ஒடிசா ரயில் விபத்து: தமிழக அதிகாரிகள் குழு சென்னை திரும்பியது.. இன்று முதல்வரிடம் அறிக்கை
சென்னை: ரயில் விபத்து தொடர்பாக ஒடிசா சென்ற தமிழக அதிகாரிகள் நேற்று இரவு சென்னை திரும்பியது. மீட்பு பணி தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக இன்று முதல்வர் மு.க ஸ்டாலினிடம் இந்தக் குழு அறிக்கை அளிக்க உள்ளது.
ஒடிசா மாநிலம் பாலசோரில் மேற்கு வங்காளத்தில் இருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் உள்பட 3 ரயில்கள் மோதி விபத்துக்குள்ளாகின. நாட்டையே உலுக்கிய இந்த ரயில் விபத்தில் 278 பேர் பலியாகினர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இந்த விபத்து குறித்த தகவல் அறிந்தததும் உடனடியாக தமிழகத்தில் இருந்து அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சிவங்சங்கர் மற்றும் மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் அடங்கிய குழுவை தமிழக அரசு ஒடிசாவுக்கு அனுப்பியது.

விபத்தில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் யாராவது பாதிக்கப்பட்டு இருந்தால் அவர்களுக்கு உதவிடவும் தமிழகத்திற்கு அனுப்பி வைப்பதற்கான பணிகளை ஒருங்கிணைக்கும் பணிக்காவும் இந்தக் குழு அனுப்பி வைக்கப்பட்டது. ஒடிசா ரயில் விபத்தில் மீட்பு பணிகள் முடிந்த நிலையில், தமிழர்கள் யாருக்கும் பாதிப்பு இல்லை என்பதை இந்த குழு உறுதி செய்தது. அமைச்சர்கள் உதயநிதி, சிவசங்கர் நேற்று முன் தினம் தமிழகம் திரும்பிய நிலையில் அதிகாரிகள் குழு நேற்று இரவு வந்தது.
பணீந்திர ரெட்டி, அர்ச்சனா பட்நாயக், குமார் ஜெய்ந்த் உள்ளிட்டோர் அடங்கிய குழு சென்னை திரும்பியது. அப்போது சென்னை விமான நிலையத்தில் இந்தக் குழு செய்தியாளர்களிடம் கூறியதாவது:- ரயிலில் முன்பதிவு செய்தவர்களில் 17 பேர் ரயிலில் ஏறவில்லை. மீதமுள்ளவர்கள் அத்தனை பேரும் பத்திரமாக இருக்கிறார்கள் என்று உறுதி செய்து இருக்கிறோம். 6 பேரை மட்டும் தொடர்பு கொள்ள இயலவில்லை.

ஏனென்றால் கவுண்டர்கள் மூலமாக டிக்கெட் வாங்கி பயணித்து இருக்கிறார்கள். எனினும் அவர்கள் பயணித்த பெட்டியில் சக பயணிகளிடம் தொடர்பு கொண்டு அந்த பெட்டியில் எந்த வித அசம்பாவிதங்களும் நடைபெறவில்லை. அனைவரும் பத்திரமாக இருக்கிறார்கள் என்று உறுதி செய்து இருக்கிறோம். அதேபோல மருத்துவமனைகளில் 382 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். அதில் தமிழர்கள் யாரும் இல்லை.
எனவே இதுவரைக்கும் நமக்கு கிடைத்துள்ள தகவல் படி தமிழர்கள் அனைவரும் பத்திரமாக இருக்கிறார்கள். அனைவரும் அவர் அவர் இடங்களுக்கு சென்று இருக்கிறார்கள். நேற்று மட்டும் ஒருவர் காயங்களுடன் வந்து இருந்தார். அவர் ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிரார்" என்றனர். இன்று தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினை சந்திக்கும் இந்தக் குழுவினர் மீட்பு பணி தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து இன்று முதல்வரிடம் அறிக்கை அளிக்க உள்ளனர்.












Click it and Unblock the Notifications