அடுத்து நேரா அங்கதான்.. பலமான திட்டத்தோடு காய்நகர்த்தும் ஈபிஸ், ஓபிஎஸ்.. தீர்ப்பு வந்ததும் இருக்கு!
சென்னை : அதிமுக பொதுக்குழு தொடர்பாக திங்கட்கிழமை வரவிருக்கும் தீர்ப்பைப் பொறுத்து எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள தயாராகி வருகின்றனர்.
ஓபிஎஸ்ஸை ஓரங்கட்டி, அதிமுகவின் பொதுச் செயலாளர் ஆவதற்கான முயற்சிகளில் கிட்டத்தட்ட வெற்றிக்கோட்டை எட்டி விட்டார் எடப்பாடி பழனிசாமி.
ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கில் சென்னை ஐகோர்ட் திங்கட்கிழமை காலை 9 மணிக்கு வழங்கவிருக்கும் தீர்ப்புக்காக இரு தரப்பினரும் எதிர்பார்ப்புகளோடு காத்திருக்கின்றனர்.

பொதுச் செயலாளர்
அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது முதல் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு பெருகி வருகிறது என்பதுதான் உண்மை. மாவட்ட செயலாளர்களில் பெரும்பாலானோர், பொதுக்குழு உறுப்பினர்களில் 90 சதவீதம் பேர் ஈபிஎஸ் ஆதரவு நிலைப்பாட்டில் உள்ளனர். பெரும்பாலான ஊர்களில் ஆலோசனைக் கூட்டம் நடத்தி எடப்பாடி பழனிசாமியை பொதுச் செயலாளர் ஆக்குவோம் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டு வருகிறது. பெருபான்மையான ஆதரவு நிர்வாகிகளை கையில் வைத்திருக்கும் எடப்பாடி பழனிசாமி எப்படியாவது பொதுச்செயலாளராகி விட வேண்டும் என்ற நோக்கில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.

ஓபிஎஸ் ஊரிலேயே ஸ்கெட்ச்
ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த மாவட்டமான தேனி மாவட்டத்தில் இருந்தே, எடப்பாடி பழனிசாமி பக்கம் தாவி வருகின்றனர் பொதுக்குழு உறுப்பினர்கள். இன்று தேனியைச் சேர்ந்த பொதுக்குழு உறுப்பினர்கள் 9 பேர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். தேனி மாவட்டத்தில் மொத்தமுள்ள 62 பொதுக்குழு உறுப்பினர்களில் 42 பேர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சொந்த ஊரிலேயே ஓபிஎஸ் பலம் இழந்து வருவது அவரது ஆதரவாளர்களிடையே சுணக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஓபிஎஸ் ஆலோசனை
பொதுக்குழுவுக்கு தடை கோரிய வழக்கில் திங்கட்கிழமை காலை தீர்ப்பு வரவிருக்கும் நிலையில், ஓ.பன்னீர்செல்வம், தனது ஆதரவு மாவட்ட செயலாளர்கள் வெல்லமண்டி நடராஜன், குன்னம் ராமச்சந்திரன் ஆகியோருடன் இன்று ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனையின்போது, பொதுக்குழு தொடர்பான வழக்கின் தீர்ப்பு எப்படி இருக்கும் என்பது குறித்து அலசியுள்ளனர். தொடர்ந்து, அடுத்தகட்ட நகர்வுகளுக்கு தயாராவது குறித்தும் சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தவும் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

ஓபிஎஸ் எதிர்பார்ப்பு
ஐகோர்ட்டில் நடைபெற்ற விசாரணையின்போது கட்சியின் தலைமைப் பதவிகள் தொடர்பாக அழுத்தமான வாதங்களை எடுத்து வைத்து, எடப்பாடி பழனிசாமி தரப்பே ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதி ஆகவில்லை எனச் சொல்ல வைத்திருப்பதால், முறையாக அழைப்பு விடுக்கப்படாத இந்த பொதுக்குழு செல்லாது என நீதிமன்ற உத்தரவு வரும் என ஓபிஎஸ் தரப்பு எதிர்பார்த்து வருகிறது.

ஈபிஎஸ் திட்டம்
அதேநேரம், எடப்பாடி பழனிசாமி தரப்பு திட்டமிட்டுள்ளபடி, உயர்நீதிமன்ற தீர்ப்பு தங்களுக்கு சாதகமாக வந்து அதிமுக பொதுக்குழு கூட்டம் ஜூலை 11ஆம் தேதி நடைபெற்றால், எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்படுவது உறுதி. மேலும், ஓ.பன்னீர்செல்வத்தை பொருளாளர் பதவியில் இருந்து தூக்கும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும் என்கிறது ஈபிஎஸ் தரப்பு. இதற்கு மேலும் ஓபிஎஸ்ஸை பொறுத்துக் கொண்டிருக்க ஈபிஎஸ் தயார் இல்லை என்கின்றனர் அவரது தரப்பினர்.

பன்னீர் பிளான்
அப்படி ஒருவேளை பொதுக்குழு வழக்கில் தங்களுக்கு சாதகமான முடிவு கிடைக்கவில்லை என்றால், இரட்டை இலை சின்னத்தை கைப்பற்றுவதற்கான சட்ட வழிவகைகளில் ஓபிஎஸ் ஈடுபடுவார் என்று கூறப்படுகிறது. இரட்டை இலை சின்னத்தைப் பொறுத்தவரை, ஓ.பி.எஸ்ஸுக்கு உரிமை உண்டு என்பது முந்தைய வழக்கிலேயே நிரூபணமானது. இதனால், கட்சி சின்ன விவகாரத்தில் ஓபிஎஸ் எடுக்கும் நடவடிக்கை அவருக்குச் சாதகமாக இருக்கும் என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications