எடப்பாடி பிளானுக்கு ’இப்படி ஒரு செக்’ வைக்கும் ஓபிஎஸ்.. 21ல் இருக்கு சரவெடி.. போனில் ரகசிய ஆலோசனை?
சென்னை : வரும் ஜூன் 23ஆம் தேதி நடைபெற இருக்கும் பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி செயல்படுத்துவதற்காகப் போடும் திட்டங்களுக்கு 'செக்' வைக்க ஓ.பன்னீர்செல்வம் தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது.
அதிமுகவில், ஒற்றைத் தலைமை விவகாரம் தொடர்பாக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது.
இந்நிலையில், தனக்கும், எடப்பாடி பழனிசாமிக்கும் எதிராக தொடரப்பட்ட வழக்கில், தனியாக பதில் மனு தாக்கல் செய்து பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமியின் திட்டத்தை ஓ.பி.எஸ் முறியடிப்பார் எனக் கூறப்படுகிறது.

வழக்கு
அதிமுக விதிகளில் மாற்றம் கொண்டு வரத் தடை கோரி தொடரப்பட்ட வழக்கு ஒன்று சென்னை ஐகோர்ட்டில் நிலுவையில் இருக்கிறது. அந்த வழக்கை ராம்குமார் ஆதித்தன் மற்றும் கே.சி.பழனிசாமியின் மகன் சுரேன் ஆகியோர் தொடர்ந்தனர். கட்சியில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி உருவானது தவறானது, இது அதிமுக விதிகளுக்கு எதிரானது. இந்த பதவி உருவாக்கத்திற்கு தடை விதிக்க வேண்டும். மேலும் இருபொறுப்பாளர்களும் இணைந்து செயற்குழு, பொதுக்குழுவை கூட்ட தடை விதிக்க வேண்டும், உட்கட்சி தேர்தலையும் ரத்து செய்ய வேண்டும் என்றும் அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.

ஏற்றுக்கொண்ட கோர்ட்
அந்த வழக்கில் அதிமுகவின் ஒன்றரைக் கோடி தொண்டர்களின் பிரதிநிதியாக அந்த மனுவை தாக்கல் செய்வதாக அவர்கள் குறிப்பிட்டிருந்தனர். அதிமுக தொண்டர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரம் அவர்கள் இருவருக்கும் கிடையாது என ஓபிஎஸ், இபிஎஸ் தரப்பில் கோர்ட்டில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. கடந்த மாதம், நீதிமன்றம், ஓபிஎஸ், இபிஎஸ் பதிலை ஏற்க மறுத்து, அந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது. இந்த வழக்கு வரும் செவ்வாய்க்கிழமை அதாவது பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக ஜூன் 21ஆம் தேதி கோர்ட்டில் விசாரணைக்கு வருகிறது.

கே.சி.பழனிசாமியுடன் பேச்சு
இதற்கிடையே இன்று, அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.பி கே.சி.பழனிசாமியுடன் ஓ.பன்னீர்செல்வம் போனில் பேசியுள்ளதாக கூறப்படுகிறது. கொங்கு மண்டலத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு அமோக ஆதரவு இருந்து வரும் நிலையில், அதே கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த கே.சி.பழனிசாமி ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக இருக்கும் நிலை அதிமுகவில் இருக்கிறது. இந்த நிலையில்தான் கே.சி.பழனிசாமியின் மகன் உள்ளிட்ட இருவர் தொடர்ந்த வழக்கில் ஓ.பன்னீர்செல்வம் தனியாக ஒரு பதில் மனுவை தாக்கல் செய்யவிருப்பதாக கூறப்படுகிறது.

சிறப்பு அழைப்பாளர்கள்
அதிமுக பொதுக்குழு, செயற்குழுக் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்கள் பங்கேற்க வேண்டும் என ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு விரும்பினாலும், எடப்பாடி பழனிசாமி அதற்கு மறுப்பு தெரிவிக்கிறார். இட வசதி இல்லை என ஒரு காரணம் கூறப்பட்டாலும், சசிகலா ஆதரவாளர்கள் உள்ளே நுழைந்து குழப்பம் ஏற்படுத்த வாய்ப்பு உள்ளதாகக் கருதி, இதை பழனிசாமி தரப்பு எதிர்ப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால், இதுதவிர இன்னொரு முக்கியமான காரணமும் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

இன்னொரு காரணம்
செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் 2,600-க்கும் மேற்பட்டோர், 2,500 சிறப்பு அழைப்பாளர்கள் என 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அமர இடம் வேண்டும். எனவே, சிறப்பு அழைப்பாளர்கள் அழைக்கப்படவில்லை எனக் கூறப்பட்டாலும், அனைவரும் வரும்போது தனக்கு பெரும்பான்மை ஆதரவு கிடைப்பதில் சிக்கல் ஏற்படும் எனக் கருதி வேண்டுமென்றே சிறப்பு அழைப்பாளர்களை எடப்பாடி பழனிசாமி தவிர்த்திருப்பதாக கூறப்படுகிறது.

ஓபிஎஸ் திட்டம்
கட்சியின் மரபுப்படி சிறப்பு அழைப்பாளர்கள் பொதுக்குழு, செயற்குழு கூட்டத்திற்கு அழைக்கப்படுவது வழக்கம். ஆனால், தங்களுக்கு பெரும்பான்மை கிடைக்காது என அஞ்சி, செயற்கையாக பெரும்பான்மை பெறுவதற்காக சிறப்பு அழைப்பாளர்களை தவிர்க்க எடப்பாடி பழனிசாமி முயற்சிப்பதாக ஓ.பி.எஸ் கோர்ட்டில் பதில் மனு தாக்கல் செய்வார் எனக் கூறப்படுகிறது. இதனால், பொதுக்குழுவில் முக்கிய முடிவுகளை எடுப்பதில் நீதிமன்றம் மூலம் சிக்கல் எழலாம் என்பதால் எடப்பாடி பழனிசாமி தரப்பு ஷாக் ஆகியிருக்கிறது.

பொதுக்குழு
பொதுக்குழு கூட்டத்தில் என்ன நடக்கப்போகிறது என்பது அதிமுகவினர் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பாக இருக்கும் சூழலில், ஓ.பன்னீர்செல்வம் போட்டுள்ள திட்டத்தால் பொதுக்குழு கூட்டம் நடக்குமா? நடந்தாலும், நீதிமன்ற மேற்பார்வையின் கீழ் நடக்குமா? எடப்பாடி பழனிசாமி நினைத்ததைச் செய்ய முடியுமா? என்றெல்லாம் பல்வேறு கேள்விகளும், சந்தேகங்களும் எழுந்து வருகின்றன.












Click it and Unblock the Notifications