பல்க்காக வாக்குகளை அள்ளும் சீமான்.. இதான் பலம்? சாதி+இமேஜ்.. பிளஸ்ஸாக மாறும் மைனஸ்.. அலசும் ப்ரியன்!
இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கான வாய்ப்புகள் பற்றி அலசுகிறார் மூத்த பத்திரிகையாளர் ப்ரியன்.
சென்னை : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ், அதிமுக வேட்பாளர்களுக்கு அடுத்ததாக, கவனம் பெற்றுள்ளார் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் மேனகா நவநீதன். இந்நிலையில், இந்த இடைத்தேர்தலில் நாதகவின் பலம் - பலவீனம் - வாய்ப்புகள் பற்றி ஒன் இந்தியா தமிழுடன் விவாதித்திருக்கிறார் மூத்த பத்திரிகையாளர் ப்ரியன்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் கடந்த 2021-ஆம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் 11 ஆயிரத்து 629 வாக்குகளைப் பெற்றார். இந்த இடைத்தேர்தலில், இந்த வாக்கு சதவீதம் உயருமா? நாம் தமிழர் வேட்பாளர் பிரிக்கும் வாக்குகள் யாருக்கு சேதாரத்தை ஏற்படுத்தும்? என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஈரோடு கிழக்கில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வரும் சூழலில், அவரது வேட்பாளரின் பலம், பலவீனம் அவருக்கான வாய்ப்புகள் பற்றிய Swot Analysis:

நாதக பலம்
1. தொடர்ச்சியாக தேர்தல்களில் களம் காண்பது சீமான் மீது உருவாக்கி வைத்திருக்கும் பாசிட்டிவ் இமேஜ்.
2. ஈரோடு கிழக்கு தொகுதியில் பெரும்பான்மையாக இருக்கும் முதலியார் சமூகத்தைச் சேர்ந்தவர் வேட்பாளராக்கப்பட்டிருப்பது.
3. 2021 பொதுத் தேர்தலில் ஈரோடு கிழக்கில் மூன்றாம் இடம் பிடித்தது.
4. முஸ்லீம் சிறைவாசிகள் விடுதலை போன்றவை குறித்த சீமானின் பேச்சுகளால் சிறுபான்மையினர் வாக்குகள் சாதகமாகலாம்.

பலவீனம்
1. திமுக, அதிமுகவை சாதி பார்த்து வேட்பாளரை நிறுத்தியதாக விமர்சிக்கும் சீமானே சாதி பார்த்து வேட்பாளரை நிறுத்தியதாக எழுந்திருக்கும் குற்றச்சாட்டு.
2. திமுகவை எதிர்ப்பதில் சீமான் உறுதியில்லாமல் இருக்கிறார் என்ற விமர்சனம். உதயநிதி சினிமா துறையை கைப்பற்றுவதாக விமர்சனம் எழுந்தபோதும் சீமான் அதைத் தவிர்த்தது.
3. இடைத்தேர்தலில் ஆளுங்கட்சிக்கு இருக்கும் சாதகமான சூழல்.
4. சீமானின் பேச்சுகளால் கிளம்பியிருக்கும் சர்ச்சை.

சீராக வளரும் நாதக
இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கான வாய்ப்புகள் பற்றிப் பேசியுள்ள மூத்த பத்திரிகையாளர் ப்ரியன், "நாம் தமிழர் கட்சி, தமிழ்நாட்டு அரசியலில் தங்களை வித்தியாசமாக காட்டிக்கொள்ளும் கட்சியாக மக்களுக்கு அறிமுகமானது. தமிழ் தேசிய சித்தாந்தத்தை முன்னிலைப்படுத்தி திராவிட அரசியலை எதிர்த்துக் களமாடி வருகின்றனர். நாம் தமிழர் கட்சிக்கான ஆதரவு ஒவ்வொரு தேர்தலுக்கும் வளர்ந்து வருவதைப் பார்க்கிறோம். திட்டமிட்ட நிலையான ஆர்கானிக் வளர்ச்சியாக இருப்பதைப் பார்க்கிறேன். 2016 சட்டமன்றத் தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட்ட நாதக 2 ஆயிரத்துச் சொச்சம் வாக்குகள் கிடைத்தன. 2019 நாடாளுமன்றத் தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதிக்குள் மட்டும் 5 ஆயிரம் வாக்குகள் பெற்றுள்ளது. 2021ல் அது சுமார் 11 ஆயிரம் வாக்குகளாக வளர்ந்திருக்கிறது. இது ஒரு குறிப்பிட்ட தொகுதியில் நாதகவின் வளர்ச்சியைக் காட்டுகிறது. கடந்த 3 தேர்தல்களில் ஈரோட்டில் பெண்களை வேட்பாளரை நிறுத்தி இருக்கிறார் சீமான். தற்போதைய வேட்பாளர் மேனகா நவநீதன் அந்தப் பகுதியில் செல்வாக்காக இருக்கும் சமூகத்தைச் சேர்ந்தவர்.

