முதலுக்கே மோசம்! தவெக நிலைமை மைனஸில் போகிடும் போலயே! விஜய் வாங்கிய மார்க்கை பாருங்க!
சென்னை: ஓராண்டை நிறைவு செய்த விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் செயல்பாட்டுக்கு எத்தனை மார்க் கொடுப்பீர்கள் என ஒன்இந்தியாதமிழ் வாசகர்களிடம் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் விஜய்க்கு அதிர்ச்சி அளிக்கும்படியான ரிசல்ட்கள் வந்துள்ளன.
எம்ஜிஆர், என்டி ராமாராவ், ஜெயலலிதா, விஜயகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட திரை நட்சத்திரங்கள் திரையில் மட்டுமல்லாமல் அரசியலிலும் தடம் பதித்தனர். அந்த வகையில் தற்போது விஜய்யும் தமிழக வெற்றிக் கழகம் எனும் அரசியல் கட்சியை தொடங்கியுள்ளார்.

இந்த கட்சித் தொடங்கி தற்போது ஓராண்டு நிறைவடைந்து இரண்டாம் ஆண்டு விழாவில் காலடி எடுத்து வைத்துள்ளது. விஜய்யின் மக்கள் இயக்கம் இருந்த போதிலிருந்தே ரசிகர்கள் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்திருந்தனர்.
இதைத் தொடர்ந்து அரசியல் கட்சியானதும் தற்போதும் தவெக நிர்வாகிகள் நிறைய நலத்திட்டங்களை வழங்கி வருகிறார்கள். விஜய்யும் கடந்த இரு ஆண்டுகளாக தமிழகம் முழுவதும் பிளஸ் 2, 10ஆம் வகுப்பு தேர்வுகளில் சிறப்பிடம் பெறும் மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி வந்தார்.
அது போல் சென்னை மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட டி.பி.சத்திரம் மக்களை தனது பனையூர் அலுவலகத்திற்கு சொந்த செலவில் அழைத்து வந்து நலத்திட்ட உதவிளை வழங்கியிருந்தார். அது போல் பரந்தூர் விமான நிலைய திட்டத்தை எதிர்த்து போராடி வரும் மக்களை சந்தித்து பேசினார்.
இப்படி விஜய் தனது அரசியலில் பேபி ஸ்டெப்புகளை எடுத்து வைத்து வரும் நிலையில் அவருடைய அரசியல் மக்களுடன் மக்களாக இல்லை என விமர்சனங்கள் எழுகின்றன. அது போல் லாட்டரி ஏஜென்ட் மார்டினின் மருமகன் ஆதவ் அர்ஜுனாவை கட்சியில் இணைத்துக் கொண்டு எப்படி ஊழலை ஒழிக்க வேண்டும் என விஜய் கூறுகிறார் என்ற கேள்வியும் எழாமல் இல்லை.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என கூறி தமிழக ஆளுநரிடம் மனு கொடுக்க சென்ற விஜய், குறைந்தபட்சம் பத்திரிகையாளர்களை கூட சந்திக்கவில்லை. இப்படி மக்களுடனும், 4ஆம் தூணான பத்திரிகையாளர்களுடனும், கட்சி நிர்வாகிகளுடனும் ஒட்டாமல் விஜய் இருந்து வருகிறார் என்ற பேச்சுகளும் எழுந்தன. எப்போதும் பவுன்சர்களுடனேயே விஜய் வலம் வருகிறார். அது போல் அறிக்கையின் மூலம் அரசியல் நடத்துகிறார்.
இத்தனை சர்ச்சைகளுக்கு மத்தியில் தவெக ஓராண்டு நிறைவு செய்த நிலையில் அந்த கட்சியின் செயல்பாட்டுக்கு எத்தனை மார்க் போடுவீர்கள் என ஒன்இந்தியாதமிழ் இணையதளத்தில் வாசகர்களிடம் ஓபனாக கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டிருந்தது.
விஜய் கட்சியின் செயல்பாட்டுக்கு ஃபெயில் மார்க், 35 முதல் 70 மார்க், 71 முதல் 100 மார்க் என 3 ஆப்ஷன்களை கொடுத்திருந்தார். இதில் ஒரே நாளில் சுமார் 7000 பேர் வாக்குகளை செலுத்தியிருந்தனர். இதில் ஃபெயில் மார்க் என்பதற்கு 67.79 சதவீதம் பேரும், 35 முதல் 70 மார்க் என்பதற்கு 20.5 சதவீதம் பேரும், 71 முதல் 100 என்பதற்கு 11.71 சதவீதம் பேரும் வாக்களித்திருந்தனர்.
தொலைக்காட்சி விவாதங்களிலும் வரும் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் விஜய் ஒரு போட்டியாகவே இருக்க மாட்டார் என அரசியல் பார்வையாளர்கள் சொல்கிறார்கள். ஆனால் விஜய்யோ 2026 ஆம் ஆண்டு ஆட்சியை பிடிப்போம் என்று கூறி வருகிறார். அவருடைய நிர்வாகிகளோ, விஜய் முதல்வராவார் என்று கூறி வருகிறார்கள்.
பொதுவாக யார் அரசியல் கட்சியை தொடங்கினாலும் முதல்வர் கனவுடனேயே வருகிறார்கள் என்றும் மக்களோடு மக்களாக பழகாமல் அவர்களது குறைகளை கேட்காமல், அவர்களுக்கான நியாயங்களை பெற்றுத் தர போராடாமல் திடீரென என்னை முதல்வராக்குங்கள் என ஒரு அரசியல் கட்சித் தலைவர் கேட்டால் அவருக்கு மக்கள் வாக்களித்துவிடுவார்களா? என்பதை யாராக இருந்தாலும் சிந்திக்க வேண்டும்.
வெறும் திரைப்படத்தின் புகழை மட்டுமே வைத்துக் கொண்டு அரசியலில் ஜெயித்துவிடலாம் என கனவு காண்பது நடக்காத ஒன்று என்றும் எப்போதும் ஹைடெக் அரசியல் தமிழகத்திற்கு ஒத்து வராது என்றும் விவரம் அறிந்தவர்கள் கூறுகிறார்கள்.












Click it and Unblock the Notifications