொண்டவர்கள். 12 ஆண்டுகளாக கட்சியை வளர்த்தவர்கள். அண்ணன் சீமான் அவர்களை உயிருக்கு நிகராக நேசிப்பவர்கள்.
பின் ஏன் இந்த நீக்கம்? ஒருவேளை, தவறேதும் செய்திருந்தால்கூட அழைத்துக் கண்டித்தால் திருத்திக்கொள்ளக் கூடியவர்கள்தான் இந்த தம்பிகள். கட்சிக்கு உழைத்தவன் என்ற அக்கறையில் சொல்கிறேன்... இந்த மாதிரியான அனுகுமுறை கட்சியின் வளர்ச்சிக்கு பெரும் ஆபத்து.. கவனத்தில் கொள்க. இவ்வாறு வெற்றிக்குமரன் எச்சரித்துள்ளார்.












Click it and Unblock the Notifications