பாஜக பி டீம்?
ஒரு அரசியல் கட்சி ஒவ்வொரு தேர்தலிலும் பங்கு கொள்வதுதான் அக்கட்சியை உயிரோட்டமாக வைத்திருக்கும் விஷயம். புறக்கணிப்பது, ஒதுங்கி நிற்பதெல்லாம் நீண்டகால நோக்கில் எதிர்கால அரசியலுக்கு பலனளிக்காது. வெற்றி தோல்வி பற்றி கவலைப்படாமல் தேர்தலில் களமிறங்கி, தமிழ் தேசியத்தை முன்வைப்பது, திராவிட அரசியல் மீது கூர்மையான விமர்சனத்தை மக்கள் முன் வைப்பதன் மூலமாக தேர்தலை நன்கு பயன்படுத்திக் கொள்கிறார் சீமான். இளைஞர்கள் மத்தியில் சீமானின் பேச்சுகள் எடுபட்டிருக்கிறது என்பதைப் பார்க்கிறோம். சீமான் பாஜகவின் பி டீம் என எதிர்க்கட்சிகள் விமர்சனங்களை வைக்கின்றன. சீமான் திராவிட அரசியலோடு, பாஜகவின் இந்துத்துவ அரசியலையும் கடுமையாகவே விமர்சித்து வருகிறார். ஒவ்வொரு தேர்தலையும், தனது கட்சியை சீராக வளர்ப்பதற்கான வாய்ப்பாக சீமான் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்." எனத் தெரிவித்துள்ளார்.

சாதி பார்த்து வேட்பாளர்?
கேள்வி : முதலியார் சமூகத்தைச் சேர்ந்த வேட்பாளரை களமிறக்கியிருப்பது சீமானுக்கு கைகொடுக்குமா?
ப்ரியன் : சீமான், சாதி ஓட்டுகளை எதிர்பார்த்து நிறுத்தியிருப்பதாக நான் நினைக்கவில்லை. நாதக வேட்பாளர் மேனகா நவநீதன் யதேச்சையாக செங்குத்த முதலியார் வகுப்பைச் சேர்ந்தவர் என்பதால் அந்தமாதிரியான எண்ணம் நமக்குத் தோன்றுகிறது. ஆனால், அதை முன்னிட்டே அவர் நிறுத்தப்பட்டிருப்பதாகத் தோன்றவில்லை. சாதிகளை எல்லாம் தாண்டி இளைஞர்களை கட்சியை நோக்கி இழுக்கும் நோக்கமுள்ள சீமான், சாதி ரீதியான பலத்தை மனதில் வைத்து வேட்பாளரை நிறுத்தியிருக்க மாட்டார் என்பது எனது கருத்து.

எதிரொலிக்குமா?
கேள்வி : 2021 தேர்தலில் நாதக மூன்றாவது இடம் பிடித்தது இந்த இடைத்தேர்தலில் எதிரொலிக்குமா? ஏனெனில், பொதுத் தேர்தல் முடிவுகள் இடைத்தேர்தலில் எதிரொலிக்காததை நாம் பார்த்து வருகிறோம். ஆர்கே நகர் இடைத்தேர்தலில் டெபாசிட் இழந்த திமுக அதன்பிறகு அனைத்து தேர்தல்களிலும் ஆர்கே நகரில் அதிக வாக்குகளைப் பெற்றுள்ளது..
ப்ரியன் : பொதுவாகவே பொதுத் தேர்தல் முடிவுகள், இடைத்தேர்தலில் எதிரொலிப்பதில்லை. இப்போது இருக்கும் சூழலில் இந்த இடைத்தேர்தல் ஆளுங்கட்சிக்கு சாதகமாகவே இருக்கிறது. ஆளுங்கட்சி கூட்டணி வேட்பாளர் தேர்ந்தெடுக்கப்பட்டால் தொகுதிக்கு நல்ல திட்டங்கள் கிடைக்கும் என்ற எண்ணவோட்டம் இருக்கலாம். அதேசமயம், எதிர்க்கட்சிகள் அரசின் குறைகள், செய்யத் தவறிய விஷயங்களைச் சுட்டிக்காட்டி வாக்கு சேகரிப்பார்கள். நாதகவை பொறுத்தவரை 2021 தேர்தலை விட அதிகமான வாக்குகளைப் பெறும் வாய்ப்பும் இருக்கிறது.

சிறுபான்மையினர் ஆதரவு?
கேள்வி : சீமானுக்கு சிறுபான்மையினர் வாக்குகள் செல்ல வாய்ப்புள்ளதா?
ப்ரியன் : இஸ்லாமிய சிறைவாசிகள் விடுதலை தொடர்பாக கடந்த தேர்தலின்போது திமுக வாக்குறுதி அளித்தது. திமுக ஆட்சிக்கு வந்தால் நீண்டகாலமாக சிறையில் இருக்கும் இஸ்லாமியர்கள் விடுவிக்கப்படுவார்கள் என பலரும் நம்பினார்கள். அது நடக்க இன்னும் தாமதம் ஆகிறது. இது பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மத்தியில் உறுத்தலாகவே இருக்கிறது. எனினும், திமுக இஸ்லாமியர்களுக்கு ஆதரவான கட்சி என்ற நிலைப்பாடே இருக்கிறது. ஒட்டுமொத்தமாக திமுக மீது இஸ்லாமியர்களின் எதிர்ப்பலை இல்லை. அதேசமயம், திமுக மீது நம்பிக்கையற்ற இஸ்லாமியர்களின் வாக்குகள் பாஜக கூட்டணிக்குச் செல்வதை விட சீமானுக்குச் செல்லவே வாய்ப்பு அதிகம். ஈரோடு கிழக்கில் உள்ள சுமார் 17% இஸ்லாமியர் வாக்குகளில் ஓரிரு சதவீத வாக்குகளை நாதக வாங்க வாய்ப்பிருக்கிறது.

விமர்சனம் எடுபடுமா?
திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் ஒவ்வொரு தொகுதியிலும் சாதி பார்த்து, பெரும்பான்மை வாக்கு வங்கி உள்ள வேட்பாளரகளையே நிறுத்துவதாக தொடர்ச்சியாக சீமான் விமர்சித்த நிலையில் அவரே, ஈரோடு கிழக்கில் பெரும்பான்மையான சமூகத்தைச் சேர்ந்த வேட்பாளரை நிறுத்தியிருப்பது, அவர் மீதான விமர்சனமாக எழுந்திருக்கிறதே.. அது எடுபட வாய்ப்பிருக்கிறதா?
ப்ரியன் : நாதக வேட்பாளர் மேனகா நவநீதன், கட்சியில் பொறுப்பில் இருப்பவர், படித்தவர் என்ற அடிப்படையிலேயே அவரை வேட்பாளராக நிறுத்தியதாக நான் கருதுகிறேன். பெரும்பான்மை சமூகம் என்ற காரணத்திற்காகவே அவரை நிறுத்தியதாக நான் நினைக்கவில்லை. செங்குந்த முதலியார் சங்கத்தின் தலைவர் திமுகவுக்கு ஆதரவளிப்போம் என அறிவித்திருக்கிறார். எனவே, சமூக ஆதரவு வேண்டி அவர் நிறுத்தியிருப்பதாகத் தெரியவில்லை. எனவே இந்த விமர்சனம் களத்தில் எடுபடுவதற்கும் வாய்ப்பில்லை.

