தக்காளி, சின்ன வெங்காயம் விலை உச்சத்தில்.. பெரிய வெங்காயத்தின் விலையும் ஷாக் தரப்போகுதாம்
சென்னை: சின்ன வெங்காயம் கிலோ 180 ரூபாய்க்கும் தக்காளி கிலோ 120 ரூபாய்க்கும் விற்பனையாகி வரும் நிலையில் அடுத்ததாக பல்லாரி வெங்காயம் எனப்படும் பெரிய வெங்காயத்தின் விலையும் உயரப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. வெங்காய விலை நிலவரம் பற்றி கிரிஸில் சந்தை ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் தக்காளி, சின்ன வெங்காயத்தின் விலை கடந்த 2 மாத காலமாகவே உச்சத்தில் உள்ளது. அதிக வெப்பம் ஒரு பக்கம் பெரு வெள்ளம் மறு பக்கம் என விளைச்சலை பாதித்து வருகிறது. வட மாநிலங்களில் மழை வெள்ளம் விலை உயர்வுக்கு காரணமாக இருக்கிறது. அங்கு ஒரு கிலோ 200 ரூபாய் வரை தக்காளி விற்பனையாகிறது.

தமிழ்நாட்டில் அதிக வெப்பம் விலை உயர்வுக்கு காரணமாக உள்ளது. சின்ன வெங்காயம் ஒரு கிலோ 200 ரூபாய்க்கு விற்பனையானது. இதனால் சாம்பார் வைப்பதற்கு பெரிய வெங்காயத்தை பயன்படுத்த ஆரம்பித்தனர். இல்லத்தரசிகளுக்கு மற்றுமொரு அதிர்ச்சி தரும் செய்தியாக செப்டம்பர் மாதத்தில் இருந்து பெரிய வெங்காயத்தின் விலை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. அக்டோபரில் காரிஃப் பயிர்கள் அறுவடையாகி வரும்வரை இந்த விலையேற்றம் நீடிக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
கிரிஸில் சந்தை ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் "வரும் ஆகஸ்ட் இறுதியில் இருந்து பெரிய வெங்காயத்தின் விலை படிப்படியாக உயரும். செப்டம்பர் மாதத்தில் வெங்காய விலை கிலோ ரூ.60 முதல் ரூ.70 வரை விற்கப்படலாம். இருப்பினும் கடந்த 2020ஆம் ஆண்டில் ஏற்பட்ட வெங்காய விலை உயர்வுபோல் ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை என்றும் தெரிவித்துள்ளது.
வெங்காய விளைச்சல் குறைந்து போனாலோ, சந்தைக்கு வரத்து மற்றும் மக்களின் தேவை போன்ற ஏற்றத்தாழ்வால் இந்த விலையேற்றம் ஏற்படும். சில்லறைச் சந்தையில் இது செப்டம்பர் முதல் வாரத்தில் இருந்து எதிரொலிக்கத் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராபி பருவத்தில் அறுவடையாகும் வெங்காயங்களின் ஆயுட்காலம் சற்று குறைவுதான். 1 முதல் 2 மாதங்களில் அவை அழுகிவிடும். அதுதவிர பிப்ரவரி - மார்ச் காலகட்டத்தில் வெங்காயத்தை வாங்கி குவித்தவர்கள் அதிகம். வெளிச்சந்தையில் வெங்காய இருப்பு குறையத் தொடங்கிவிட்டது. ஆகஸ்ட் இறுதியில் கையிருப்பு வெகுவாகக் குறையும். இதனால் தட்டுப்பாடு ஏற்படும். இது 15 முதல் 20 நாட்கள் நீடிக்கும். இதன் விளைவாக வெங்காய விலை ஏற வாய்ப்பு உள்ளது.
காரிஃப் பருவ வெங்காயம் அறுவடை அக்டோபரில் தொடங்கும். அதன்பின்னர் காரிஃப் வெங்காயம் சந்தைக்கு வருவது அதிகரித்தால் வெங்காய விலை கட்டுப்பாட்டுக்கு வரும். அக்டோபர் - டிசம்பர் விழாக்காலத்தில் வெங்காய விலை நிலைத்தன்மை அடையும்.

இந்த ஆண்டு ஜனவரி முதல் மே வரையில் வெங்காய விலை குறைந்து மக்களுக்கு ஆறுதல் அளித்தது. பருப்பு, தானியங்கள், காய்கறி விலை ஏறியது. இந்தச் சூழலில் காரிஃப் பருவத்தில் வெங்காயம் விதைக்கும் விவசாயிகள் மத்தியில் விலைவாசி உயர்வு தயக்கத்தை ஏற்படுத்தியது. இதன் காரணமாக வெங்காயம் விதைத்தல் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு 8 சதவிகிதம் குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
அதேபோல் வெங்காய விளைச்சலும் கடந்த ஆண்டைவிட 5 சதவிகிதம் குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த ஆண்டில் ஒட்டுமொத்த வெங்காய உற்பத்தி 29 மில்லியன் மெட்ரிக் டன் என்று கணக்கிடப்படுகிறது. இது கடந்த 2018 முதல் 2022 வரையிலான காலக்கட்டத்தைக் கணக்கில் கொள்ளும்போது 7 சதவிகிதம் அதிகமாகும்.
இந்த ஆண்டு வெங்காய வரத்தில் பெரிய அளவு தட்டுப்பாடு இருக்காது என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் ஆகஸ்ட், செப்டம்பர் மழை நிலவரம் பொறுத்தே வெங்காயம் விளைச்சல் இருக்கும் என்று கிரிஸில் சந்தை ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. வெங்காய விலை உயர வாய்ப்பு உள்ளதாக அறிக்கை வெளியாகி உள்ள சில வாரங்களிலேயே பதுக்கலும் அதிகமாகி விடும். அதனால் வெளிச்சந்தைகளில் சில்லறை விலைகளில் வெங்காயத்தின் விலை உயரத்தொடங்கி விடும். காய்கறிகள் விலை உயர்வு இல்லத்தரசிகளின் வீட்டு பட்ஜெட்டில் துண்டு விழ வைத்துள்ளதால் பெரும்பாலான நாட்களில் வெங்காயம், தக்காளி சேர்க்காத கலவை சாதங்களே பலரது பசியாற்றி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications