உண்ட வீட்டுக்கே துரோகம்.. ‘அவங்க’ சொல்லி தான் ‘இவருக்கு’ தெரியும்! ஓபிஎஸ் கேட்டாரு பாருங்க கேள்வி..!
சென்னை: அமராவதி அணைக்கு வரும் நீரினை தடுத்து நிறுத்தும் வகையில் சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டி வரும் கேரள அரசுக்கும், அதனைத் தட்டிக் கேட்கத் தயங்கும் தி.மு.க. அரசுக்கும் கடும் கண்டனம் தெரிவித்துக் கொள்வதாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கையில் கூறியுள்ளார்.
அமராவதி அணை மூலமாக, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களிலுள்ள சுமார் 55 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்று வருகிறது. மேலும், அமராவதி ஆற்றுப்படுகை மூலமாக 110 கூட்டுக் குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்த அணை பல லட்சம் மக்களின் குடிநீர்தேவையை பூர்த்தி செய்து வருகிறது. அமராவதி அணையின் முக்கிய நீராதாரங்களாக கேரளா மாநிலம் சட்டமூணார் பகுதியிலுள்ள பாம்பாறு, மேற்குத் தொடர்ச்சி மலைகளில் உருவாகி அமராவதி அணையை வந்தடையும் தேனாறு, சிலந்தி ஆறு மற்றும் சின்னாறு ஆகியவை உள்ளன.
சிலந்தி ஆறு: இடுக்கி மாவட்டம் பெருகுடா எனும் இடத்தில் சிலந்தி ஆற்றின் குறுக்கே, தற்போது கேரள அரசு தடுப்பணை கட்டி வருகிறது. இந்த ஆற்று நீர் அமராவதி அணைக்கு வரும் துணை ஆறான தேனாற்றின் ஒரு பகுதிதான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அணை கட்டப்பட்டால் அமராவதி அணைக்கு வரும் நீரின் அளவு குறைந்து, அணையை நம்பி இருக்கும் பொதுமக்களும், விவசாயிகளும் கடுமையாக பாதிக்கப்படுவர். இதனால் விவசாயிகள் கடும் கொந்தளிப்பில் உள்ள நிலையில், எதிர்க் கட்சிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்து வருகின்றன.
ஓ.பன்னீர்செல்வம்: இந்நிலையில் அமராவதி அணைக்கு வரும் நீரினை தடுத்து நிறுத்தும் வகையில் சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டி வரும் கேரள அரசுக்கும், அதனைத் தட்டிக் கேட்கத் தயங்கும் தி.மு.க. அரசுக்கும் கடும் கண்டனம் தெரிவித்துக் கொள்வதாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கையில் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,"தி.மு.க.வின் ஆட்சிக் காலம் தமிழ்நாட்டின் உரிமைகள் பறிபோகின்ற காலம்" என்று சொன்னால் அது மிகையாகாது.
திமுக அரசு: அந்த அளவுக்கு கச்சத்தீவு, காவேரி நதிநீர்ப் பிரச்சனை, முல்லைப் பெரியாறு பிரச்சனை போன்றவற்றில் தமிழ்நாட்டின் உரிமைகளை விட்டுக் கொடுத்தது தி.மு.க. இந்த வரிசையில், தற்போது அமராவதி ஆற்றின் நீராதாரத்தினை பறிக்கும் வகையில், சிலந்தி ஆற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணை கட்டி வருவதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கின்றது தி.மு.க. அரசு.
விவசாயிகள் வேதனை: திருப்பூர் மற்றும் கரூர் மாவட்ட மக்களின் குடிநீர் மற்றும் பாசனத்திற்கு ஆதாரமாக அமராவதி அணை விளங்கி வருகிறது. இந்த ஆற்று நீரின் மூலம் கிட்டத்தட்ட 60,000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. அமராவதி அணைக்கு வரும் நீர் வரத்தினை தடுத்து நிறுத்தும் வகையில் ஏற்கெனவே பாம்பாற்றின் குறுக்கே பட்டிசேரி பகுதியில் கேரள அரசு தடுப்பணை கட்டியுள்ள நிலையில், இடுக்கி மாவட்டம், தேவிகுளம் தாலுகா, பெருகுடா பகுதியில் உள்ள சிலந்தி ஆற்றின் குறுக்கே மேலும் ஒரு தடுப்பணையை கேரள அரசு கட்டி வருவதாக அப்பகுதி விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
கடும் கண்டனம்: கேரள அரசின் தமிழக விரோதச் செயல் கடும் கண்டனத்திற்குரியது. கேரள அரசு தடுப்பணை கட்டுகிறது என்ற செய்தியை விவசாயிகள் சொல்லித்தான் தமிழ்நாடு அரசே தெரிந்து கொள்ளும் நிலை உருவாகியுள்ளது என்பது தி.மு.க.வின் அக்கறையின்மைக்கு ஓர் எடுத்துக்காட்டு. இந்த தடுப்பணை கட்டப்பட்டால், அமராவதி அணை பாலைவனமாக மாறிவிடும் சூழ்நிலை ஏற்படும் என்பதில் யாருக்கும் மாறுபட்ட கருத்து இருக்க முடியாது.
உரிமை மீண்டும் பறிபோய்விடுமோ?: இந்தச் சூழ்நிலையில், இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள மாண்புமிகு நீர்வளத் துறை அமைச்சர் அவர்கள், காவிரி தீர்ப்பை மீறும் விதமாக, கேரளாவோ, கர்நாடகாவோ செயல்பட முயற்சித்தால், அதை உறுதியுடன் எதிர்த்து, தமிழகத்தின் காவேரி உரிமையை, சட்ட ரீதியாக மட்டுமல்ல, அனைத்து விதத்திலும் தமிழக அரசு நிலை நாட்டும் என்று குறிப்பிட்டுள்ளதாக பத்திரிகையில் செய்தி வெளி வந்துள்ளது.
தமிழ்நாட்டின் உரிமை பறிபோகின்ற இந்த விஷயத்தில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தாமாக முன்வந்து கண்டன அறிக்கைவிட வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்ற நிலையில், மாண்புமிகு நீர்வளத் துறை அமைச்சர் அவர்கள் மென்மையான முறையில் அறிக்கை வெளியிட்டு இருப்பது தமிழ்நாட்டின் மற்றுமொரு உரிமை மீண்டும் பறிபோய்விடுமோ என்ற அச்சத்தை விவசாயப் பெருங்குடி மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது.
உண்ட வீட்டிற்கு துரோகம்: கேரள அரசின் அத்துமீறிய செயலைக் கண்டித்து அறிக்கை வெளியிட மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தயக்கம் காட்டுவது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் உள்ளது. 'உறவுக்கு கை கொடுப்போம். உரிமைக்கு குரல் கொடுப்போம்' என்று சொல்லி தமிழ்நாட்டு மக்களின் வாக்குகளைப் பெற்று ஆட்சிக்கு வந்துள்ள நிலையில், தமிழ்நாட்டின் உரிமை பறிபோகின்ற நிலையில் மவுனமாக இருப்பது, 'உண்ட வீட்டிற்கு துரோகம் செய்வது போல்' உள்ளது. தி.மு.க.வின் இந்தச் செயல் கடும் கண்டனத்திற்குரியது.
நிறுத்த வேண்டும்: மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் இதில் உடனடியாகத் தலையிட்டு, அமராவதி அணையின் நீராதாரத்தை தடுத்து நிறுத்தும் வகையில் சிலந்தி ஆற்றின் குறுக்கே அணை கட்டப்படுவது உடனடியாக முறியடிக்கப்பட வேண்டுமென்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொடண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்." என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications