சிஎம் ஸ்டாலின் அவர்களே.. மக்கள் மீது உண்மையிலேயே அக்கறை இருந்தால் இதை செய்யுங்கள் - ஓபிஎஸ் சவால்
சென்னை: ஆவின் நிறுவனத்தால் விநியோகிக்கப்படும் பச்சை நிற பால் பாக்கெட்டினை முற்றிலும் நிறுத்த முடிவெடுத்துள்ள தி.மு.க. அரசை கண்டிப்பதாக முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டு உள்ள அறிக்கையில், "தி.மு.க. அரசு ஆட்சிப் பொறுப்பேற்றவுடன், தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுகிறோம் என்று சொல்லி, ஆவின் பால் விலையை லிட்டருக்கு 3 ரூபாய் குறைத்தது. இவ்வாறு விலை குறைத்த சில மாதங்களுக்குள் ஆரஞ்ச் நிற பால் பாக்கெட்டின் விலை லிட்டருக்கு 12 ரூபாய் உயர்த்தப்பட்டது. தற்போது பச்சை நிற பால் பாக்கெட் விநியோகத்தையே நிறுத்த ஆவின் நிறுவனம் முடிவெடுத்துள்ளதாக பத்திரிகைகளில் வந்துள்ள செய்தி ஏழையெளிய மக்களிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், பச்சை நிற பால் பாக்கெட்டினை மக்கள் விரும்பவில்லை என்று மாண்புமிகு அமைச்சர் அவர்கள் கூறியிருப்பது முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பதற்கு சமம். ஆவின் நிறுவனத்தால் தற்போது விநியோகிக்கப்பட்டு வரும் பச்சை நிற பால் 4.5 விழுக்காடு கொழுப்பு சத்தினைக் கொண்டுள்ளது. சென்னையில், ஆவின் பாலினை வாங்கும் மொத்த வாடிக்கையாளர்களில் 40 விழுக்காடு வாடிக்கையாளர்கள் பச்சை நிற பாக்கெட் பாலினை வாங்கி வருகின்றனர்.
சாலையோரமாக டீக்கடை வைத்திருப்பவர்களும் பச்சை நிற பால் பாக்கெட்டினை தங்கள் தேவைக்கு வாடிக்கையாக வாங்கிக் கொண்டு வருகின்றனர். இந்த பச்சை நிற பால் பாக்கெட் விநியோகம் விலை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வந்திருந்த நிலையில், இதன் விற்பனையை இந்த மாதம் 25 ஆம் தேதி முதல் நிறுத்த ஆவின் நிறுவனம் முடிவெடுத்துள்ளதாக பத்திரிகையில் செய்தி வந்துள்ளது. இதற்குப் பதிலாக, 3.5 விழுக்காடு கொழுப்புச் சத்துக் கொண்ட ஊதா நிற பால் பாக்கெட் விநியோகிக்கப்படும் என்றும், இதன் அதிகபட்ச விலை ஒரு லிட்டர் 44 ரூபாய் என்றும் செய்திகள் வருகின்றன.
அதாவது, ஒரு விழுக்காடு குறைவான கொழுப்புச் சத்து கொண்ட ஊதா நிற பால் பாக்கெட்டின் விலையினை பச்சை நிற பால் பாக்கெட் விலைக்கு இணையாக விற்பனை செய்வது என்பது மறைமுகமாக பாலின் விலையை உயர்த்துவதற்குச் சமம். இந்த நடவடிக்கை நிறைவேற்றப்பட்ட வாக்குறுதியை பறிக்கும் நடவடிக்கை. தி.மு.க. அரசின் இந்தச் செயல் ஏழையெளிய மக்களை ஏமாற்றும் செயல்.
கடந்த இரண்டரை ஆண்டு கால தி.மு.க. அரசின் நடவடிக்கைகளை பார்க்கும்போது, மீதமுள்ள இரண்டரை ஆண்டுகளுக்குள் ஆவின் நிறுவனத்திற்கு தி.மு.க. அரசு மூடு விழா நடத்தி விடுமோ என்ற அச்சம் மக்களிடையே ஏற்பட்டுள்ளது. தி.மு.க. அரசின் இந்த மக்கள் விரோதச் செயல் கடும் கண்டனத்திற்குரியது. மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு உண்மையிலேயே மக்கள்மீது அக்கறை இருக்குமானால், பச்சை நிற பால் பாக்கெட் விற்பனை ரத்து என்ற முடிவினை கைவிட உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்." என்று குறிப்பிட்டு உள்ளார்.












Click it and Unblock the Notifications