திமுக உடன் இணக்கம்?
மேலும் பேசியுள்ள பத்திரிகையாளர் ப்ரியன், "உதயநிதி ஸ்டாலின் பெரும்பாலான திரைப்படங்களை வெளியிடுவது பற்றி சர்ச்சை எழுந்தபோது, உதயநிதியை சீமான் விமர்சிக்கவில்லை என்பது சீமான் சினிமாவில் புழங்கும் நபர் என்பதால், அத்துறையில் உதயநிதி ஸ்டாலின் செயல்பாடுகள் சாதகமான விளைவுகளை ஏற்படுத்தியிருப்பதாகக் கருதியிருக்கலாம். உதயநிதியின் செயல்பாடுகள் தயாரிப்பாளர்களுக்கோ, விநியோகஸ்தர்களுக்கோ பாதிப்பை ஏற்படுத்தியிருந்தால் சீமான் குரல் கொடுத்திருப்பார். சினிமா துறை எப்படி இயங்குகிறது, உதயநிதியின் டிஸ்ட்ரிபியூஷன் நல்ல தாக்கத்தை கொடுத்திருக்கிறதா என்பது பற்றியெல்லாம் அறிந்தே அவர் உதயநிதியை விமர்சிக்காமல் இருந்திருக்கலாம். அதற்காகவே, சீமானுக்கும் உதயநிதிக்கும் இடையே லிங்க் இருக்கலாம் என கற்பனை செய்வது தவறு.

சீமான் ஆக்ரோஷம் - பிளஸ்ஸாம மாறும் மைனஸ்
கருணாநிதி பேனா நினைவுச் சின்னத்திற்கு எதிராக கடுமையாகப் பேசுகிறார் சீமான். திமுக அரசு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் இருப்பது பற்றியும் தொடர்ச்சியாக கேள்வி எழுப்பி வருகிறார் சீமான். அடிப்பேன், உடைப்பேன் என சீமான் ஆக்ரோஷமாக பேசும் விஷயங்கள் அவரைப் பற்றி நடுநிலையாளர்கள் அதிருப்தி எழுப்பும் விஷயங்களாக இருக்கிறது. ஆனால், அவரது கட்சியில் இருக்கும் இளைஞர்களுக்கு அது பாதிப்பாக இல்லை. எவ்வளவு தைரியமாக பேசுகிறார் என்ற வகையில் காம்ப்ளிமெண்ட்டாகவே அதனைப் பார்க்கிறார்கள்." எனத் தெரிவித்துள்ளார்.
-
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்! -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
வில்லிவாக்கத்தில் ட்விஸ்ட்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு அடிக்குமா ஜாக்பாட்? களம் எப்படி இருக்கிறது? -
தவெக ஆட்சிக்கு வந்த 6 மாதத்தில் தமிழ்நாடு சேவை உரிமை சட்டம்.. குமரியில் விஜய் அளித்த வாக்குறுதிகள் -
"கொஞ்ச நேரம்.." என கொஞ்சியபோது காதலில் விழாதவர் உண்டோ? ஆஷா போஸ்லேவின் மறக்க முடியாத தமிழ் பாடல்கள் -
ஈரான் விரித்த வலையில் ஈரானே சிக்கிடுச்சு.. அமெரிக்காவே கவலைப்படும் அளவிற்கு நிலைமை கைமீறியது -
மகளிர் உரிமைத் தொகை.. இன்னும் ஆட்டம் முடியல.. வரப்போகும் 2 ‘மெகா’ மாற்றங்கள்.. கவனிங்க! -
விட்டு விளாசிய பிடிஆர்! கோபத்தின் உச்சிக்கே போன குஷ்பு சுந்தர் சி.. மோதல் உச்சகட்டம்! என்ன நடக்குது? -
இஸ்லாமாபாத் டாக்ஸ்.. ட்ரம்ப் - ஈரான் டீல்.. இந்தியா மிஸ் செய்த சான்ஸ்? அடித்து தூக்கிய பாகிஸ்தான் -
அவ்ளோதான் முடிச்சுவிட்டீங்க போங்க.. ஒரே வரியில் தவெக பர்னிச்சரை சல்லி சல்லியாக்கிய ஸ்டாலின் -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
கோவை ஈஷா யோகா மையத்தில் எஸ்.பி.வேலுமணியுடன் பேசியது என்ன? உடைத்து பேசிய பிரேமலதா












Click it and Unblock the Notifications