வருமான வரி தாக்கல் செய்யாததால் சிறைக்கு போன இளைஞர்.. சென்னை வருமான வரித்துறை அதிரடி
சென்னை: வருமான வரித்துறையில் 2014-2015 மதிப்பீட்டு ஆண்டுடன் தொடர்புடைய 2013-2014 நிதியாண்டில் வரிசெலுத்தும் ஒருவர் ரூ.1 கோடியே 13 லட்சத்து 40 ஆயிரத்து 173-ஐ கமிஷன் வருமானமாக பெற்றுள்ளார். ஆனால் அவர் வேண்டும் என்றே வருமான வரி கணக்கை தாக்கல் செய்யவில்லை என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் வருமான வரிதாக்கல் செய்யாதவருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
வருமான வரி தொடர்பான சட்டத்தின்கீழ், வருமான வரி செலுத்த வேண்டிய வரம்புக்குள் வருவாய் ஈட்டியும், தெரிந்தே கணக்கு தாக்கல் செய்யாதவர் மீது வழக்கு தொடரப்படுவதற்கு வழி வகைகள் உள்ளன. எனினும் குறைந்த அளவிலான வரி பாக்கி வைத்திருப்போர், மூத்த குடிமக்கள், பெண்கள், வருமான வரி விலக்கு வரம்புக்கு கீழ் வருவாய் ஈட்டுபவர்கள், கணக்கு தாக்கல் செய்யாததற்கு சரியான காரணம் இருந்தால் வழக்கு தொடரப்படுவது இல்லை.. அதேநேரம் வேண்டுமென்றே வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாதவர்களுக்கு, குறிப்பாக, 25,000 ரூபாய்க்கு மேல் வரி நிலுவை இருந்து, கணக்கு தாக்கல் செய்யாதவர்களுக்கு அபராதத்துடன், சிறை தண்டனையும் விதிக்கப்படும்.

வேண்டுமென்றே, தெரிந்தே வருமான வரிக்கணக்குத்தாக்கல் செய்யாதவர்கள், தவறான கணக்குகளை காண்பித்தவர்கள், வருமானத்தை மறைத்தல் போன்ற நடவடிக்கைகளுக்கு வருமான வரித்துறை கடுமையான தண்டனைகளை விதித்து வருகிறது. அப்படித்தான் சென்னை வருமான வரித்துறை ஒருவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை வருமான வரித்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறுகையில், "வருமான வரித்துறையில் 2014-2015 மதிப்பீட்டு ஆண்டுடன் தொடர்புடைய 2013-2014 நிதியாண்டில் வரிசெலுத்தும் ஒருவர் ரூ.1 கோடியே 13 லட்சத்து 40 ஆயிரத்து 173-ஐ கமிஷன் வருமானமாக பெற்றார்.
இந்த தகவல்களின் அடிப்படையில், கடந்த 2017-ம் ஆண்டு சென்னை பொருளாதார குற்றங்களுக்கான கோர்ட்டு-2-ல் அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. வேண்டும் என்றே வருமான வரி கணக்கை தாக்கல் செய்யாத குற்றத்திற்காக, கூடுதல் தலைமை குற்றவியல் நடுவர், வரி செலுத்துபவர் செய்த குற்றத்தை அறிந்த பின்னர் குற்றச்சாட்டுகளை பதிவு செய்தார்.
விசாரணையின் முடிவில், முதன்மை பெருநகர குற்றவியல் நடுவர், வருமான வரிச் சட்டத்தின் கீழ் செய்த குற்றத்திற்கு அவர் குற்றவாளி என்று தீர்ப்பு அளித்தார். அவருக்கு ஒரு வருட கடுங்காவல் தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு அளிக்கப்பட்டது. வருமான வரித்துறையில் 2024-2025-ம் நிதியாண்டில் இதுவரை 16 பேருக்கு தண்டனை பெற்றுத்தந்து உள்ளது" இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications