வைத்திலிங்கம் திமுகவில் இணைந்தது குறித்த கேள்வி.. ஓ பன்னீர்செல்வம் கொடுத்த நேரடி ரியாக்ஷன்
சென்னை: ஓ. பன்னீர் செல்வத்தின் தீவிர ஆதரவாளராக இருந்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், இன்று திடீரென திமுகவில் இணைந்து கொண்டார். ஓ பன்னீர் செல்வம் அணியில் இருந்து முக்கிய நிர்வாகிகள் வெளியேறி வருவதால் அவரது ஆதரவாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். வைத்திலிங்கம் திமுகவில் இணைந்தது பற்றி ஓ பன்னீர் செல்வத்திடம் செய்தியாளர்கள் கேட்டனர். இதற்கு அவர் அளித்த பதிலை பார்க்கலாம்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் ஓ பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள் ஒவ்வொருவராக அவரிடம் இருந்து விலகி மாற்றுக் கட்சியில் இணைந்து வருகிறார்கள். ஓ பன்னீர் செல்வத்தின் ஆதரவாளரான மனோஜ் பாண்டியன் சமீபத்தில் திமுகவில் இணைந்தார். ஓ பன்னீர் செல்வத்தின் மற்றொரு ஆதரவாளரான ஜே.சி.டி. பிரபாகரும் த.வெ.க.வில் இணைந்தார்.

திமுகவில் இணைந்த வைத்திலிங்கம்
ஓ. பன்னீர் செல்வத்துடன் வைத்திலிங்கம் மட்டுமே இருந்தார். ஆனாலும் கடந்த சில மாதங்களாக ஓ.பி.எஸ். நடத்தும் கூட்டங்களில் பங்கேற்பதை வைத்திலிங்கம் தவிர்த்து வந்தார். இந்த நிலையில் ஓ. பன்னீர் செல்வத்திடம் இருந்து வைத்திலிங்கம் விலகப் போவதாகவும், அவர் தி.மு.க.வில் இணையப் போவதாகவும் தகவல் பரவியது.
அதன்படி வைத்திலிங்கம் இன்று காலை தலைமைச் செயலகத்துக்கு சென்று சபாநாயகர் அப்பாவுவை சந்தித்து தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்வதாக கடிதம் கொடுத்தார். எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்த பிறகு வைத்திலிங்கம் அண்ணா அறிவாலயத்துக்கு சென்றார். அங்கு அவர் தி.மு.க. உறுப்பினர் படிவத்தில் கையெழுத்திட்டார். அதன் பிறகு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்து அவருக்கு பூச்செண்டு கொடுத்து அவரது தலைமையில் தன்னை தி.மு.க.வில் இணைத்துக் கொண்டார்.
ஓ பன்னீர் செல்வம் பதில்
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவருக்கு சால்வை அணிவித்து வரவேற்றார். வைத்திலிங்கத்துடன் அவரது மகன் பிரபுவும் வந்திருந்தார். திமுகவில் இணைந்த பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த வைத்திலிங்கம், ஓ.பி.எஸ். தேர்தல் கூட்டணி தொடர்பாக முடிவு செய்ய காலதாமதம் செய்ததால் திமுகவில் இணைந்ததாக கூறினார். மேலும் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக இருப்பது உகந்ததாக இல்லை என்றும் வைத்திலிங்கம் கூறினார்.
இந்த நிலையில், வைத்திலிங்கம் திமுகவில் இணைந்தது தொடர்பாக செய்தியாளர்கள் ஓ. பன்னீர் செல்வத்திடம் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த ஓ. பன்னீர் செல்வம், இது பற்றி அவரிடமே தான் கேட்க வேண்டும். தை பிறந்தால் வழி பிறக்கும் என்று சொன்னதாக சொல்கிறீர்கள். இன்னும் 25 நாட்கள் இருக்கிறது. நாங்கள் அரசியல் கட்சி இல்லை" என்று மழுப்பலாக பதிலளித்துவிட்டு சென்றார்.












Click it and Unblock the Notifications