1000 பொங்கல் பரிசும் போச்சு.. 6000 வெள்ள நிவாரணமும் போச்சு.. சென்னை வாழ் வெளியூர் மக்களின் மிஸ்டேக்
சென்னை: ஒரே ஒரு சின்ன தவறால் 6000 வெள்ள நிவாரணமும் கிடைக்கவில்லை.. 1000 பொங்கல் பரிசும் போச்சு.. சொந்த ஊரை விட்டு சென்னை வந்து வாழும் மக்களின் அவஸ்தையை பாருங்கள். வெளியூர் ரேஷன் கார்டு வைத்து சென்னையில் வசித்து வருவோர், அப்படி என்ன தவறு செய்தார்கள் என்பதை பார்ப்போம்.
தமிழ்நாட்டில் 2023 டிசம்பர் 3 மற்றும் 4 ஆகிய நாட்களில் வீசிய மிகஜாம் புயல் காரணமாக சென்னை மாவட்டத்தில் அதிக மழை பெய்தது. மேலும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களிலும் குறிப்பிட்ட சில வட்டங்களில் மிக கனமழை பெய்தது. இதனால் பொதுமக்களுக்கு கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டு அவர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டது.

இதையடுத்து மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவித் தொகையாக ரூ.6000 வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அதன்படியே வெள்ள நிவாரணம் 6000 ரூபாய் ரேஷன் கார்டு வைத்துள்ளவர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டது.
அதேநேரம் மழை வெள்ளத்தால் மத்திய, மாநில அரசு ஊழியர்கள், பொதுத்துறை நிறுவன உயர் அலுவலர்கள், வருமான வரி செலுத்துவோர், சர்க்கரை விருப்ப குடும்ப அட்டைதாரர்கள் தங்கள்து வாழ்வாதாரம் பாதிப்பு, துணி, பாத்திரங்கள், வீட்டு உபயோகப்பொருட்கள் இழப்பு ஏற்பட்டிருந்தாலும், பாதிப்பு விவரங்களை தங்களது வங்கி கணக்கு விவரத்துடன் தங்கள் பாதிப்புக்குரிய ரேஷன் கடைகளில் விண்ணப்பிக்கலாம்.
அந்த விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு, அதனடிப்படையில் அவர்களுக்கு உரிய நிவாரணம் அவர்களின் வங்கி கணக்கில் அனுப்பி வைக்கப்படும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதன்படி விண்ணப்பங்களை பூர்த்தி செய்து மக்கள் வழங்கினர். சுமார் 5.5 லட்சம் பேர் 6000 நிவாரணம் கேட்டு விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பித்து ஒரு மாதம் ஆக உள்ள நிலையில, இதுவரை 6000 நிவாரணம் வங்கி கணக்கிற்கு வரவில்லை..

இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், வெளியூர் ரேஷன் கார்டு வைத்து சென்னையில் வாழும் மக்கள், ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டமாக சென்னை முகவரிக்கு ரேஷன் கார்டை மாற்றவில்லை.. முகவரி மாற்றாமல் சென்னையிலேயே பொருட்களை வாங்கி வந்தார்கள். இதுதான் 6000 நிவாரணம் கிடைக்காமல் போக காரணமாக மாறியது. அவர்கள் மட்டும் சென்னை முகவரிக்கு ரேஷன் கார்டுகளை மாற்றி இருந்தால், எந்த சிக்கலும் இல்லாமல் 6000 பணம் கிடைத்திருக்கும்.
ஆனால் உண்மையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களில் இவர்கள் தான் அதிகம். இவர்கள் தான் பிழைப்புத் தேடி வந்து பள்ளிக்கரணை, மடிப்பாக்கம், வேளச்சேரி, தாம்பரம், வரதராஜபுரம், முடிச்சூர், எண்ணூர், தண்டையார்பேட்டை, வண்ணாரப்பேட்டை, கொளத்தூர், பெருங்குடி, காரப்பாக்கம், பெரும்பாக்கம் உள்பட சென்னை முழுவதும் பல பகுதிகளில் வசித்து வருகிறார்கள். ஆனால் அவர்களில் பலர் ரேஷன் கார்டை சென்னை முகவரிக்கு மாற்றாத காரணத்தால் 6000 வெள்ள நிவாரணத்தை உடனே வாங்க முடியவில்லை. அதேநேரம் வெள்ள நிவாரண விண்ணப்பங்களை பரிசீலித்து எப்போது அந்த பணத்தை வங்கி கணக்கில் அரசு வழங்க போகிறது என்பதும் இதுவரை தெரியவில்லை..
இது ஒருபுறம் எனில் பொங்கல் பரிசாக 1000 ரூபாய் அறிவிக்கப்பட்டது. அந்த பரிசும் இவர்களில் பலரும் வாங்க முடியாமல் போய்விட்டது. 1000 பணம் வாங்க சொந்த ஊர் தான் போக வேண்டும். கைரேகை வைத்தால் மட்டுமே தருவார்கள் என்பதால் அந்த பணம் கிடைக்காமல் போய்விட்டது. 1000 பணம் வாங்க 2000க்கும் மேல் செலவு செய்தால் மட்டுமே போக முடியும் என்ற நிலை இருந்தது.

ஏற்கனவே வெள்ளத்தால் வாழ்வாதாரத்தை பறிகொடுத்த இவர்களில் பலரால், சொந்த ஊருக்கு போகவே முடியவில்லை.. இதனால் 1000 ரூபாய் பணத்தை வாங்க முடியாமல் போய்விட்டது. ரேஷன் கார்டை சென்னை முகவரிக்கு மாற்றி இருந்தால் அவர்களுக்கு 1000 ரூபாய் பொங்கல் பரிசு மட்டுமல்ல.. 6000 வெள்ள நிவாரணமும் கிடைத்திருக்கும். ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தில் சென்னையில் பொருட்களை வாங்கியவர்களுக்கு கடைசியில் ஏமாற்றமே நடந்துள்ளது.












Click it and Unblock the Notifications