வருகிறது அதிரடி சட்டம்.. கடுமையான தண்டனை.. ஆன்லைன் சூதாட்டங்களில் ஈடுபட்டால் என்ன நடக்கும் தெரியுமா?
சென்னை : தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்வதற்கான அவசர சட்டத்துக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். இதன் மூலம் வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் இச்சட்டம் இயற்றப்பட உள்ளது.
தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டம் தொடர்பாக தற்கொலைகள் அதிகரித்து வந்ததையடுத்து அதற்கு தடை விதிக்க வேண்டும் என்று பல தரப்பிலிருந்தும் கோரிக்கை எழுந்து வந்தது.
இந்நிலையில் செப்டம்பர் 26ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கும் அவசர சட்டம் இயற்ற ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இந்த சட்ட மசோதாவை ஆளுநரின் ஒப்புதலுக்காக தமிழக அரசு அனுப்பி இருந்தநிலையில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கும் அவசர சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்.
இந்நிலையில், இந்த சட்டத்தில் இடம்பெற இருக்கும் முக்கியமான அம்சங்கள், தண்டனை விவரங்கள் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுதொடர்பாக, முன்னணி ஆங்கில செய்தி தளத்தில் அரசின் மூத்த அதிகாரி ஒருவர் முக்கிய தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.

ஆன்லைன் ரம்மி
ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகள் பலரது பணத்தையும் உயிரையும் குடித்து வருவதால், அவற்றுக்கு தடை விதிக்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வந்தனர். அதனடிப்படையில் ஆன்லைன் ரம்மி விளையாட்டைத் தடை செய்ய சில ஆண்டுகளுக்கு முன்பு அப்போது ஆட்சியில் இருந்த அதிமுக அரசு அவசரச் சட்டம் ஒன்றைக் கொண்டு வந்தது. ஆன்லைன் ரம்மி நிறுவனங்கள் உச்ச நீதிமன்றத்தில் அதற்கு எதிராக வழக்கு தொடர்ந்த நிலையில், தமிழக அரசின் தடை ரத்து செய்யப்பட்டது.

குழு அமைத்த தமிழக அரசு
எனினும், ஆன்லைன் ரம்மி விளையாட்டால் தற்கொலைகள் வெகுவாக அதிகரித்து வந்த நிலையில், மீண்டும் ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடை விதிக்க வேண்டும், வலுவான சட்டத்தை இயற்ற வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இதையடுத்து ஆன்லைன் ரம்மி தடைச் சட்டம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதியரசர் கே.சந்துரு தலைமையில் அரசு ஒரு குழுவை அமைத்தது. இந்தக் குழு ஜூன் 27ஆம் தேதியன்று தனது அறிக்கையை சமர்ப்பித்தது.

ஆசிரியர்களிடம் சர்வே
பின்னர், பள்ளி மாணவர்கள் மீது ஆன்லைன் விளையாட்டுகள் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தை பற்றி பள்ளிக் கல்வித் துறை வாயிலாக கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் 74 சதவிகிதத்திற்கும் அதிகமான ஆசிரியர்கள் மாணவர்களின் கற்றல் திறன் ஆன்லைன் விளையாட்டுகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். 77% ஆசிரியர்கள், தங்கள் மாணவர்கள் அதீத கோபத்திற்கு ஆளாகியிருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். இதுவும் அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

அவரச சட்டம்
மேலும், பொதுமக்களிடம் மின்னஞ்சல் மூலம் பெறப்பட்ட கருத்துகள் மற்றும் கருத்துப் பகிர்வோர்களிடம் நடத்தப்பட்ட கலந்தாலோசனைக் கூட்டம் ஆகியவற்றின் மூலம் பெறப்பட்ட கருத்துகள் ஆகியவற்றின் அடிப்படையில், சட்டத்துறையின் ஆலோசனையுடன் ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்ய ஒரு அவசரச் சட்டம் தயாரிக்கப்பட்டு கடந்த செப்டம்பர் 26ஆம் தேதி அன்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டு, அமைச்சரவையின் ஒப்புதல் பெறப்பட்டது.

ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டம்
இதனைத் தொடர்ந்து இந்த அவசரச் சட்டம் ஆளுநரின் ஒப்புதல் பெற அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில், ஆன்லைன் ரம்மி தடையைச் செய்யும் அவசர சட்டத்திற்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து இந்தச் சட்டம் விரைவில் நடைமுறைக்கு வரும் எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது இந்த மாதம் 17-ஆம் தேதி தொடங்கவுள்ள தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரிலேயே ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டம் நிறைவேற்றப்பட்டு முழுமையான சட்டமாக நிறைவேற்றப்படும் என்று கூறப்படுகிறது.

4 பேர் கொண்ட ஒழுங்குமுறை ஆணையம்
மேலும், தலைமைச் செயலர் அந்தஸ்து கொண்ட ஓய்வுபெற்ற அதிகாரி தலைமையில் ஆன்லைன் விளையாட்டுகள் ஒழுங்குமுறை ஆணையம் செயல்படும் என்றும் இந்த சட்டம் முன்மொழிந்துள்ளது. இந்த ஒழுங்குமுறை ஆணையத்தின் உறுப்பினர்களாக ஐஜி கேடருக்கு குறையாத ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரி, ஐ.டி துறை வல்லுநர், உளவியல் நிபுணர், ஆன்லைன் விளையாட்டு வல்லுநர் ஆகியோர் இடம்பெறுவார்கள். ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அனுமதி வழங்குவது, தொடர்ந்து கண்காணிப்பது, தரவுகளை சேகரிப்பது, குறைகளுக்கு தீர்வு காண்பது, விதிகளை மீறினால் நடவடிக்கை எடுக்க பரிந்துரைப்பது உள்ளிட்ட பணிகளை ஆணையம் மேற்கொள்ளும்.

தண்டனை விவரங்கள்
ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபடும் நபர்களுக்கு 3 மாத சிறை தண்டனை அல்லது ரூ.5,000 அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்படும். சூதாட்ட விளம்பரங்களை வெளியிடுவோருக்கு ரூ.5 லட்சம் அபராதம் அல்லது ஓராண்டு சிறை அல்லது இரண்டுமே விதிக்கப்படும். சூதாட்டத்தை நடத்தும் நிறுவனம் அல்லது நபர்களுக்கு ரூ.10 லட்சம் அபராதம் அல்லது 3 ஆண்டு சிறை அல்லது இரண்டுமே தண்டனையாக விதிக்கப்படும். இரண்டாம் முறை தவறிழைக்கும் நபர்கள் அல்லது நிறுவனங்களுக்கு முந்தைய தண்டனையை விட இரட்டிப்பாக தண்டனை விதிக்கப்படும்.

தமிழ்நாட்டில் எவரும் விளையாட முடியாது
இதுதொடர்பாக தமிழக அரசின் உயரதிகாரி தெரிவித்ததாக சில தகவல்களை முன்னணி ஆங்கில நாளேடு வெளியிட்டுள்ளது. அதன்படி, "ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டம் மற்றும் ஆன்லைன் விளையாட்டுகள் ஒழுங்குமுறை சட்டத்திற்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். இதையடுத்து, வரும் கூட்டத்தொடரிலேயே அவசரச் சட்டமாக இயற்றப்பட உள்ளது. சட்டம் இயற்றப்பட்ட பின் தமிழ்நாட்டுக்குள் எந்த ஒரு நபரும் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபடமுடியாதவாறு தடை விதிக்கப்படும். செல்போன் எண்ணின் இருப்பிடத்தின் அடிப்படையில் மாநிலத்துக்குள் ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதிக்கப்படும்.

விளம்பரம் வெளியிட தடை
ஆன்லைன் சூதாட்டம் தொடர்பான விளம்பரங்களுக்கும் தடை விதிக்கப்படும்.
நேரடியாகவோ, மறைமுகமாகவோ எந்த ஒரு ஊடகங்களிலும், செயலிகளிலும் ஆன்லைன் சூதாட்ட விளம்பரம் வெளியிட தடை நடைமுறைக்கு வந்துவிடும். ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களுக்கு ஆன்லைனில் பணப்பரிமாற்றம் செய்ய வங்கிகள் ஒத்துழைக்கவும் தடை செய்யப்படும். தண்டனை விதிக்க அதிகாரம் உள்ள அமைப்பு நீதிமன்றமா அல்லது வேறு எது என்பது பற்றி விரைவில் அறிவிக்கப்படிம்" என அந்த அதிகாரி தெரிவித்துள்ளதாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications