பாஜக கூட்டணி.. நள்ளிரவில் பேச்சுவார்த்தை.. உற்சாகமாக வந்த ஓ பன்னீர்செல்வம்.. என்னது இரட்டை இலையா?
சென்னை: இரட்டை இலை சின்னத்தில்தான் தேர்தலை சந்திப்போம் என்று முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் உறுதியாக தெரிவிக்கிறார். பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தைக்கு பின் உற்சாகமாக இருக்கிறார் அவர்.. இதன் பின்னணி குறித்து பார்ப்போம்..
இந்த லோக்சபா தேர்தல், திமுகவை விட அதிமுகவிற்கு இது சவாலான தேர்தல் ஆக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.. ஏனெனில் திமுகவைவிட அதிமுகவை தான் பாஜக கடுமையாக அரசியல் ரீதியாக நெருக்கடி அளித்து வருகிறது. நெருக்கடி என்பது அதிமுகவில் இருந்து விலக்கப்பட்ட ஓ பன்னீர்செல்வத்தை தன் கூட்டணியில் சேர்த்தது.. அதிமுகவில் பிரிந்து தனி கட்சி ஆரம்பித்த டிடிவி தினகரனை பாஜக கூட்டணியில் சேர்த்தது போன்றவற்றை சொல்லாம்.

அதேபோல் அதிமுக கூட்டணியில் சேர விரும்பிய அத்தனை கட்சிகளையும் தன் பக்கம் இழுத்தது. தற்போதையில் அதிமுக உடன் எந்த பெரிய கட்சியும் கூட்டணியில் இல்லை.. பாமக முடிவு என்னவென்று தெரியவில்லை. தேமுதிகவும் தெளிவான முடிவினை அறிவிக்கவே இல்லை.. அதிமுக ஆதரவாளர்களை அப்படியே தன் பக்கம் இழுத்து இரண்டாவது பெரிய கட்சியாக உருவெடுக்க ஆயத்தமாகி வருகிறது பாஜக. இதனால் திமுகவைவிடவும் பாஜக அதிமுக இந்த முறை பெரிய சவலாக உள்ளது,
தற்போது பாஜக கூட்டணியை பொறுத்தவரை ஏராளமான கட்சிகள் இணைந்துள்ளன. டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், தமிழ் மாநில காங்கிரஸ், ஓ பன்னீர்செல்வம் அணி, புதிய நீதி கட்சி , இந்திய ஜனநாயக கட்சி மற்றும் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் ஆகியவை கூட்டணி அமைத்துள்ளன. இதுதவிர சரத்குமார் தனது மொத்த கட்சியையும் நேற்று பாஜகவில் இணைத்தார்..
பாஜக கூட்டணியில் தற்போது தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த கூட்டணியில் அமமுகவிற்கு 4 தொகுதிகளும், ஓபிஎஸ் தரப்பிற்கு 4 தொகுதிகளும் ஒதுக்க பாஜக முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் பாஜக நிர்வாகிகளுடன் நள்ளிரவில் டி.டி.வி. தினகரன், ஓ.பி.எஸ். பேச்சுவார்த்தை நடந்தது. பாஜகவுடன் நடந்த பேச்சுவார்த்தையின் போது ஓ.பி.எஸ்.ஸுடன் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியனும் உடன் இருந்தனர். நேற்றிரவு 11 மணிக்கு தொடங்கிய தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை அதிகாலை 2 மணி வரை நடந்ததாக கூறப்படுகிறது.
இந்த சந்திப்புக்கு பின்னர் உற்சாகமாக வெளியே வந்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பாஜக கூட்டணியில் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் தான் போட்டியிடுவோம் என்று உறுதியுடன் தெரிவித்தார்.. இரட்டை இலை சின்னம் பயன்படுத்துவதில் தற்காலிகமாகத் தான் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உளள்து. இரட்டை இலைச் சின்னம் குறித்து தேர்தல் ஆணையம் தான் முடிவு எடுக்கும்; வழக்கு இன்னும் நிலுவையில் தான் இருக்கிறது என்றார்.. ஒரே தொகுதியை கூட்டணியில் உள்ள கட்சிகள் கேட்பதால் அது குறித்து பேசி சரி செய்து போட்டியிடுவோம் என்றார் ஓபிஎஸ்..
ஓபிஎஸ் உற்சாகமாக இருப்பதன் பின்னணியில் இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கின் தீர்ப்புக்காக காத்துக்கொண்டிருக்கிறார். அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், கட்சியின் பெயர், கொடி, சின்னத்தை பயன்படுத்துவதாகவும், அதற்கு தடை விதிக்கவேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழக்கு தொடர்ந்திருக்கிறார். இந்த வழக்கில் தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பு தனக்க சாதமாக வரும் என்று அவர் நம்பிக்கொண்டிருக்கிறார்.
