புன்னகை இருக்க..பொன்னகை எதற்கு? ஒன் கிராம் கோல்டுக்கு மாறும் தெற்காசிய மணமகள்ஸ்! மாப்பிள்ளைகள் ஷாக்!
சென்னை: தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே செல்லும் நிலையில், தெற்காசிய நாடுகளில் திருமணத்துக்கு திட்டமிடும் குடும்பங்கள் புதிய மாற்றத்தை நோக்கி நகர்ந்து வருகின்றன. பாரம்பரியமாக திருமணங்களில் முக்கிய இடம் பிடித்திருந்த தூய தங்க நகைகளுக்கு பதிலாக, தற்போது 'ஒன் கிராம்' நகைகள் மற்றும் தங்க முலாம் பூசப்பட்ட (gold-plated) நகைகள் அதிகமாக தேர்வு செய்யப்படுகின்றன. அதிகரித்து வரும் விலை காரணமாக, நடுத்தர மற்றும் ஏழை குடும்பங்களுக்கு தூய தங்க நகைகள் வாங்குவது மிகவும் கடினமாகி விட்டதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
தெற்காசிய நாடுகளில், குறிப்பாக இந்தியா, பாகிஸ்தான், வங்காளதேசம் போன்ற பகுதிகளில் திருமணங்களில் தங்க நகைக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. ஒரு பெண் திருமணம் ஆகும் போது, அவள் அணியும் தங்க நகைகள் குடும்பத்தின் மரியாதையையும், சமூக நிலையில் அவளுக்குக் கிடைக்கும் மதிப்பையும் நிர்ணயிக்கும் என்ற பாரம்பரிய நம்பிக்கை இன்னும் பல இடங்களில் நிலவுகிறது.

அதனால் திருமண நகைகளுக்காக பெற்றோர்கள் கடன் வாங்கி கூட தங்கம் வாங்கும் சூழ்நிலை இருந்தது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்ததால், இந்த நிலைமையில் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது.
ஒன் கிராம் கோல்டு
குறிப்பாக இந்த ஆண்டு தங்கம் விலை உலகளவில் மிக உயர்ந்த அளவுக்கு சென்றுள்ளது. இதன் தாக்கமாக, தங்க நகைகள் வாங்கும் அளவு குறைந்துள்ளதாக சந்தை ஆய்வுகள் தெரிவிக்கின்றன. திருமண திட்டங்களை மாற்றிக் கொள்ளும் நிலையும் பல குடும்பங்களில் உருவாகியுள்ளது. இந்த நிலையில் 'ஒன் கிராம்' நகைகள் என்ற புதிய மாற்று வழி அதிக வரவேற்பைப் பெறத் தொடங்கியுள்ளது. இவை உண்மையான தங்கத்தால் செய்யப்படாத நகைகள் என்றாலும், மேற்பரப்பில் மெல்லிய தங்க பூச்சு பூசப்பட்டிருப்பதால், பார்ப்பதற்கு தூய தங்கம் போலவே தோற்றமளிக்கும்.
போலி நகை
அதே நேரத்தில், இதன் விலை தூய தங்க நகைகளை விட பல மடங்கு குறைவாக இருக்கும். இதனால் திருமணச் செலவுகளை குறைக்க விரும்பும் குடும்பங்களுக்கு இது ஒரு பெரிய உதவியாக மாறியுள்ளது. தெற்காசிய நாடுகளில் உள்ள பல நகரங்களில் தற்போது போலி நகை கடைகளில் கூட்டம் அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் கூறுகின்றனர். முன்னர் 10 பேரில் பெரும்பாலானோர் தங்க நகை வாங்கிய நிலையில், தற்போது சிலர் மட்டுமே தூய தங்கம் வாங்குகின்றனர்.
கோல்ட் பிளேட்டட் நகை
மீதமுள்ளவர்கள் ஒன் கிராம் அல்லது தங்கம் பூசப்பட்ட நகைகளையே தேர்வு செய்கிறார்கள். குறிப்பாக நடுத்தர குடும்பங்கள் திருமணச் செலவுகளை கட்டுப்படுத்த இந்த முறையை அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர். மேலும், பாதுகாப்பு காரணங்களும் இந்த மாற்றத்திற்கு காரணமாக இருக்கின்றன. அதிக விலை மதிப்புள்ள தங்க நகைகளை அணிந்து செல்லும்போது திருட்டு அபாயம் அதிகம் இருப்பதால், பல பெண்கள் நிகழ்ச்சிகளுக்கு ஒன் கிராம் நகைகளை அணிவது பாதுகாப்பாக இருக்கும் என நினைக்கின்றனர்.
தூய தங்கம்
இதனால் விழாக்கள் மற்றும் குடும்ப நிகழ்ச்சிகளுக்காக தனித்தனியாக நகைகளை வாங்கும் பழக்கமும் அதிகரித்துள்ளது. ஆனால் இந்த மாற்றம் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. சில குடும்பங்கள் இன்னும் தூய தங்க நகைகளையே விரும்புகின்றனர். ஏனெனில், தங்கம் என்பது ஒரு முதலீடு என்ற எண்ணம் பலரிடம் இன்னும் வலுவாக உள்ளது. எதிர்காலத்தில் அவசரத் தேவைக்கு பயன்படுத்தும் சொத்தாக தங்கத்தை பார்க்கும் மனப்பான்மை காரணமாக, சிலர் குறைந்த அளவிலாவது தூய தங்கம் வாங்க முயற்சி செய்து வருகின்றனர்.
அதிக தங்கம் = அதிக மரியாதை
தங்கம் விலை உயர்வு தெற்காசிய நாடுகளில் திருமண கலாச்சாரத்தையே மெதுவாக மாற்றி வருகிறது. பாரம்பரியமாக இருந்த "அதிக தங்கம் = அதிக மரியாதை" என்ற எண்ணம் மாறி, "செலவுக்கு ஏற்ற நகை" என்ற நடைமுறை அணுகுமுறைக்கு குடும்பங்கள் நகர்ந்து வருவது தெளிவாக தெரிகிறது. எதிர்காலத்தில் தங்கம் முதலீட்டு பொருளாக மட்டுமே பார்க்கப்பட்டு, திருமணங்களில் அதன் பயன்பாடு குறைய வாய்ப்பு இருப்பதாக சந்தை நிபுணர்கள் கணிக்கின்றனர்.














Click it and Unblock the Notifications