பேக்கரி சூறை.. பெண்ணிடம் தகாத பேச்சு.. திமுக நிர்வாகிகளை கைது செய்ய ஓபிஎஸ் கோரிக்கை
சென்னை: "தஞ்சாவூர், சூரக்கோட்டையில் திமுக நிர்வாகிகள் பேக்கரியில் தகராறு செய்து பெண்ணிடம் தகாத முறையில் நடந்தது கண்டனத்திற்குரியது" என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
இதனிடையே முதல்வர் ஸ்டாலின் இதில் உடனடியாகத் தலையிட்டு, சூரக்கோட்டைப் பகுதியில் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை ஏற்பட காரணமாக இருந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார்
இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி துணை தலைவருமான ஓ பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தடுப்பூசி மையங்களிலும், நியாய விலைக் கடைகளிலும், கொரோனா பணியாளர் நியமனங்களிலும், காவல் துறையிலும் தங்களது ஆதிக்கத்தை செலுத்தி வந்த தி.மு.க.வினர், தற்போது. தனியாரிடமும் தங்களது அடாவடிச் செயலை மேற்கொண்டிருப்பது கண்டனத்திற்குரியது. இது போன்ற செயல், ஆங்காங்கே சட்டம்-ஒழுங்கை சீரழிக்க வழிவகுக்கும்.

தகராறு
தஞ்சாவூர், சூரக்கோட்டையைச் சேர்ந்த ஆனந்தன் என்பவர், மன்னார்குடி~ பட்டுக்கோட்டை பிரிவு சாலையில் பேக்கரி மற்றும் டீக்கடை நடத்தி வருவதாகவும், இந்தக் கடைக்கு மன்னார்குடி நகர தி.மு.க. இளைஞர் அணிச் செயலாளர் திரு. சுதாகர், விவசாயத் தொழிலாளர் அணி நகர அமைப்பாளர் திரு. பாண்டவர், மாணவரணி நகர துணைச் செயலாளர் திரு முருகேசன் உள்ளிட்ட எட்டு பேர் சென்ற தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது,

வன்முறை
மேலும் கடையில் இருந்த பெண்ணிடம் தகாத வார்த்தைகளைப் பேசி வன்முறை செய்ததாகவும், இதைத் தட்டிக் கேட்ட கடை உரிமையாளர் மற்றும் ஊழியர்களை, தி.மு.க.வினர் கடுமையாக தாக்கி, கடையில் இருந்த பொருட்களை சேதப்படுத்தியதாகவும், இந்தச் சம்பவத்தில் ஒரு பெண் உட்பட நான்கு ஊழியர்கள் மற்றும் ஒரு வாடிக்கையாளர் படுகாயம் அடைந்ததாகவும். இதனையறிந்த கிராப மக்கள் தி.மு.க.வினரை மடக்கி பிடித்து, அவர்களை உதைத்து காவல் துறையினரிடம் ஒப்படைத்ததாகவும் பத்திரிகையில் செய்தி வந்துள்ளது.

9 பேர் மீது வழக்கு
மேற்படி சம்பவம் தொடர்பாக, பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரையடுத்து, ஆறு தி.மு.க. பிரமுகர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும், தி.மு.க. நிர்வாகி கொடுத்த புகாரின் பேரில் சூரக்கோட்டையைச் சேர்ந்த ஒன்பது பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இரண்டு பேர் கைது இல்லை
இந்தச் சம்பவத்திற்கு மூலக் காரணமான எட்டு தி.மு.க. பிரமுகர்களில், இரண்டு பேர் தப்பி ஓடிவிட்டதாகவும், கிராம மக்கள் தற்காப்புத் தாக்குதல் நடத்தியதால் காயமுற்று ஆறு பேர் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. தப்பியோடிய இருவர் இதுவரை கைது செய்யப்படவில்லை. ஆளும் கட்சியில் உள்ளதன் காரணமாக, வழக்கை நீர்த்துப் போகச் செய்து, மீண்டும் தாக்குதல் நடவடிக்கைகளில் தி.மு.கவினர் ஈடுபடுவார்களோ என்ற அச்சமும் பதற்றமும் அப்பகுதி மக்கள் மத்தியில் நிலவுகிறது.

ஓபிஎஸ் கோரிக்கை
எனவே, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் இதில் உடனடியாகத் தலையிட்டு, சூரக்கோட்டைப் பகுதியில் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை ஏற்பட காரணமாக இருந்த அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்தி அவர்களுக்கு உரிய தண்டனையைப் பெற்றுத் தரவும், அப்பகுதியில் நிலவும் பதற்றத்தை போக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்" இவ்வாறு ஓ பன்னீர்செல்வம் அறிக்கையில் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications