ஓ.பன்னீர்செல்வம் மனைவி விஜயலட்சுமி உடல் பெரியகுளத்தில் இன்று நல்லடக்கம்
சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி மாரடைப்பால் நேற்று காலமானார். அவரது உடல் பெரியகுளத்தில் இன்று அடக்கம் செய்யப்படவுள்ளது.
Recommended Video
உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த விஜயலட்சுமி, சென்னை பெருங்குடி தனியார் மருத்துவமனையில் கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார். தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த இவர் குணமடைந்து, நேற்று வீடு திரும்ப இருந்தார். இந்நிலையில், நேற்று அதிகாலை 5 மணிக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. இதயநோய் நிபுணர்கள் அவசர சிகிச்சை அளித்தனர். இருப்பினும் சிகிச்சைப் பலனின்றி காலை 6.45 மணிக்கு விஜயலட்சுமி உயிரிழந்தார்.

தேனி மாவட்டம் உத்தமபாளையத்தைச் சேர்ந்த விஜயலட்சுமி, திருமணத்துக்குப் பிறகு பெரியகுளத்தில் குடும்பத்துடன் வசித்து வந்தார். ஓ.பன்னீர்செல்வம் அடிக்கடி சென்னை உள்ளிட்ட இடங்களுக்குச் செல்ல வேண்டி இருந்ததால், கடந்த சில மாதங்களாக சென்னை வீட்டில் குடும்பத்துடன் விஜயலட்சுமி வசித்து வந்தார்.
இந்த தம்பதிகளுக்கு கவிதாபானு என்ற மகளும், ரவீந்திரநாத், ஜெயபிரதீப் ஆகிய மகன்களும் உள்ளனர். ரவீந்திரநாத் தற்போது தேனி லோக்சபா தொகுதி உறுப்பினராக உள்ளார்.

இறந்த விஜயலட்சுமியின் உடலுக்கு சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, சசிகலா உள்ளிட்ட அரசியல் தலைவர்களும், முக்கியப் பிரமுகர்களும் அஞ்சலி செலுத்தினர். விஜயலட்சுமியின் உடல் நேற்று இரவு தேனி மாவட்டம் பெரியகுளத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது.
செப்டம்பர் 2ம் தேதியான இன்று விஜயலட்சுமி உடல் அடக்கம் செய்யப்பட உள்ளது என்று அதிமுகவினர் தெரிவித்தனர்.
இதனிடையே ஓபிஎஸ் மனைவி மரணத்திற்கு, பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications