பக்கத்திலேயே இருந்த ஓபிஎஸ்.. திரும்ப முடியாமல் திகைத்த எடப்பாடி.. "அந்த" ரியாக்சன்! கவனிச்சீங்களா
சென்னை: தமிழ்நாடு சட்டசபையில் இன்று சுவாரசியமான சம்பவம் ஒன்று நடைபெற்றது. எடப்பாடி - ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் அருகருகே அமர்ந்த நிலையில் சட்டசபை இன்று பரபரப்பாக காணப்பட்டது.
பிடித்தது கிடைக்கவில்லை என்றால் கிடைத்ததை பிடித்துக்கொள்ள வேண்டும் என்று சொல்வார்கள்.. எடப்பாடி பழனிசாமி தற்போது அந்த மனநிலைக்கு வந்துவிட்டார் என்றுதான் கூற வேண்டும். எடப்பாடி பழனிசாமியின் கோரிக்கையை சபாநாயகர் அப்பாவு ஏற்றுக்கொள்ளாததால் எடப்பாடி தரப்பு அதிமுகவினர் இன்று கருப்பு சட்டை அணிந்து அவைக்கு வந்து இருந்தனர்.
முன்னதாக எதிர்க்கட்சி துணை தலைவர் இருக்கையில் ஓ பன்னீர்செல்வத்தை அமர வைக்க கூடாது என்று எடப்பாடி பழனிசாமி தரப்பு சபாநாயகர் அப்பாவுவிற்கு கடிதம் எழுதி இருந்தது. ஆர்பி உதயகுமார்தான் அதிமுகவின் எதிர்க்கட்சி துணை தலைவர்.

கோரிக்கை
அதனால் அவரைத்தான் அந்த இருக்கையில் அமர வைக்க வேண்டும் கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது. ஆனால், நான்தான் எதிர்க்கட்சி துணை தலைவர். அதனால் நான்தான் அந்த இடத்தில் தொடர வேண்டும். உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடக்கையில் இதில் முடிவு எடுக்க கூடாது என்று ஓ பன்னீர்செல்வம் கோரிக்கை வைத்தார். சபாநாயகர் அப்பாவு இதில் இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை என்றாலும் அப்போதே இது தொடர்பாக பேட்டி அளித்து இருந்தார். அதில், ஓபிஎஸ், இபிஎஸ் அணியினருக்கான இருக்கைகள் தொடர்பாக சட்டப்பேரவை கூடும்போது தெரியவரும். இப்போதே அறிவிக்க முடியாது. இரண்டு பேருமே மூத்த தலைவர்கள்.

ஒரே சின்னம்
இரண்டு பேருமே ஒரே சின்னத்தில் போட்டியிட்டு வென்றவர்கள். ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் முதலமைச்சர்களாக இருந்தவர்கள். நிச்சயம் கண்ணியமாக நடந்துகொள்வார்கள். அதேபோல் இருக்கைகள் ஒதுக்குவது தொடர்பாக சட்டமன்ற மரபுப்படியே நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தல் ஆணையத்தில் இருக்கும் ஆவணங்களின் அடிப்படையில்தான் முடிவு எடுக்கப்படும் என்று கூறி இருந்தார். தேர்தல் ஆணையத்தில் இன்னும் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்றுதான் இருக்கிறது. சமீபத்தில் இதை தேர்தல் ஆணையம் கூட உறுதி செய்தது. குறிப்பாக புலம் பெயர்ந்தோருக்கு அந்தந்தப் பகுதிகளில் வாக்களிக்க வசதி செய்யும் ரிமோட் வாக்குப்பதிவு முறை குறித்து விளக்கம் கேட்க அதிமுகவிற்கு தேர்தல் ஆணையம் கடிதம் எழுதியது. ஜனவரி 16ம் தேதி நடக்கும் கூட்டத்தில் கலந்து கொள்ள அதிமுகவிற்கு கடிதம் அனுப்பப்பட்டது.

