மழையால் நெல் சேதம்.. நனையாமல் தடுக்க 9 மாவட்டங்களுக்கு அதிகாரிகள் நியமனம்! தமிழக அரசு உத்தரவு!
சென்னை: மழை காரணமாக விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் சேதமடைவதை தடுக்க 9 மாவட்டங்களுக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் கடந்த சில நாட்களாகவே கோடை மழை பொழிந்து வருகிறது. தமிழகத்தின் பல இடங்களில் கனமழை கொட்டி வருகிறது. மேலும், தமிழகத்தில் மே 20ஆம் தேதி வரை கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் பரவலாக்கப்பட்ட நெல் கொள்முதல் திட்டத்தின் கீழ், தமிழக அரசின் நுகர்பொருள் வாணிப கழகம், விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்கிறது. இந்த நெல் அரிசியாக மாற்றப்பட்டு, ரேஷன் கடைகளில் இலவசமாக வழங்கப்படுகிறது.
நேரடி கொள்முதல் நிலையங்களில் போதிய இடவசதி இல்லை என்பதால் திறந்தவெளியில் நெல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்படுகின்றன. அவை தார்பாய் போட்டு முறையாக பாதுகாக்கப்படாததால், மழையின் போது நனைந்து சேதமடைந்து வருகின்றன.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ராமானுஜபுரத்தில் மதுரமங்கலம், சிவன்கூடல், மேல்மதுர மங்கலம் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகளிடம் இருந்து நேரடி கொள்முதல் செய்யப்பட்ட சுமார் 5000 நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம் அடைந்துள்ளன.
காஞ்சிபுரம் பகுதியில் பரவலாக மழை பெய்த நிலையில் ராமானுஜபுரம் அரசு கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்த 5,000க்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம் அடைந்துள்ளது.
அதிகாரிகளின் அலட்சியத்தின் காரணமாகவே நெல் மூட்டைகள் சேதம் அடைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை முறையாக தார்ப்பாய் கொண்டு மூடப்படாததால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலுார், மதுரை, திருநெல்வேலி, தென்காசி, திருவாரூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட ஒன்பது மாவட்டங்களில், விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்படும் நெல்லை பாதுகாக்க அதிகாரிகளுக்கு வாணிப கழகம் உத்தரவிட்டுள்ளது.
இந்த 9 மாவட்டங்களில், திறந்தவெளியில் வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகளை, உடனே நெல் சேமித்து வைக்கும் கிடங்குகளுக்கு அனுப்புமாறும், கிடங்குகளில் உள்ள நெல் மூட்டைகளை, அரவை ஆலைகளுக்கு அனுப்புமாறும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
மேலும், திறந்தவெளியில் வைக்கப்படும் நெல் மூட்டைகளின் மேல் தார்ப்பாய் போட்டு, நனையாதவாறு பாதுகாக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த பணிகள் சரிவர மேற்கொள்ளப்படுகிறதா என்பதை கண்காணிக்க, 9 மாவட்டங்களுக்கும் தலா ஒருவர் வீதம் கண்காணிப்பு அதிகாரிகளையும் வாணிப கழகம் நியமித்துள்ளது.












Click it and Unblock the Notifications