அதிமுக பொதுக் குழு வழக்கு.. ஹைகோர்ட் தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் மேல்முறையீடு.. நாளை விசாரணை
சென்னை: அதிமுக பொதுக் குழுவும் அதில் எடுக்கப்பட்ட தீர்மானங்களும் செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை நாளை நடைபெறுகிறது.
அதிமுக பொதுக்குழு கடந்த ஆண்டு ஜூலை 11 ஆம் தேதி கூடியது. இதில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். அது போல் ஒற்றைத் தலைமையை எதிர்ப்பதாகவும் திமுகவுக்கு துணை போவதாகவும் கூறி ஓபிஎஸ் உள்ளிட்டோரை அதிமுகவிலிருந்து நீக்குவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
இதையடுத்து அதிமுக பொருளாளர் பதவி, எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவி பறிக்கப்பட்டு முறையே திண்டுக்கல் சீனிவாசனும் ஆர்.பி. உதயகுமாரும் நியமிக்கப்பட்டனர். இந்த நிலையில் அதிமுக பொதுக் குழு வழக்கை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பு வழக்கு தொடர்கிறது.

அதிமுக பொருளாளர்
அதில் தனி நீதிபதி அதிமுகவில் ஜூன் 23 க்கு முந்தைய நிலையே தொடரும் என தீர்ப்பளித்தார். இதை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பு மேல்முறையீடு செய்தது. அந்த மனுவை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு, அதிமுக பொதுக் குழு செல்லும் என அதிரடி தீர்ப்பை வழங்கின. இதை எதிர்த்து ஓபிஎஸ், பொதுக் குழு உறுப்பினரும் ஓபிஎஸ் ஆதரவாளருமான வைரமுத்து ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.

இரு விதமான தீர்ப்புகள்
அதில் இரு விதமான தீர்ப்புகளை உச்சநீதிமன்றம் வழங்கியது. அதில் ஒன்று ஜூலை 11 ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக் குழு கூட்டம் செல்லும் என்ற ஒரு தீர்ப்பும், அதிமுக பொதுக் குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பு மேல்முறையீடு செய்து கொள்ளலாம் என்ற தீர்ப்பும் நீதியரசர்களால் வழங்கப்பட்டது.

சென்னை உயர்நீதிமன்றம்
இதையடுத்து மீண்டும் இந்த வழக்கானது சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வந்தது. இந்த வழக்குடன் சேர்த்து அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலை எதிர்த்து மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் மனு தாக்கல் செய்தனர். இவை இரண்டையும் சேர்த்து உயர்நீதிமன்றம் விசாரணை நடத்தியது. இதில் அதிமுக தரப்பு, ஓபிஎஸ் தரப்பு, எடப்பாடி பழனிசாமி தரப்பு உள்ளிட்டோரின் வாதங்களை கேட்ட நீதிபதிகள் பொதுச் செயலாளர் தேர்தலை நடத்திக் கொள்ளலாம். ஆனால் அதன் முடிவுகளை அறிவிக்க கூடாது என தடை விதித்தனர்.

அதிமுக பொதுக் குழு தீர்மானங்கள்
இந்த நிலையில் அதிமுக பொதுக் குழு தீர்மானங்களை எதிர்த்து தொடர்ந்த வழக்கில் இன்றைய தினம் நீதிபதி குமரேஷ் பாபு தலைமையிலான அமர்வு தீர்ப்பு வழங்கியது. அதன்படி பொதுக் குழு செல்லும், பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானங்களும் செல்லும். அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் எந்த தடையும் இல்லை என கூறி ஓபிஎஸ்ஸின் மனுவை தள்ளுபடி செய்தார். அது போல் பொதுச் செயலாளர் தேர்தலை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

ஓபிஎஸ் மேல்முறையீடு
மேலும் ஓபிஎஸ் மேல்முறையீடு செய்து கொள்ளலாம் என்றும் தீர்ப்பளிக்கப்பட்டது. இதையடுத்து இந்த தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தார். அதன்படி இதன் மீதான விசாரணை நாளை நீதிபதிகள் மகாதேவன், முகமது சபீக் ஆகியோர் தலைமையில் நடைபெறுகிறது. இந்த நிலையில் அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார் என தேர்தல் முடிவுகள் அதிமுக தலைமை அலுவலகத்தில் அறிவிக்கப்பட்டன. இதனால் எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச் செயலாளரானார்.












Click it and Unblock the Notifications