சென்னையில் லாரியில் சிக்கி இன்சூரன்ஸ் அதிகாரி பலி.. ஐஏஎஸ் அதிகாரியின் மனைவிக்கு கால்கள் நசுங்கியது
சென்னை: மாதவரம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற போது கன்டெய்னர் லாரியில் சிக்கி இன்சூரன்ஸ் நிறுவன பெண் அதிகாரி சொர்ணலட்சுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது தோழியான ஐஏஏஸ் அதிகாரி செல்வம் என்பவரின் மனைவி பிரபாவிற்கு 2 கால்களும் நசுங்கியது.அவர் ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்த 40 வயதாகும் சொர்ணலட்சுமி என்பவர் இன்சூரன்ஸ் நிறுவனம் ஒன்றில் அதிகாரியாக வேலை செய்து வந்தார். விருகம்பாக்கத்தில் அதே பகுதியைச் சேர்ந்த 42 வயதாகும் பிரபா , இன்சூரன்ஸ் அதிகாரி சொர்ணலட்சுமியின் தோழியாவார். பிரபா யார் என்றால், மத்திய அரசு பணியில் உள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரி செல்வம் என்பவரது மனைவி ஆவார்.

இன்சூரன்ஸ் அதிகாரி சொர்ணலட்சுமியும், ஐஏஎஸ் அதிகாரியின் மனைவியான பிரபாவும் இருசக்கர வாகனம் ஒன்றில் நேற்று முன்தினம் வெளியில் கிளம்பி சென்றனர். அவர்கள் இருவரும் சென்னையை அடுத்த மாதவரம் பால்பண்ணை சின்ன மாத்தூர் பகுதியில் உள்ள இவர்களது கல்லூரி தோழி ஒருவரின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டனர். பின்னர் இருசக்கர வாகனத்திலேயே மீண்டும் வீட்டுக்கு திரும்பி சென்று கொண்டிருந்தனர்.
சென்னை மாதவரம் சின்ன ரவுண்டானா அருகில் வந்து கொண்டிருந்தனர். அப்போது இவர்களுக்கு பின்னால் வேகமாக வந்த கன்டெய்னர் லாரி இவர்களது இருசக்கர வாகனம் மீது டமால் என மோதியது. இதில் இருவரும் நிலைதடுமாறி இருசக்கர வாகனத்தோடு கீழே விழுந்தனர். இதில் சாலையின் நடுவில் விழுந்த இரண்டு பேர் மீதும் லாரி சக்கரம் ஏறி இறங்கியது. லாரி சக்கரத்தில் சிக்கியதில் படுகாயம் அடைந்த சொர்ணலட்சுமி, அதே இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். ஐஏஎஸ் அதிகாரியின் மனைவி பிரபாவுக்கு 2 கால்களும் நசுங்கின.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், உயிரிழந்த சொர்ணலட்சுமி உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காயம் அடைந்த ஐஏஎஸ் அதிகாரி மனைவி பிரபாவை உடனடியாக மீட்டு, சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்கு சேர்ந்தனர். இந்த விபத்து குறித்து மாதவரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து கன்டெய்னர் லாரி டிரைவரான மதுரையைச் சேர்ந்த பாண்டியராஜன் (44) என்பவரை கைது செய்தனர்.
பொதுவாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அதிகப்படியான வாகன நெரிசல் காரணமாக இருசக்கர வாகனத்தில் வாகன ஓட்டிகள் செல்வது சவாலானதாக மாறி வருகிறது. சாலையை மற்ற ஊர்களை போல் கடந்து விட முடியாது. இண்டிக்கேட்டர் போடாமல் வண்டியை திருப்ப முயன்றால் பின்னால் வேகமாக வரும் வாகனங்கள் மோதிவிடுகின்றன.. அதேபோல் சென்னைக்குள் அசுர வேகத்தில் வரும் வாகனங்கள், முன்னால் செல்லும் வாகனங்கள் மெதுவாக சென்றாலோ அல்லது பிரேக் பிடித்தபடி சென்றாலோ விபத்தில் சிக்கும் வாய்ப்பு உள்ளது.
இருசக்கர வாகன ஓட்டிகள் அவர்களுக்கு ஈடுகொடுத்து வேகமாக சென்றால் தப்பிக்க முடிகிறது. இல்லாவிட்டால் ஓரத்தில் தான் செல்ல வேண்டிய நிலை இருக்கிறது. சென்னைக்குள் வேகக்கட்டுப்பாடு என்ற ஒன்று உள்ளதை பலரும் மதிப்பது இல்லை.. அதுவே இதுபோன்ற விபத்திற்கு காரணங்களாக உள்ளது.












Click it and Unblock the Notifications