“விடமாட்டோம்”.. கோர்ட் உத்தரவு பரபரக்க.. வீட்டில் ‘அவசர’ ஆலோசனை நடத்திய ஓபிஎஸ்.. அதிரடி முடிவு!
இன்றைய வழக்கு தீர்ப்பு குறித்து ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்த வழக்கில் விசாரணை முடிந்து, பொதுச்செயலாளர் தேர்தலை நடத்தலாம், ஆனால் பொதுக்குழு தீர்மான வழக்கில் தீர்ப்பு வரும் வரை, தேர்தல் முடிவுகளை வெளியிட தடை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், ஓ.பன்னீர்செல்வம் சென்னையில் தனது ஆதரவாளர்களுடன் அவசர ஆலோசனை நடத்தினார்.
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் வரும் 26ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில் நேற்று வேட்புமனு தாக்கல் தொடங்கியது. எடப்பாடி பழனிசாமி வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
இதனிடையே பொதுச் செயலாளர் தேர்தலை எதிர்த்து ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஜேசிடி பிரபாகர் ஆகியோர் தனித்தனியாக சென்னை உயர்நீதிமன்றத்தில் நேற்று வழக்கு தொடுத்தனர்.
இந்த வழக்கில் இன்று பரபரப்பாக விசாரணை நடைபெற்றது. அதேசமயம், ஓபிஎஸ் தனது வீட்டில் ஆதரவாளர்களுடன் அவசர ஆலோசனை நடத்தினார்.

அவசர வழக்கு விசாரணை
இந்த வழக்கு இன்று நீதிபதி குமரேஷ் பாபு முன்பு அவசர வழக்காக விசாரணைக்கு வந்தது. ஓபிஎஸ் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் பி.எஸ்.ராமன், ஸ்ரீராம் ஆகியோர் வாதிட்டனர். அப்போது கட்சியின் நிரந்தர பொதுசெயலாளராக ஜெயலலிதா இருக்க வேண்டும் என்பதே தொண்டர்களின் விருப்பம் என்றும், அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் குறித்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது என்றும், தேர்தல் ஆணையம் இதுவரை இடைக்கால பொதுச் செயலாளராக யாரையும் அங்கீகரிக்கவில்லை என்றும் வாதிடப்பட்டது.

ஒருவரே
மேலும் புதிய விதிகள் மாற்றப்பட்டுள்ளதாகவும், புதிய விதிகளின் படி 5 ஆண்டுகள் தலைமைக் கழக நிர்வாகிகளாக இருப்பவர் தான் பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட முடியும் என்றால் கட்சியின் அடிப்படை தொண்டர் போட்டியிட முடியாத சூழல் ஏற்படும். இது எம்.ஜி.ஆர் வகுத்த விதிக்கு எதிராக உள்ளது என்றும் வாதிடப்பட்டது. தொடர்ந்து பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும், இல்லையென்றால் ஒருவரே வேட்புமனு தாக்கல் செய்து, அவரையே ஒருமனதாக பொதுச்செயலாளராக தேர்ந்தெடுத்து விடுவார்கள் எனவும் ஓபிஎஸ் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.

எடப்பாடி வாதம்
எடப்பாடி பழனிசாமி தரப்பில் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் 1.50 கோடி உறுப்பினர்களின் மூலமே நடத்தப்படுகிறது. 1.50 கோடி உறுப்பினர்களில் ஓபிஎஸ்க்கு 1% கூட ஆதரவு இல்லை. தேர்தல் நடவடிக்கைகள் தொடங்கிவிட்டதால், நீதிமன்றம் இதில் தலையிட முடியாது. உட்கட்சி விவகாரத்தில் நீதிமன்றம் தலையிடக் கூடாது என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. கட்சித் தலைமை அடிப்படை உறுப்பினர்களால்தான் தேர்வு செய்யப்பட வேண்டும் எனக் கூறும் அவர்கள், இப்போது ஏன் தேர்தலை தடுக்க முயற்சிக்கிறார்கள்?

தடை கோர முடியாது
பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளதைச் சுட்டிக்காட்டி, பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை கோர முடியாது. ஓபிஎஸ் நேரடியாக வழக்கு தொடரவில்லை. வழக்கு தொடர்ந்த மூவருக்கும் இதற்கான அடிப்படை உரிமை இல்லை. கட்சியில் இருந்து நீக்கப்பட்டு 8 மாதங்களுக்குப் பிறகு வழக்கு தொடர்ந்துள்ளனர். ஜெயலலிதாவை நிரந்தர பொதுச்செயலாளராக அறிவித்துவிட்டு, மீண்டும் அப்பதவியை கொண்டு வருவதாக கூறுகின்றனர். ஆனால், ஏன் மீண்டும் கொண்டுவரக்கூடாது என எந்த காரணத்தையும் ஓபிஎஸ் தரப்பில் சொல்லவில்லை என ஈபிஎஸ் தரப்பில் வாதிடப்பட்டது.

அதிரடி உத்தரவு
இதையடுத்து ஜூலை 11 பொதுக்குழு தீர்மானத்தை எதிர்த்த வழக்கு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், பொதுச்செயலாளர் தேர்தல் அறிவிக்க வேண்டிய அவசியம் என்ன? எனக் கேள்வி எழுப்பிய நீதிபதி, பொதுச்செயலாளர் தேர்தல் நடைமுறைகள் தொடரலாம், ஆனால் முடிவுகளை அறிவிக்க வேண்டாம். பொதுக்குழு தீர்மானங்கள் குறித்த பிரதான வழக்கு 22ஆம் தேதி விசாரிக்கப்பட்டு 24ஆம் தேதி தீர்ப்பு வழங்குகிறேன் என நீதிபதி உத்தரவிட்டார்.

ஓபிஎஸ் அவசர ஆலோசனை
இந்த வழக்கு விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தபோதே, ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் முக்கிய ஆலோசனையை நடத்தினார். சென்னை கிரீன் வேஸ் சாலையில் உள்ள தனது இல்லத்தில் மனோஜ் பாண்டியன் உள்ளிட்ட தனது ஆதரவு நிர்வாகிகளுடன் ஓ.பன்னீர்செல்வம் முக்கிய ஆலோசனை நடத்தினார். பொதுச் செயலாளர் தேர்தல் குறித்த வழக்கின் முடிவு மற்றும் அடுத்த கட்ட நகர்வு குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

விடமாட்டோம்
இந்த ஆலோசனைக்குப் பிறகு இன்றைய உயர் நீதிமன்ற உத்தரவு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய - ஓபிஎஸ் ஆதரவாளர் மனோஜ் பாண்டியன், "நியாயம் தர்மம் எங்கள் பக்கம். எங்களை கட்சியில் இருந்து நீக்க எடப்பாடி பழனிசாமி யார்? கூவத்தூரில் இருந்த ஒரு கும்பல் எங்களை நீக்கினால், அது செல்லுமா? குறுக்குவழியில் பொதுச்செயலாளர் ஆக ஒரு 100 பேரை வைத்துக்கொண்டு திட்டமிட்டால் அதை நாங்கள் விடமாட்டோம்" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications