ஆன்லைன் ரம்மியில் பணம் கொள்ளை.. ஆளுநரை சந்தித்த அமைச்சர் ரகுபதி விளக்கம்..உயிர்கள் காப்பாற்றப்படுமா?
சென்னை:ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதா பரிசீலனையில் இருப்பதாகவும் விரைவில் ஒப்புதல் அளிக்கப்படும் என்றும் ஆளுநர் ரவி தெரிவித்தாக சட்ட அமைச்சர் ரகுபதி விளக்கம் அளித்துள்ளார். ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் தொடர்பான விளக்கங்களை ஆளுநருக்கு அளித்துள்ளதாகவும் அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
ஆன் லைன் சூதாட்டத்தால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு தங்களது சொத்துகளை இழக்கும் நிலை ஏற்பட்டது. இதனையடுத்து ஏராளமானோர் தற்கொலை செய்துகொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டனர். இதனையடுத்து தமிழக அரசு சார்பாக அவசர சட்டம் இயற்றப்பட்டது.
இந்த சட்டத்திற்கு உச்சநீதிமன்றம் தடை விதித்ததன் காரணமாக தமிழக அரசு ஆன் லைன் விளையாட்டுகள் தொடர்பாக ஆய்வு செய்து சட்டம் இயற்றியது. இந்த அவசர சட்டத்திற்கு ஆளுநர் ஆர்.என்.ரவிஅன்றைய தினமே பரிசீலித்து உடனடியாக ஒப்புதல் அளித்தார். இது ஆன்லைன் சூதாட்ட எதிர்ப்பு ஆர்வலர்கள், பொதுமக்கள் மத்தியில் நிம்மதிப்பெருமூச்சு விட வைத்தது.

ஆன்லைன் சூதாட்டத் தடை மசோதா
இந்த நிலையில், தமிழக அரசு, அந்த அவசரச் சட்டத்துக்கு மாற்றாக நிரந்தர சட்டம் கொண்டு வர முடிவு செய்தது. அதன்படி, 'தமிழ்நாடு ஆன்லைன் சூதாட்டத் தடை மற்றும் ஆன்லைன் விளையாட்டுகளை முறைப்படுத்தும் சட்ட மசோதா 2022 ஐ சட்டசபையில் தாக்கல் செய்து, நிறைவேற்றி, ஆளுநரின் ஒப்புதலுக்காக கடந்த மாதம் 28ஆம்தேதி தமிழக அரசு அனுப்பி வைத்தது.

ஆளுநர் ஒப்புதல்
ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிக்கும் மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வந்த நிலையில், இந்த மசோதா தொடர்பாக ஆளுநர் தரப்பில் சில விளக்கம் கேட்கப்பட்டது. ஆன்லைன் ரம்மி தடைச் சட்ட மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ள தண்டனைகள் விதிப்பது தொடர்பான அதிகாரம் மாநில அரசுக்கு உள்ளதா என விளக்கம் கேட்கப்பட்டது.

ஆன்லைன் ரம்மி நோய்
உலக சுகாதார நிறுவனமும் ஆன்லைன் ரம்மியை ஒரு நோய் என்றும் அறிவித்துள்ளது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் இந்த நோயை ஒழிக்க வேண்டியது நம்முடைய தலையாய கடமை. அந்த கடமையை தான் தமிழக அரசு சட்டமாக இயற்றி ஆளுநருக்கு அனுப்பியது. ஆளுநர் ஏன் ஒப்புதல் அளிக்கவில்லை என்பது அவருக்கே உண்டான வெளிச்சம். காலதாமதம் ஏற்படுத்துவதற்கான அவசியம் கிடையாது. ஏன் காலதாமதம் படுத்துகிறார் என்பது அவருக்கு தான் தெரியும் என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கடந்த வாரம் கூறியிருந்தார்.

