தமிழக அரசுப் பள்ளிகளில் மும்மொழிக் கொள்கை வேண்டுமா? வேண்டாமா? மக்கள் என்ன சொல்றாங்க பாருங்க!
சென்னை: தமிழ்நாட்டில் இயங்கி வரும் அரசுப் பள்ளியில் மும்மொழிக் கொள்கை வேண்டுமா, வேண்டாமா என்று நமது "ஒன்இந்தியா தமிழ்" வெப்சைட்டில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அந்த வாக்கெடுப்பில் மும்மொழிக் கொள்கை வேண்டும், மும்மொழிக் கொள்கை வேண்டாம் என்பதற்கு எவ்வளவு ஆதரவு கிடைத்துள்ளது என்பதை பார்க்கலாம்.
சில வாரங்களுக்கு முன்பாக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், தேசிய கல்விக் கொள்கையை ஏற்றால் மட்டுமே தமிழ்நாட்டிற்கு நிலுவையில் உள்ள ரூ.2,152 கோடி விடுவிக்கப்படும். இந்தியாவில் பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்கள் கூட மும்மொழி கொள்கையை ஏற்கும் போது, தமிழ்நாடு ஏற்பதற்கு என்ன என்றும் கேள்வி எழுப்பினார்.

இதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் மீண்டும் இந்தி திணிப்பு குறித்த விவாதம் எழுந்தது. திமுக, அதிமுக உட்பட பல்வேறு கட்சிகளும் ஓரணியில் திரண்டு இருமொழிக் கொள்கையே தொடர வேண்டும் என்று மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்தனர். ஆனால் பாஜக தரப்பில் இந்தி கற்றுக் கொள்வதால் ஏற்படும் நன்மைகள் குறித்து சொல்லப்பட்டது.
குறிப்பாக மத்திய இணையமைச்சர் எல்.முருகன், கும்மிடிப்பூண்டி தாண்டினால் சிரித்து கொண்டே இந்தியில் திட்டுவான்.. தமிழ்நாட்டில் யாருக்கு ஆங்கிலம் தெரியும்.. கிராமத்தில் இருப்பவர்களுக்கு ஆங்கிலம் தெரியுமா என்று கொந்தளித்தார். அதேபோல் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பார்டர் தாண்டினால் சாப்பிட வேண்டும் தலைவா என்றும் கருத்து கூறி இருந்தார்.
இன்னொரு பக்கம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்தி திணிப்பு காரணமாக இந்தியாவில் இருந்து 26 மொழிகள் அழிந்துள்ளன. ரூ.2 ஆயிரம் கோடி என்ன.. ரூ.10 ஆயிரம் கோடி நிதி கொடுப்பேன் என்று கூறினாலும், தேசிய கல்விக் கொள்கையில் கையெழுத்து போட மாட்டேன் என்று வெளிப்படையாக அறிவித்தார். இருந்தாலும் தமிழ்நாட்டில் தொடர்ந்து இந்தி திணிப்பு குறித்த விவாதங்கள் நடைபெற்று வருகிறது.
குறிப்பாக தனியார் பள்ளிகளில் இந்தி கற்றுக் கொடுக்கும் போது, அரசுப் பள்ளி மாணவர்கள் இந்தி கற்றுக்கொடுக்க கூடாதா என்று பாஜகவினர் கேள்வி எழுப்பி வருகின்றனர். பணம் இருந்தாலும் மும்மொழி கொள்கை, பணம் இல்லாத அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இருமொழி கொள்கையா என்றும் விவாதங்கள் நடந்து வருகின்றன.
இந்த நிலையில் நமது "ஒன்இந்தியா தமிழ்" வெப்சைட்டில், தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் மும்மொழிக் கொள்கை வேண்டுமா? என்று கேள்வி எழுப்பப்பட்டு, வேண்டும், வேண்டாம் என்று வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் மொத்தம் பதிவான வாக்குகளில் 35.153 சதவிகிதம் மக்கள் வேண்டும் என்றும், 64.47 சதவிகிதம் மக்கள் வேண்டாம் என்றும் வாக்களித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications