திமுக பற்றி ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை.. சந்தேகத்தை கிளப்பிய ஓ.பி.எஸ்.. இதை நோட் பண்ணீங்களா?
சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளரான ஓ. பன்னீர்செல்வம் கடந்த சில மாதங்களாகவே திமுகவுடன் முக்கியமான நேரங்களில் இணக்கமாக செல்கிறார். முக்கியமான பிரச்சனைகள், விவாதங்களின் போது திமுகவிற்கு ஆதரவான கருத்துக்களை ஓ. பன்னீர்செல்வம் ஆங்காங்கே தெரிவித்து வருகிறார். அப்படித்தான் நீட் தேர்வு தொடர்பாகவும் ஓ. பன்னீர்செல்வம் தற்போது கருத்து தெரிவித்துள்ளார்.
சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் முழுக்கவே ஓ. பன்னீர்செல்வம் கொஞ்சம் திமுகவோடு இணக்கமாகவே சென்றார். திமுக கொண்டு வந்த சில அறிவிப்புகளை மேடையிலேயே பாராட்டினார். அதோடு திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் குறித்து மிகவும் உருக்கமாக பேசி அவையை திரும்பி பார்க்க வைத்தார்.
நதியினில் வெள்ளம்... கரையினில் நெருப்பு... இரண்டுக்கும் நடுவே இறைவனின் சிரிப்பு...இதுதான் என் தற்போதைய நிலைமை என்று அவையில் பாடல் எல்லாம் பாடி அதிமுகவை குழம்ப வைத்தார். திமுகவிற்கு எதிராக எடப்பாடி பழனிசாமி மிக தீவிரமாக கருத்து தெரிவித்து வரும் நிலையில் ஓ. பன்னீர்செல்வம் மட்டும் இணக்கமாக சென்றது பல கேள்விகளை எழுப்பி வருகிறது.

சந்திப்பு
ஓ. பன்னீர்செல்வம் மனைவி விஜயலட்சுமி மறைவின் போது முதல்வர் ஸ்டாலின் அவரை நேரில் சென்று சந்தித்தார். பன்னீர்செல்வத்தை அணைத்து அவரிடம் ஆறுதலாக ஸ்டாலின் பேசினார். இவர்கள் இருவருக்கும் இடையில் இது மேலும் இணக்கத்தை ஏற்படுத்தியது. இந்த நிகழ்வு நடந்து சரியாக ஒரு வாரத்தில் பெரியாரின் பிறந்த நாளை சமூக நீதி நாளாக அறிவித்ததற்கு முதல்வர் ஸ்டாலினுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ, பன்னீர்செல்வம் நன்றி தெரிவித்துள்ளார்.

பாராட்டு
தந்தை பெரியார் அவர்கள் வகுத்துத் தந்த பாதையில் சமுதாயச் சீர்திருத்தக் கருத்துக்களை பட்டிதொட்டியெங்கும் எடுத்துச் சென்ற பெருமை பேரறிஞர் அண்ணா , புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., கலைஞர் மு. கருணாநிதி, புரட்சித் தலைவி அம்மா ஆகியோரையே சாரும். தந்தை பெரியார் அவர்களை பெருமைப்படுத்தும் வகையில், அவர் பிறந்த தினமான செப்டம்பர் 17 ஆம் நாள் "சமூக நீதி" நாளாக கொண்டாடப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்திருப்பது வரவேற்புக்குரியது. இந்த அறிவிப்பிற்கு காரணமான மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு எனது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று ஓ.பி.எஸ் குறிப்பிட்டார்.

எடப்பாடி பழனிசாமி
முதல்வரின் அறிவிப்பு குறித்து எடப்பாடி பழனிசாமி பெரிதாக கருத்து எதுவும் தெரிவிக்காத நிலையில் ஓ. பன்னீர்செல்வம் மட்டும் தனியாக அறிக்கை விட்டு திமுகவின் அறிவிப்பை பாராட்டினார். அதிமுகவினர் பலர் அமைதியாக இருந்த போது ஓ. பன்னீர்செல்வம் மட்டுமே தனியாக நீண்ட அறிக்கை வெளியிட்டது அப்போதே கேள்விகளை எழுப்பியது. இந்த நிலையில்தான் நேற்று நீட் தேர்வுக்கு பயந்து மாணவர் தனுஷ் தற்கொலை செய்து கொண்ட போது கூட ஓ. பன்னீர்செல்வம் அதில் அரசுக்கு எதிராக கண்டனம் எதையும் தெரிவிக்காமல் ஒதுங்கிக் கொண்டார்.

