சென்னை ஏசி மின்சார ரயில்: பயணிகள் எதிர்பார்த்தது சீக்கிரமே நடக்க போகுதா? அதிகாரிகள் சொன்ன ஜில் நியூஸ்
சென்னை: சென்னை கடற்கரை - செங்கல்பட்டு வழித்தடத்தில் தற்போது இயக்கப்படும் ஏசி மின்சார ரயிலில் சரசரியாக தினமும் 2,500 பயணிகள் மட்டுமே பயணிப்பதாக சொல்லப்படுகிறது. தற்போது படிப்படியாக பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், கட்டணம் குறைப்பது பற்றியும் கூடுதலாக ஒரு ரயில் இயக்குவது தொடர்பாகவும் அதிகாரிகள் ஆலோசிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னையில் பயணிகளின் போக்குவரத்து தேவையை பெரிதும் தீர்த்து வைப்பது புறநகர் மின்சார ரயில்கள்தான். சென்னை புறநகரில் இருந்து சென்னை நகருக்குள் பல்வேறு காரணங்களுக்காகவும் வருகை தரும் பயணிகள் புறநகர் மின்சார ரயில்களை நம்பியே உள்ளனர் என்றால் மிகையல்ல. கிட்டதட்ட 7 லட்சம் பயணிகள் பயணிப்பதாக தரவுகள் கூறுகின்றன.

ஏசி மின்சார ரயில் சேவை
சென்னை பீச் முதல் தம்பரம், செங்கல்பட்டு இடையே இயக்கப்படும் மின்சார ரயில்கள்தான் சென்னை மின்சார ரயில் வழித்தடங்களில் இதயப்பகுதி என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு மிக முக்கியமான வழித்தடமாக இது உள்ளது. கிண்டி, சைதாப்பேட்டை, மாம்பலம், எழும்பூர், பார்க் டவுன் என மிக முக்கியமான ரயில் நிலையங்கள் இந்த ரூட்டில் உள்ளன. இதனால், பயணிகள் அதிக அளவில் பயணம் செய்கிறார்கள்.
சென்னையில் மெட்ரோ பொன்று ஏசி வசதி கொண்ட மின்சார ரயில்கள் இயக்க வேண்டும் என்பது பயணிகளின் கோரிக்கையாக இருந்தது. வெயில் காலங்களில் சிரமம் இன்றி இந்த ரயில்களில் பயணிக்க முடியும் என்பதால் ஏசி மின்சார ரயில்களை இயக்க வேண்டும் என்ற கோரிக்கை பயணிகள் மத்தியில் எழுந்தது. பயணிகளின் கோரிக்கையை ஏற்கும் விதமாக கடந்த 19 ஆம் தேதி ஏசி மின்சார ரயில் சேவை அறிமுகம் செய்யப்பட்டது.
கூடுதலாக ஒரு ஏசி மின்சார ரயில்
முழுவதும் ஏசி வசதி கொண்ட இந்த ரயிலில் குறைந்தபட்ச கட்டணமாக ரூ. 35 ம், அதிகபட்சமாக ரூ.105 ம் வசூலிக்கப்படுகிறது. ஏசி மின்சார ரயில்கள் கிட்டத்தட்ட வந்தே பாரத் போல தோற்றத்தில் உள்ளது. முழுவதும் தானியங்கி கதவு, சிசிடிவி கேமரா, டிஜிட்டல் அறிவிப்பு பலகை உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன. இந்த ரயில் சேவை தற்போது ஒருநாளைக்கு 8 சேவைகள் இயக்கப்படுகிறது. வெயில் நேரத்தில், ஏசி ரயிலில் சென்றால் அவதி இன்றி சொகுசாக சென்றுவிடலாம் என நினைக்கும் பயணிகளுக்கு இந்த ரயில் சேவை வசதியாக உள்ளது.
இந்த நிலையில்தான் தற்போது கூடுதலாக ஒரு ஏசி ரயிலை இயக்க ரயில்வே அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் நடப்பு ஆண்டு 10 ஏசி மின்சார ரயில்கள் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாம். சென்னையில் அறிமுகம் செய்யப்பட்ட மின்சார ரயில்களில் பயணிகள் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருவதாகவும், இதனால், வரும் நாட்களில் பயணிகள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்ப்பதாக அதிகாரிகள் கூறினர்.
கட்டணமும் குறைக்கப்பட வாய்ப்பு
எனவே சென்னை கடற்கரை - செங்கல்பட்டு ரூட்டில் மேலும் ஒரு ஏசி மின்சார ரயில் சேவையை இயக்குவது குறித்து ஆலோசிப்பதாகவும், கட்டணம் குறைப்பு பற்றிய ஆலோசனையும் நடப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஏசி மின்சார ரயில்களில் கட்டணம் அதிகமாக இருப்பதே பயணிகள் அதிகம் அதில் பயணம் செய்யாததற்கு காரணம் என்று கூறும் பொதுமக்கள், கட்டணம் குறைக்கப்பட்டால் பயணிகளுக்கு பெரும் வசதியாக இருக்கும் எனவும் தற்போது பெரும்பாலான பெட்டிகள் காலியாகவே பயணிப்பதாகவும் பயணிகள் கூறுகிறார்கள். எனவே ரயில்களில் கட்டணம் குறைப்பது குறித்து ஆலோசனை செய்யப்படுவதாக அதிகாரிகள் கூறியிருப்பது ரயில் பயணிகளுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.












Click it and Unblock the Notifications