தென்னகத்து ஜேம்ஸ்பாண்டுக்கு கவுரவம்.. ’ஜெய்சங்கர் சாலை’ ஆன ’கல்லூரி சாலை’! மகிழ்ச்சியில் குடும்பம்!
சென்னை: பழம்பெரும் நடிகர் ஜெய்சங்கர் வசித்த நுங்கம்பாக்கம் கல்லூரி சாலை பகுதிக்கு அவர் பெயரை சூட்ட வேண்டும் என அவரது மகனான விஜய சங்கர் கோரிக்கை விடுத்திருந்தார். இந்த நிலையில் நுங்கம்பாக்கம் 'கல்லூரி சாலை' இனி 'ஜெய்சங்கர் சாலை' என பெயர் மாற்றப்பட்டுள்ளதாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ் திரை உலகில் ஏராளமான நடிகர்கள் வந்து சென்றிருந்தாலும் ஒரு சிலரே இன்றும் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறார்கள். அப்படி ஒருவர் தான் ஜெய்சங்கர். ஹாலிவுட் ஹீரோக்களுக்கு இணையான தோற்றம், துணிச்சல், கம்பீரம் என அக்கால இளைய தலைமுறையால் கொண்டாடப்பட்டவர்.
காதல், செண்டிமெண்ட், ஆக்சன், ஸ்டைல் என அவரது திரைப்படங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக இருக்கும். எம்ஜிஆர் சிவாஜி திரை உலகை கட்டி ஆண்ட காலத்தில் அவர்களுக்கு இணையாக வளர்ந்து வந்தவர் ஜெய்சங்கர்.

நடிகர் ஜெய்சங்கர்
குறிப்பாக ஒரு குறுகிய வட்டத்திற்குள் அவர் தன்னை அடைத்துக் கொள்ளவில்லை. பட்டணத்தில் பூதம் வல்லவன் ஒருவன் உள்ளிட்ட படங்களில் காமெடி கேரக்டர்களில் நடித்திருப்பார். முரட்டுக்காளை, அருணாச்சலம் படங்களில் குணச்சித்திரம் வில்லன் என கலக்கி எடுத்தவர். தென்னகத்து ஜேம்ஸ்பாண்ட் என்ற பெயர் அவருக்கு இருக்கிறது. கௌபாய் திரைப்படங்களிலும் அதிகமாக நடித்தவர் தான் ஜெய்சங்கர். திரையுலகில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக நடித்த அவர் சில ஆண்டுகளுக்கு முன்பு காலமானார்.
விஜய் சங்கர்
இருந்த போதும் அவரை ரசிகர்கள் இன்று வரை நினைவு கூர்ந்து வருகின்றனர். இந்த நிலையில் ஜெய்சங்கரின் கலைப்பயணத்தை அங்கீகரிக்கும் வகையில் சென்னை மாநகராட்சியில் அவர் வசித்து வந்த கல்லூரி சாலை பகுதியை ஜெய்சங்கர் சாலை என மாற்ற வேண்டுமென அவரது மகன் விஜய் சங்கர் கோரிக்கை வைத்தார். பிரபலமான சங்கர் நேத்ராலயாவில் பேராசிரியராக விஜய் சங்கர் இருப்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை மாநகராட்சி
கடந்த ஆண்டு முதலமைச்சர் ஸ்டாலினிடம் விஜய் சங்கர் கோரிக்கை விடுத்திருந்த நிலையில் கடந்த முறை சென்னை மாநகராட்சி கூட்டம் நடைபெற்ற போது இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதை ஏற்ற தமிழ்நாடு அரசு சென்னை மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானத்தை அங்கீகரித்துள்ளதோடு அதற்கான அரசாணையையும் தற்போது வெளியிட்டு இருக்கிறது. இனி சென்னையில் கல்லூரி சாலை ஜெய்சங்கர் சாலை என அழைக்கப்படும்.
ஜெய்சங்கர் சாலை
1960 ஆம் ஆண்டு ஜோன்ஸ் சாலை என்ற அந்தப் பகுதிக்கு எம்ஜிஆர் கல்லூரி சாலை என பெயரிட்டு இருந்தார். தன் வாழ்நாள் முழுவதையும் அந்த சாலையில் உள்ள வீட்டில் ஜெய்சங்கர் கழித்த நிலையில் அவரது கலை உலக பங்களிப்பை போற்றும் வகையில் இனி அந்த சாலை ஜெய்சங்கர் சாலை என அழைக்கப்படும். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மறைந்த நடிகர் விவேக்கின் பெருமையை போற்றும் வகையில் அவர் வசித்த பகுதிக்கு விவேக் சாலை என பெயரிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.










Click it and Unblock the Notifications