கண்டனம்
மாணவர் தனுஷ் நீட் தேர்வுக்கு அச்சப்பட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் தமிழ்நாடு அரசை எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்தார். அதோடு திமுகவிற்கு எதிராகவும், அவர்களின் வாக்குறுதிகளுக்கு எதிராகவும் கடுமையாக விமர்சனங்களை வைத்து நீண்ட அறிக்கையும் வெளியிட்டார். அதில், நீட் தேர்வு நடைபெறுமா? நடைபெறாதா? நடைபெறும் எனில் மாணவர்கள் தேர்வுக்கு தயாராக அறிவுறுத்தி முறையான பயிற்சி அளித்து குழப்பத்தில் உள்ள மாணவர்களை தெளிவுபடுத்த வேண்டும் என அறிக்கை மூலமாகவும், ஊடகங்கள் மூலமாகவும் தொடர்ந்து வலியுறுத்தினேன்.

அறிக்கை
ஆனால் நேற்று ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்ட ட்வீட்டில் திமுகவிற்கு எதிராக எந்த வார்த்தையும் இல்லை. அரசை விமர்சனம் செய்யாமல், திமுகவின் வாக்குறுதிகளை கிளறாமல் வெறுமனே அந்த மாணவரின் மரணம் குறித்து மட்டுமே பேசி இருந்தார். அதில், சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே உள்ள கூழையூரை சேர்ந்த விவசாயி மகன் தனுஷ் மருத்துவராக வேண்டும் என்ற கனவில் இரண்டு முறை நீட் தேர்வில் வெற்றி பெறாது, மூன்றாவது முறையாக இன்று நீட் தேர்வு எழுதவுள்ள சூழ்நிலையில், அச்சம் காரணமாக தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தி அறிந்து, தாங்கொண்ணாத் துயரமும் மிகுந்த மனவேதனையும் அடைந்தேன். உயிரை மாய்த்துக் கொண்ட அந்த மாணவனுக்கு அஞ்சலி செலுத்துவதோடு, அவரது தாய், தந்தையருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

துயரம்
தாங்கொண்ணாத் துயரமும் மிகுந்த மனவேதனையும் அடைந்தேன். உயிரை மாய்த்துக் கொண்ட அந்த மாணவனுக்கு அஞ்சலி செலுத்துவதோடு, அவரது தாய், தந்தையருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன், என்று குறிப்பிட்டார். இதில் எங்கும் திமுகவிற்கு எதிராக ஒரு வார்த்தையை கூட ஓ பன்னீர்செல்வம் தெரிவிக்கவில்லை. திமுகவிற்கு எதிராக சின்ன கருத்து கூட தெரிவிக்கவில்லை. பாஜக அண்ணாமலை தொடங்கி பலரும் திமுக ஏன் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்று கேட்டு இருக்கிறார்கள். ஏன் திமுக உடன்பிறப்புகள் சிலரே கூட உடனடியாக நீட் தேர்வில் இருந்து விலக்கு கொண்டு வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

சந்தேகம்
ஆனால் ஓ. பன்னீர்செல்வம் மட்டும் அப்படி எதுவும் பேசாமல்.. மாணவர் மரணத்தில் அரசியல் செய்யாமல் அமைதியாக ஒதுக்கிக்கொண்டார். ஆளும் கட்சியோடு இப்படி ஓ. பன்னீர்செல்வம் இணக்கமாக செல்ல என்ன காரணம் என்ற கேள்வியை இது எழுப்பி உள்ளது. திடீரென திமுகவோடு நட்பாக ஓ. பன்னீர்செல்வம் செல்வது ஏன் என்ற சந்தேகத்தை இது ஏற்படுத்தி உள்ளது. திமுக தலைவர்களும் அவ்வப்போது ஓ. பன்னீர்செல்வமுடன் இணக்கமாக செல்வது பல்வேறு அரசியல் விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. நதியினில் வெள்ளம்... கரையினில் நெருப்பு என்று இரண்டுக்கும் நடுவே அரசியல் பயணம் செய்து கொண்டு இருக்கிறார் ஓ. பி.எஸ்.. அவர் நதியிலே இருப்பாரா.. கரைக்கு செல்வாரா என்பது போக போகத்தான் தெரியும்.












Click it and Unblock the Notifications