மதுரையில் மாநாடு நடத்தும் எடப்பாடி பழனிச்சாமி.. அதே நாள்.. அதே நேரம்.. சென்னையில் கூடும் ஓபிஎஸ் அணி
சென்னை: எடப்பாடி பழனிசாமி மதுரையில் பிரம்மாண்டமாக அதிமுக மாநாடு நடத்தும் அதே நாள் மற்றும் அதே நேரத்தில் ஓ.பன்னீர்செல்வம் அணியினர் சென்னையில் ஆலோசனை கூட்டம் நடத்தப்போகின்றனர். கொடநாடு பங்களா கொலை, கொள்ளை குறித்த முக்கிய தகவலை அந்த நாளில் வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்ட பின் முதன்முதலாக மதுரையில் அதிமுக மாநாடு மிக பிரம்மாண்ட அளவில் நடத்த திட்டமிட்டு அதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மதுரை விமான நிலையம் அருகே உள்ள வலையங்குளம் பகுதியில் தனியார் கல்லூரிக்கு சொந்தமான இடத்தில் மாநாட்டு பந்தல் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

முகப்பு வாயிலில் அரண்மனை வாயில் போன்ற செட் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. தொடர்ந்து மாநாட்டில் ஒரே சமயத்தில் ஒரு லட்சம் பேர் அமர்ந்து பார்க்கக் கூடிய வகையில் பிரம்மாண்ட பந்தல் அமைக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மாநாட்டு பந்தலில் 60,000 சதுர அடியில் மேடை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில் முதற்கட்டமாக மேடைக்காக கான்கிரீட் தளம் அமைக்கும் பணி தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. எடப்பாடி பழனிச்சாமி பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்ட பின்பு நடைபெறும் முதல் மாநாடு என்பதால் அனைவரும் வியக்கும் வண்ணம் இந்த மாநாடு நடத்தப்பட வேண்டும் என அதிமுகவினர் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர்.
மாநாட்டு பந்தல் தவிர மாநாட்டில் கலந்து கொள்கிறவர்களுக்கு மூன்று வேளையும் சுவையான உணவு வழங்குவதற்கான ஏற்பாடுகளும், வாகனங்கள் நிறுத்துவதற்கான இடங்களும், முக்கியஸ்தர்கள் வாகனங்கள் நிறுத்துவதற்கான இடமும் தனித்தனியாக ஒதுக்கப்பட்டுள்ளது. லோக்சபா தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில் தொண்டர் பலத்தை காட்டும் வகையில் இந்த பிரம்மாண்ட மாநாடு மதுரையில் நடத்தப்பட உள்ளது.

இந்த சூழ்நிலையில் ஓ.பன்னீர் செல்வமும் அதே நாளில் புதிய புயல் ஒன்றை கிளப்பப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்களின் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் சென்னை வேப்பேரி, ரித்தர்டன் சாலையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. ஆடிட்டோரியத்தில் வருகிற 20ஆம் தேதி மாலை 6 மணிக்கு நடைபெற உள்ளது. அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமை தாங்குகிறார். அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என கூறப்பட்டுள்ளது.
ஓ.பன்னீர்செல்வம் வருகிற 20ம் தேதி மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டத்துக்கு பிறகு, கொடநாடு பங்களா கொலை, கொள்ளை மற்றும் அதிமுக முக்கிய நிர்வாகிகள் பற்றிய பல உண்மைகளை வெளியிட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒற்றை தலைமை விவகாரம் தொடங்கியதில் இருந்தே ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிச்சாமி இடையே பிளவு ஏற்பட்டது. அதிமுக நிர்வாகிகள் 90 சதவிகிதம் பேர் எடப்பாடி பழனிச்சாமி அணியின் பக்கம்தான் இருக்கின்றனர். இதனையடுத்தே அவர் அதிமுக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். பெரும் சட்டப்போராட்டத்திற்கு பிறகு வெற்றி பெற்ற எடப்பாடி பழனிச்சாமி தனது பலத்தை நிரூபிக்க மதுரையில் அதிமுக எழுச்சி மாநாடு நடத்துகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications