முட்டி தூக்கிய மாடு.. சாலையில் நடந்து வந்த முதியவர் உயிரிழப்பு.. தொடரும் சம்பவங்களால் மக்கள் பீதி
சென்னை: சென்னையை அடுத்த நங்கநல்லூரில் எருமை மாடுகள் முட்டியதில் முதியர் பலியானார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் தெருக்களில் சுற்றி திரியும் மாடுகள் பொதுமக்களை தாக்கும் சம்பவங்கள் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. தெருக்களில் மாடுகள் சுற்றி திரிந்தால் வளர்ப்பவர்கள் மீது வழக்கு தொடுக்கப்படும் என்று சென்னை மாநகராட்சியும் எச்சரிக்கை விடுத்தது. இந்த நிலையில் சென்னையில் மீண்டும் அதுபோன்ற ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. இது குறித்த விவரம் வருமாறு:-

சென்னையை அடுத்த நங்கநல்லூர் ஸ்டேட் பாங்க் காலனி பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர் (வயது 63). சென்னை ரயில்வே தபால் துறையில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்ற இவர் நேற்று மாலை நங்கநல்லூர் எம்ஜிஆர் சாலையில் நடந்து சென்றார். அப்போது சாலையில் 2 எருமை மாடுகள் சண்டைபோட்டு கொண்டபடி ஓடிவந்தன. அந்த மாடுகள், அங்கு சாலையை கடந்து செல்வதற்காக நின்ற சந்திரசேகரை முட்டின.
இதில் சந்திரசேகர் படுகாயம் அடைந்து அதே இடத்தில் மயங்கி விழுந்தார். அங்கிருந்தவர்கள் சந்திரசேகரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே சந்திரசேகர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். மாடு முட்டியதில் சந்திரசேகர் உயிரிழந்தது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
நங்கநல்லூர் பகுதிகளில் கடந்த ஆண்டு மாடுகள் முட்டியதில் சிலர் காயம் அடைந்தனர். தெருவில் வாகன ஓட்டிகளுக்கும் இடையூறாகவும் மக்களை அச்சுறுத்தும் வகையிலும் சுற்றி திரியும் கால்நடைகளை மீட்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில், எருமை மாடுகள் முட்டியதில் முதியவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications