பிப்.19-ல் திருச்சியில் DIG வருண்குமார் வழக்கு,சென்னையில் விஜயலட்சுமி கேஸ் தீர்ப்பு-அல்லாடும் சீமான்
சென்னை: நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வரும் 19-ந் தேதி திருச்சி நீதிமன்றத்திலும் சென்னை நீதிமன்றத்திலும் நேரில் ஆஜராக வேண்டிய நெருக்கடிக்குள்ளாகி இருக்கிறார். திருச்சி நீதிமன்றத்தில் டிஐஜி வருண்குமார் தொடர்ந்த வழக்கில் சீமான் கண்டிப்பாக ஆஜராக உத்தரவிடப்பட்டிருந்தது; அதேபோல நடிகை விஜயலட்சுமி வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் பிப்ரவரி 19-ந் தேதி தீர்ப்பளிக்க இருப்பதால் சீமான் ஆஜராக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
டிஐஜி வருண்குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் குறித்து பொதுவெளி மற்றும் சமூக வலைதளங்களில் சீமானும் அவரது கட்சி நிர்வாகிகளும் அவதூறான செய்திகளை பரப்பி வருவதாக திருச்சி நீதிமன்றத்தில் டிஐஜி வருண்குமார் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் திருச்சி நீதிமன்றத்தில் ஆஜராகி டிஐஜி வருண்குமார் தமது தரப்பு வாதங்களை முன்வைத்து வருகிறார். ஆனால் இந்த வழக்கில் சீமான் ஆஜராகவில்லை. இதனைத் தொடர்ந்து பிப்ரவரி 19-ந் தேதி சீமான் திருச்சி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும்; சீமானுக்காக வழக்கறிஞர்கள் மட்டுமே அன்றைய தினம் ஆஜராகவும் கூடாது என கண்டிப்பாக உத்தர்வு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே தம்மை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றிவிட்டதாக சீமான் மீது நடிகை விஜயலட்சுமி தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வந்தது. மேலும் தம் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று சீமான் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை முடிவடைந்து தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர், விஜயலட்சுமி தம் மீது தொடர்ந்த வழக்கை ரத்து செய்ய கோரி சீமான் தாக்கல் செய்த மனு மீது பிப்ரவரி 19-ந் தேதி தீர்ப்பளிக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்திருந்தது. இதனால் சென்னை உயர்நீதிமன்றத்திலும் சீமான் வரும் 19-ந் தேதி ஆஜராக வேண்டும்.
மேலும் தந்தை பெரியார் இயக்கத்தின் தொண்டர்கள் மீது வெடிகுண்டு வீசுவேன் என சீமான் பேசியது தொடர்பான புகார் குறித்த விசாரணைக்காக ஈரோடு போலீசார் முன்பாக சீமான் வரும் 20-ந் தேதி ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. அதேபோல தந்தை பெரியார் குறித்து இழிவாக பேசியது தொடர்பாக புகார்கள் குறித்த விசாரணைக்கு சீமான் ஆஜராக வேண்டும் என வடலூர் மற்றும் ராணிப்பேட்டை போலீசாரும் சீமான் வீடு மற்றும் நாம் தமிழர் கட்சி அலுவலகத்திலேயே நேரில் சம்மன் கொடுத்துள்ளனர். இந்த வழக்குகளில் சீமான் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் எனவும் கூறப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications