அன்னபூர்ணாவும் பாஜகவும்.. இது முதல்முறை இல்லை! எம்பி தேஜஸ்வி சூர்யா கிளப்பிய சர்ச்சை தெரியுமா
சென்னை: நிர்மலா சீதாராமன் கோவையில் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டத்தில் அன்னபூர்ணா நிர்வாக இயக்குநர் சீனிவாசன் பேசியது டிரெண்டான நிலையில், அவர் நிர்மலா சீதாராமனிடம் நேரில் மன்னிப்பு கேட்டதாக பாஜகவினர் வீடியோ பகிர்ந்தனர். இது இணையத்தில் மிகப் பெரிய விவாதத்தைக் கிளப்பியுள்ளது. அதேநேரம் பாஜகவால் அன்னபூர்ணா சர்ச்சையில் சிக்குவது இது முதல்முறை இல்லை. கடந்த 2021இல் இதேபோன்ற ஒரு சர்ச்சை கிளம்பியது . இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
சமீபத்தில் அமைச்சர் நிர்மலா சீதாராமன் கோவையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டார். அதில் பங்கேற்றுப் பேசிய அன்னபூர்ணா நிர்வாக இயக்குநர் சீனிவாசன், ஜிஎஸ்டி குறித்து கேள்வி பேசியிருந்தார்.

சர்ச்சை: ஒவ்வொரு பொருளுக்கும் ஒவ்வொரு ஜிஎஸ்டி இருப்பதால் சிரமமாக இருப்பதாகவும்.. அனைத்திற்கும் ஒரே ஜிஎஸ்டி போடுமாறும் அவர் கோரிக்கை விடுத்தார். கொங்கு ஸ்டைலில் அவர் பேசிய பேச்சு இணையத்தில் டிரெண்டானது. இதற்கிடையே நேற்றைய தினம் நிர்மலா சீதாராமனிடம் நேரில் மன்னிப்பு கேட்டதாக பாஜகவினர் வீடியோ பகிர்ந்தனர். இது கொங்குப் பகுதியில் மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது. பலரும் இதை விமர்சித்து வருகின்றனர்.
அதேநேரம் பாஜகவால் அன்னபூர்ணா சர்ச்சையில் சிக்குவது இது முதல்முறை இல்லை. கடந்த 2021இல் தமிழ்நாடு சட்டசபைத் தேர்தல் சமயத்தில் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக பாஜக இளைஞரணி தலைவரும் எம்பியுமான தேஜஸ்வி சூர்யா பிரச்சாரம் செய்தார். அவர் கோவையிலேயே தங்கி பிரச்சாரம் செய்து வந்தார்.
தேஜஸ்வி சூர்யா: அப்போது அவர் அன்னபூர்ணா உணவகத்தில் காலை டிபன் சாப்பிட்டாராம். அப்போது அங்கு ஒரு சம்பவம் நடந்ததாகக் கூறி, திமுகவைச் சீண்டும் வகையில் தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார். அப்போது தேஜஸ்வி சூர்யா தனது ட்விட்டரில், "காலை சிற்றுண்டியை இந்த ஹோட்டலில் சாப்பிட்டேன். பில் வந்தது நானும் பணம் செலுத்தப் போனேன்.. ஆனால், அங்கிருந்த கேஷியர் என்னிடம் பணம் வாங்கத் தயங்கினார். நான் பணம் வாங்க வலியுறுத்திய பிறகே அவர் நீண்ட தயக்கத்துடன் பெற்றுக் கொண்டார்.
"கோவையின் பெருமை.." சாதாரண டீ கடை டூ ஹோட்டல் சாம்ராஜ்ஜியம்.. இதுதான் அன்னபூர்ணா ஹோட்டல் வரலாறு
அப்போது நான் அவரிடம் கூறினேன்.. நாங்கள் பாஜகவைச் சேர்ந்தவர்கள்.. எல்லாரையும் மதிப்போம். சிறு சிறு வணிகர்களுக்கும் துன்பத்தை ஏற்படுத்தும் திமுக போல் நாங்கள் நடந்து கொள்ள மாட்டோம்" என்று பதிவிட்டிருந்தார். அந்த ட்வீட் அப்போது இணையத்தில் வேகமாகப் பரவியது. அது தேர்தல் நேரம் என்பதால் இது பேசுபொருளானது. பாஜக ஆதரவாளர்கள் பலரும் தேஜஸ்வி சூர்யாவுக்கு ஆதரவாக திமுகவை கடுமையாக விமர்சித்து கருத்துகளைப் பதிவிட்டனர்.
விளக்கம்: அவரது பதிவு அப்போது விவாதத்தைக் கிளப்பிய நிலையில், அன்னபூர்ணா உணவகம் அப்போதே விளக்கம் ஒன்றையும் அளித்திருந்தது. தேஜஸ்வி சூர்யாவின் போஸ்ட்டிற்கு பதிலளித்த அன்னபூர்ணா நிர்வாகம், "எங்கள் உணவகத்திற்கு நீங்கள் வந்தது மகிழ்ச்சி. நாங்கள் இங்கு அனைவரையும் ஒரே விதமான அன்பு மற்றும் நன்றியோடு அணுகுகிறோம்.
எங்கள் கடையில் சாப்பிட வரும் அனைவரும் பில்லுக்கு பணம் கொடுக்கிறார்கள். யாரும் இலவசமாக உணவு வேண்டும் என்று எங்களை வற்புறுத்துவதில்லை. அதேநேரம் சமூகத்திற்கு உழைப்பவர்களுக்கு மரியாதை செலுத்த வேண்டும் என்பதற்காக நாங்களே சில சமயம் சிலரிடம் பணம் பெறு மறுத்துவிடுவோம்" என்று விளக்கமளித்து, அந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்தது குறிப்பிடத்தக்கது.
அண்ணாமலை: இப்போது 3 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், மீண்டும் அன்னபூர்னா பாஜக சர்ச்சை ஏற்பட்டுள்ளது. அன்னபூர்ணா நிர்வாக இயக்குநர் சீனிவாசனை கட்டாயப்படுத்தி நிர்மலா சீதாராமனிடம் மன்னிப்பு கேட்க வைத்ததாகக் கொங்கு மண்டலத்தில் பலரும் அதிருப்தி தெரிவித்து வருகிறார்கள். இது பெரிய சர்ச்சையாக வெடித்ததைத் தொடர்ந்தே அண்ணாமலை இப்போது இந்த விவகாரத்தில் மன்னிப்பு கேட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications