"சல்லி சல்லியாக உடையும்".. இது ரொம்ப பெரிய தப்பு.. பாஜகவின் மேஜர் பிளான்.. எச்சரிக்கும் புள்ளி!
சென்னை: ஒரே நாடு ஒரே தேர்தல் வந்தால் கூட்டாச்சி தத்துவம் போகும், இது ஆட்சியர்களின் மிக மோசமான திட்டம், . இந்த ஆட்சியர்களின் இந்த போக்குகள் தொடர்ந்தால் இந்தியா உடைந்தால் கூட ஆச்சரியப்படுவதற்கு இல்லை, என்று மூத்த பத்திரிகையாளர் மணி தெரிவித்துள்ளார்.
ஒரு நாடு ஒரு தேர்தலை நாடு முழுக்க கொண்டு வருவதற்காக பாஜக தீவிரமாக முயன்று வருகிறது. தமிழ்நாட்டில் இருந்து அதிமுக மட்டுமே இந்த ஒரு நாடு ஒரு தேர்தலை தீவிரமாக ஆதரிக்கிறது. அதிமுக இந்த முறையை ஆதரித்து உள்ளது.
2024ல் ஒருநாடு ஒரு தேர்தலை நாடு முழுக்க கொண்டு வர மத்திய அரசு தீவிரமாக முயன்று வருகிறது. இந்த திட்டம் தொடர்பாக மக்களவையில் எம்பிக்கள் இருக்கும் கட்சிகளிடமும் தேர்தல் ஆணையம் கருத்து கேட்டுள்ளது. இந்த நிலையில்தான் ஒரே நாடு ஒரே தேர்தல் மாதிரியான தேர்தல் இந்தியாவிற்கு ஆபத்து ஏற்படும் என்று மூத்த பத்திரிக்கையாளர் மணி ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

பேட்டி
அவர் அளித்துள்ள பேட்டியில், ஒரே நாடு ஒரே தேர்தல் வந்தால் கூட்டாச்சி தத்துவம் போகும். உதாரணமாக சட்டசபை, நாடாளுமன்றத்திற்கு ஒன்றாக தேர்தல் வருகிறது என்று வைத்துக்கொள்வோம். இடையில் ஒரு மாநிலத்தில் முதல்வர் ஆட்சியை கலைக்க விரும்புகிறார். எம்எல்ஏக்கள் விரும்புகிறார்கள் என்றால் என்ன நடக்கும்? இது அவர்களுக்கு இருக்கும் முழு உரிமை. ஆனால் இதைதான் ஒரு நாடு ஒரு தேர்தல் குலைக்கும். படிக்கிறது ராமாயணம், இடிக்கிறது பெருமாள் கோவில் என்பார்கள். அதைத்தானே இவர்கள் செய்து கொண்டு இருக்கிறார்கள். மாநிலங்களுக்கு இருக்கும் உரிமைகளை குறைக்க இவர்கள் பார்க்கிறார்கள்.

மாநிலங்கள்
மாநிலங்களுக்கு இருக்கும் அதிகாரங்களை இந்திரா காந்தி குறைந்தார். அதை மோடி மொத்தமாக காலி செய்ய பார்க்கிறார். இந்திரா காந்தியின் நேரடி வாரிசாக மோடி இல்லாமல் இருக்கலாம். ஆனால் மோடி இந்திரா காந்தியின் அரசியல் வாரிசு. இடைத்தேர்தல்கள் இதில் எப்படி சார் நடக்கும்? ஒரு மாநிலத்தில் 1 வருடத்தில் ஆட்சி கவிழ்ந்தால் என்ன நடக்கும்? 4 வருடம் ஜனாதிபதி ஆட்சி இருக்குமா? மத்தியில் ஆட்சி கவிழ்ந்தால் என்ன நடக்கும்? இவர்கள் என்ன செய்வார்கள்?

வரலாறு
இந்தியாவின் வரலாறு என்பது 73 ஆண்டுகள்தான். மாடர்ன் ஜனநாயகமாக 73 ஆண்டுகள்தான். ஒரு நாடாக நம்முடைய வரலாறு என்பது இவ்வளவுதான். பல மொழிகள், இனங்கள் கொண்ட நாடுதான் இந்தியா. சுதந்திரத்திற்கு பின் இந்தியா ஒன்றாக இருப்பதே ஆச்சர்யம்தான். ஆனால் இது உடைந்தால் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. அதில் வருத்தம் இருக்கும். ஆனால் இந்தியாவின் வேற்றுமையில் ஒற்றுமையை இவர்கள் குலைக்க பார்க்கிறார்கள். இந்த ஒற்றுமையை இவர்கள் குலைத்தால்நாட்டிற்கே சிக்கல் ஏற்படும்.

மொழி
ஒவ்வொரு 200 கிமீ தூரத்திற்கு மக்களின் மொழி, கலாச்சாரம் மாறும். நாம் பன்முகத்தன்மை கொண்ட நாடு. இதுதான் இந்தியாவின் ஆன்மா. ஆனால் இவர்கள் ஒருமுகத்தன்மையை கொண்டு வர பார்க்கிறார்கள். அது பெரிய தவறு. ஒரே மொழி கொண்ட ஜெர்மனி, கொரியா போன்ற நாடுகள் கூட உடைந்துள்ளன. இந்த ஆட்சியர்களின் இந்த போக்குகள் தொடர்ந்தால் இந்தியா உடைந்தால் கூட ஆச்சரியப்படுவதற்கு இல்லை. இதை நான் சொல்லவில்லை. ப. சிதம்பரம் சொல்லி இருக்கிறார். காஷ்மீரை உடைத்தார்களே? அவர்களின் உணர்வுகளை பற்றி அவர்கள் நினைத்து பார்த்தார்களா?

காஷ்மீர்
காஷ்மீரில் இப்போது பண்டிட்கள் பாதுகாப்பாக இருக்கிறார்களா? 370 ஐ நீக்கிய பின் அவர்கள் பாதுகாப்பாக இருக்கிறார்களா? இந்தியாவில் யாரும் தனி நாடு கேட்கவில்லை. இந்தியாவின் ஒற்றுமையில் நமக்கு இருக்கும் பங்கு குஜராத்திகளுக்கு இருக்கும் பங்கை விட பெரியது. ஆனால் அந்த ஒற்றுமையை சிதைக்க பார்க்கிறார்கள். ஒற்றை தேர்தல் மூலம் ஒற்றை தன்மை வரும் என்று இவர்கள் நினைக்கிறார்கள். இதனால் இந்தியாவின் பன்முகத்தன்மை சிதையும்.

பெரிய தேசம்
இவ்வளவு பெரிய தேசத்தில் இந்த திட்டத்தை கொண்டு வருவது சாத்தியம்தான். ஆனால் இதற்கு அரசியல் ரீதியாக மாற்றம் கொண்டு வர வேண்டும். அரசியலமைப்பு சட்டத்தை மாற்ற வேண்டும். தேர்தலை நடத்துவது செயல்முறை ரீதியாக பிரச்சனை இல்லை. ஆனால் அரசியலமைப்பு ரீதியாக இதில் பிரச்சனை உள்ளது. அரசியல் ரீதியாக கூட்டாச்சி தத்துவத்திற்கு எதிரானது? 5 வருடத்திற்கு இடைப்பட்ட காலத்தில் மத்திய அரசோ, மாநில அரசோ கவிழ்ந்தால் என்ன நடக்கும்?, என்று பத்திரிகையாளர் மணி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications