ஓபிஎஸ் வாழ்நாளில் எதிர்பார்க்காத ட்விஸ்ட்.. பாஜக வைத்த கோரிக்கையால் இழுபறி.. எடுத்த அதிரடி முடிவு
சென்னை: பாஜனதா கூட்டணியில் முக்கிய கட்சிகளுக்கு தொகுதிப் பங்கீடு முடிந்த நிலையில் தமாகா மற்றும் ஓ பன்னீர் செல்வம் ஆகியோருக்கான இடங்கள் மட்டும் இன்னமும் முடிவாகவில்லை; தொடர்ந்து இழுபறி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஓ பன்னீர்செல்வம் தனது அமைப்பின் நிர்வாகிகளுடன் இன்று அவசர ஆலோசனை நடத்தினார்.
தமிழகத்தில் பாஜக தலைமையிலான கூட்டணியில் அ.ம.மு.க.வுக்கு 2 தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் ஜிகே வாசன் ஆகியோருக்கான தொகுதி ஒதுக்கீட்டில் இழுபறி ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெறுகிறது.

2024 லோக்சபா தேர்தல் தமிழ்நாட்டில் நான்கு முனை போட்டி ஏற்பட்டுள்ளது. திமுக காங்கிரஸ் தலைமையில் ஒரு அணியும், அதிமுக தலைமையில் ஒரு அணியும், பாஜக தலைமையில் ஒரு அணியும், நாம் தமிழர் கட்சி தனியாகவும் என நான்கு முனை போட்டி நடைபெறுகிறது.
லோக்சபா தேர்தலில் பாஜக கூட்டணியில் பா.ம.க., அ.ம.மு.க., ஓ.பன்னீர் செல்வம், புதியநீதிக்கட்சி, இந்திய ஜனநாயக கட்சி, தமிழக வெற்றிக்கழகம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இதில் பெரிய கட்சியாக பா.ம.க.வுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் எந்த இடங்கள் என்பது இன்னமும் முடிவாகவில்லை..
தற்போது கூட்டணி கட்சி தலைவர்களுடன் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய அமைச்சர் கிஷன்ரெட்டி, மத்திய அமைச்சர் எல்.முருகன், மேலிட பொறுப்பாளர் அரவிந்த மேனன் உள்ளிட்டோர் கமலாலயத்தில், கூட்டணி கட்சி தலைவர்களுடன் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார்கள். இதுவரை நடந்த பேச்சுவார்த்தைக்கு பின்னர் புதிய நீதிக்கட்சிக்கு வேலூர் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் வேலூரில் தாமரை சின்னத்தில் போட்டியிடுகிறார்.
அதேபோல் பாஜக தலைவர்கள் , அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரனுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், அ.ம.மு.க.வுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்வது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.. டிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னம் கிடைத்துள்ளது. ஆனால் எந்த தொகுதி என்று அறிவிக்கவில்லை..
அதன் தொடர்ச்சியாக, த.மா.கா சார்பில் ஜி.கே.வாசனுடன் பாஜக தேர்தல் பணிக்குழுவுடன் ஆலோசனை நடத்தினார்கள். ஆனால் தொகுதி உடன்பாடு எட்டப்படவில்லை. மீண்டும் கலந்து பேசி தொகுதி பங்கீட்டில் இறுதி முடிவு எடுக்க ஜிகே வாசன் திட்டமிட்டுள்ளார். இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம் தலைவர் தேவநாதன் யாதவ், தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான்பாண்டியன் ஆகியோருக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. எந்தெந்த தொகுதிகள் என்பது அறிவிக்கப்படவில்லை. இரு கட்சிகளும் தாமரை சின்னத்தில் போட்டியிட உள்ளன.
அடுத்ததாக பாஜக கூட்டணியில் இந்திய ஜனநாயக கட்சிக்கு (ஐ.ஜே.கே.) ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதற்கான ஒப்பந்தத்தில் பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை, ஐ.ஜே.கே. தலைவர் ரவிபச்சமுத்து ஆகியோர் கையெழுத்திட்டார்கள். பெரம்பூர் தொகுதி ஒதுக்கப்படும் என தெரிகிறது. பாரிவேந்தர் பெரம்பலூர் தொகுதியில் தாமரை சின்னத்தில் போட்டியிடுவார் என தெரிகிறது.
இதேபோல் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், பா.ஜனதா தேர்தல் பணிக்குழு தலைவர்களுடன் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினார். இதில், எம்.எல்.ஏக்கள் வைத்திலிங்கம், மனோஜ்பாண்டியன் உள்பட பலர் பங்கேற்றுள்ளார்கள். இந்த ஆலோசனையில், பா.ஜனதா ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்ய முடிவு செய்திருக்கிறதாம், மேலும், ஓபிஎஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் தாமரை சின்னத்தில் போட்டியிட வேண்டும் என பா.ஜனதா அறிவுறுத்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால், தொகுதி பங்கீட்டில் உடன்பாடு எட்டப்படவில்லை என கூறப்படுகிறது.
இதுகுறித்து, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கூறுகையில், 'பேச்சுவார்த்தை சமூகமாக நடந்தது. இன்று (வியாழக்கிழமை) மாவட்ட செயலாளர்களுடன் அவசர கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டத்திற்கு பிறகு, தொகுதி பங்கீடு, போட்டியிடும் சின்னம் தொடர்பாக அறிவிக்கப்படும்' என்று தெரிவித்தார்.
இதனிடையே இன்று சென்னையில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கூட்டம் பண்ருட்டி ராமச்சந்திரன் தலையில் நடந்தது. இந்த கூட்டத்தில் முடிவெடுக்கும் அதிகாரம் ஓ பன்னீர்செல்வத்திற்கு வழங்கப்பட்டது. ஓ பன்னீர்செல்வம் 3 தொகுதிகள் கேட்ட நிலையில் ஒரு தொகுதி மட்டுமே தர பாஜக முன்வந்துள்ளதாம். அதேபோல் ராமநாதபுரம் தேனி தொகுதிகளை கேட்ட நிலையில், அதனை தருவதற்கு பாஜக மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் அதிருப்தியில் உள்ள ஓ பன்னீர்செல்வம் கட்சி நிரவாகிகளிடம் இன்று ஆலோசனை செய்தார். இதில் பல்வேறு கருத்துக்களை நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். கேட்ட தொகுதிகள் கிடைக்காத நிலையில், தேர்தலில் போட்டியிடாமல் வெளியில் இருந்து ஆதரவு தரலாமா என்று ஓபிஎஸ் யோசித்து வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளன.












Click it and Unblock the Notifications