என்ன சொன்னார்?
அதிமுகவுக்கு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பெயரில் எடப்பாடி பழனிசாமி, ஓ பன்னீர்செல்வத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டது. இந்த கடிதத்தை எடப்பாடி தரப்பினர் திருப்பி அனுப்பி உள்ளனர். இதற்கு தற்போது தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு பதில் அளித்துள்ளார். அதில், தேர்தல் ஆணையத்திடம் இந்த தகவல்தான் உள்ளது. இந்திய தேர்தல் ஆணைய ஆவணத்தில் அப்படித்தான் இருக்கிறது. அதில், அதிமுகவில் இன்றைய தேதி வரை ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள்தான் உள்ளது, என்று குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில்தான் இந்த வாரம் சட்டசபை மீண்டும் கூடிய நிலையில் இரண்டு பேரும் அருகருகே அமர வைக்கப்பட்டு உள்ளனர்.

அருகருகே அமர்ந்த இருவர்
இதை மாற்ற வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி நேற்று சபாநாயகர் அப்பாவுவிடம் கோரிக்கை வைத்தார். ஆனால் சபாநாயகர் இந்த கோரிக்கையை ஏற்கவில்லை. இந்த நிலையில்தான் இன்று சபாநாயகர் அப்பாவுவின் முடிவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக எடப்பாடி பழனிசாமி தரப்பு கருப்பு சட்டையில் வந்தது. எடப்பாடி உட்பட அவரது அணியினர் எல்லோரும் கருப்பு சட்டையில் வந்து இருந்தனர். ஆனாலும் அவைக்கு உள்ளே எடப்பாடி இன்று அமளியில் ஈடுபடவில்லை. கேள்வி நேரத்தின் போது அமளியில் ஈடுபடாமல் எடப்பாடி அமைதியாக ஓ பன்னீர்செல்வம் அருகே அமர்ந்து இருந்தார். கேள்வி நேரம் முடியும் வரை எடப்பாடி எதுவும் சொல்லாமல், அமளி செய்யாமல், தனது இருக்கையிலேயே அமைதியாக இருந்தார்.

எடப்பாடி
ஓபிஎஸ் அருகிலேயே இருந்ததால் அந்த பக்கம் திரும்பாமல் எடப்பாடி பழனிசாமி அமைதியாக இருந்தார். இருவரும் அருகருகே அமர்ந்தபடி ஆளுநர் உரையை கவனித்துக் கொண்டு இருந்தனர். முக்கியமாக எடப்பாடி இன்று மிகவும் இறுக்கத்துடன் இருந்தார். பக்கத்திலேயே ஓபிஎஸ் இருக்கிறார். இப்போது அவர்தான் தனக்கு பரம எதிரி என்பதால் எடப்பாடி என்ன செய்வது என்று தெரியாமல் கடுமையாக முகத்தை வைத்துக்கொண்டு இருந்தார். இன்று எடப்பாடி - ஓபிஎஸ் அருகருகே அமர்ந்து இருந்தாலும் இருவரும் ஒரு நிமிடம் கூட ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ளவில்லை. எடபபடி இறுக்கமான முகத்துடன் காணப்பட்டாலும் ஓபிஎஸ் முகத்தில் மாற்றத்தை காட்டிக்கொள்ளவில்லை.. ஓபிஎஸ் கொஞ்சம் இயல்பாக இருந்தார். இவர்களின் நடவடிக்கைகள் சட்டசபையில் கவனிக்கப்பட்டது.

சட்ட ஒழுங்கு
இதையடுத்து தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு சரி இல்லை என்று எடப்பாடி புகார் வைத்தார். தமிழகத்தில் தினந்தோறும் கொலை, கொள்ளை செய்தி வருகிறது. தினந்தோறும் முதல் பக்கத்தில் கொலை, கொள்ளை செய்திகள் வருகிறது, என்று எடப்பாடி பழனிச்சாமி பேசினார். ஒட்டுமொத்தமாக சட்ட ஒழுங்கு கெட்டு விட்டதாக எடப்பாடி பழனிசாமி புகார் வைத்தார். இதற்கு முதல்வர் ஸ்டாலின் எழுந்து பதில் அளித்தார். அவருடைய ஆட்சியில் சட்டம் ஒழுங்கு எப்படி இருந்தது என்பதை பெரிய பட்டியலே வைத்திருக்கிறேன் என்று கூறி முதல்வர் ஸ்டாலின் பெரிய பட்டியலை வாசித்தார். முதல்வர் ஸ்டாலினின் இந்த உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டசபையில் இருந்து அதிமுக எடப்பாடி தரப்பினர் வெளிநடப்பு செய்தனர்.












Click it and Unblock the Notifications