இந்த வழக்கு அண்மையில் விசாரணைக்கு வந்த போது, நீதிபதி என்.சதீஷ்குமார், அ.தி.மு.க. பெயர், கொடி உள்ளிட்டவற்றை பயன்படுத்த ஓ.பன்னீர்செல்வத்துக்கு இடைக்கால தடைவிதித்து உத்தரவிட்டிருந்தார் இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பு இறுதிக்கட்ட விசாரணைக்காக நேற்று வந்தது.
அப்போது ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் மூத்த வக்கீல்கள் அரவிந்த் பாண்டியன், அப்துல் சலீம் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர். அப்போது அவர்கள் வாதிடுகையில், அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பான ஓ.பன்னீர்செல்வத்தின் இடைக்கால கோரிக்கையைதான் உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது. நிலுவையில் உள்ள பிரதான வழக்கை தகுதியின் அடிப்படையில் விரைந்து முடிவு எடுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனவே, நிலுவையில் உள்ள பிரதான வழக்கை விரைந்து முடிக்க வேண்டும். ஓ.பன்னீர்செல்வம் தொண்டர்களை சந்திப்பதற்கான சுதந்திரம் அவருக்கு வேண்டும். கட்சியின் சின்னம், கொடியை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டதால் தேர்தல் ஆணையத்தை ஓ.பன்னீர்செல்வம் நாடமுடியாத நிலையில் இருக்கிறார் என்றார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி என்.சதீஷ்குமார், இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்தில் வழக்கு எதுவும் நிலுவையில் உள்ளதா? என கேள்வி எழுப்பினார். அதற்கு மூத்த வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன் ஆமாம் என்று பதில் சொன்னார்.
அதன்பின்னர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் மூத்த வக்கீல் விஜய்நாராயண் ஆஜராகி வாதிட்டார். அவர் தன் வாதத்தில், “இடைக்கால கோரிக்கையை நிராகரிக்கும்போது பிரதான வழக்கை தகுதியின் அடிப்படையில் விரைந்து முடிவு எடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்ற உத்தரவில் குறிப்பிடுவது வழக்கமான நடைமுறைதான். அ.தி.மு.க.வில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டது தவறு என்று எந்த நீதிமன்றமும் சொல்லவில்லை. ஒருங்கிணைப்பாளர் என ஓ.பன்னீர்செல்வம் தன்னை அழைத்துக்கொள்வதில் எந்த ஆட்சேபனையும் இல்லை.
ஆனால் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் என அழைப்பதை தான் நாங்கள் எதிர்க்கிறோம். வேண்டுமானால் வேறு கட்சி தொடங்கி ஒருங்கிணைப்பாளர் என ஓ.பன்னீர்செல்வம் அழைத்துக் கொள்ளட்டும்” என்றார். இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளார்.. இதனிடையே இந்த வழக்கிலும், தேர்தல் ஆணையத்தில் உள்ள வழக்கும் தனக்கு சாதமாக இந்த முறை மாறும் என்றும் நம்பிக்கையில் ஓ பன்னீர்செல்வம் இருக்கிறாராம்..
பாஜக உடன் தமிழ்நாட்டில் கூட்டணியை உறுதி செய்த கட்சிகள் பட்டியல்.. அதிமுகவே எதிர்பார்க்காத ட்விஸ்ட்
இதனிடையே அதிமுக முன்னாள் அமைச்சர் செம்மலை இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கு குறித்து கூறுகையில், “இரட்டை இலை சின்னம் தொடர்பாக யார் வேண்டுமானாலும் நீதிமன்றத்தில் வழக்கு தொடரலாம். ஆனால் இரட்டை இலை சின்னத்தை முடக்க முடியாது. அந்த சின்னம் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு வழங்கப்பட்டு விட்டது. இரட்டை இலை சின்னம் அவருக்கு சொந்தம் என்று கோர்ட்டு தீர்ப்பு வழங்கி இருக்கிறது..
இரட்டை இலை சின்னம் பிரச்சினைக்கு பின்னால் பா.ஜனதா கட்சி உள்ளதா? என்பது தெரியாது. தேசிய கட்சியாக இருந்தாலும், ஆளும் கட்சியாக இருந்தாலும் எவ்வளவு நெருக்கடி கொடுத்தாலும், எடப்பாடி பழனிசாமி பணியமாட்டார். நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. ஏற்கனவே தேர்தலில் அதிமுக தனித்து நின்று வெற்றி பெற்று இருக்கிறது. அதற்கான வல்லமையும் அதிமுகவிடம் உள்ளது” என்றார்.












Click it and Unblock the Notifications