தமிழக அரசு விளக்கம்
ஆளுநரை நாங்கள் கேள்வி கேட்க முடியாது. அதே நேரத்தில் ஆளுநர் எங்களை கேள்வி கேட்க முடியும். அவர் கேட்ட கேள்விகளுக்கு நாங்கள் சரியான விளக்கம் அளித்து இருக்கிறோம் என்று கூறினார். ஆன்லைன் ரம்மி தடை சட்டம் தொடர்பாக அனைத்து விதமான பதில்களையும் ஆளுநரிடம் தமிழ்நாடு அரசு அளித்துள்ளது. ஆனால் ஒப்புதல் தாமதப்படுத்தியதற்கான காரணம் ஆளுநருக்குத்தான் தெரியும் எனவும் அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

ஆளுநர் கையெழுத்து
ஆன்லைன் ரம்மி அவசர சட்டம் காலாவதி ஆகிவிட்டதால், ஏற்கனவே அமலில் உள்ள சட்டத்தின் அடிப்படையில் தான் இனி தமிழக அரசு இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க முடியும். ஆளுநர் ஒப்புதல் அளித்த உடன் சட்டசபையில் நிறைவேற்றிய சட்டத்தை தமிழக அரசு அமல்படுத்த முடியும் அதற்கு நாங்களும் தயாராக உள்ளோம். ஆளுநர் கையெழுத்து போட்டு விட்டால் இதற்கு உயிர் வந்துவிடும் என்றும் அமைச்சர் ரகுபதி கூறியிருந்தார்.

ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் நேரில் சந்திப்பு
ஆளுநர் கேட்ட விளக்கங்களுக்கு பதிலளித்து தமிழக அரசு கடிதம் அனுப்பியுள்ளது. அந்த விளக்கத்தை ஆளுநர் ஆய்வு செய்துவரும் நிலையில் தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி இன்று ஆளுநரை நேரில் சந்தித்து பேசினார். இதனையடுத்து ராஜ்பவன் மாளிகை அருகே செய்தியாளர்களை சந்தித்த சட்ட அமைச்சர் ரகுபதி, இணையவழி ரம்மி, கோக்கர், சூதாட்டங்களை தடை செய்வதற்காக தமிழக அரசால் இயற்றப்பட்டுள்ள சட்ட மசோதா ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆளுநர் எழுப்பிய கேள்விகளுக்கு சரியான பதில்களை கூறியுள்ளோம். ஆளுநரை நேரில் சந்தித்து அரை மணி நேரம் பேசி அதுபற்றிய விளக்கங்களை அளித்துள்ளோம்.

அதிகரிக்கும் உயிரிழப்பு
ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதா பரிசீலனையில் இருப்பதாக ஆளுநர் ரவி தெரிவித்துள்ளார். விரைவில் முடிவெடுப்பதாகவும் ஆளுநர் கூறியுள்ளார். அவசர சட்டத்திற்கும் இந்த சட்டத்திற்கும் எந்த வித வித்தியாசமும் இல்லை. அவசர சட்டம் இயற்றப்பட்ட போது 17 பேர் ஆன்லைன் ரம்மியால் உயிரிழந்து இருந்தனர். இப்போது 25க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர். நேரிடையாக ரம்மி விளையாடுபவர்கள் தற்கொலை செய்து கொண்டதில்லை. ஆன்லைன் ரம்மி விளையாடியவர்கள்தான் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். குறுகிய காலத்தில் இத்தனை உயிர்கள் பறிபோயுள்ளன எனவே ஆன்லைன் ரம்மியை தடை செய்ய வேண்டும் என்று ஆளுநரிடம் கூறியுள்ளோம். வல்லுநர் குழுவினர் அளித்துள்ள தகவல்களையும் குறிப்பிட்டுள்ளோம்.

கொள்ளையடிக்கப்படும் பணம்
ஆன்லைன் புரோகிராம் செய்யப்பட்டது. இதில் பலரது பணம் பறிபோயுள்ளது. 8000 ஆயிரம் ரூபாயை எஸ்எம்எஸ் அனுப்பி 8 லட்சம் ரூபாயை கொள்ளையடித்து விடுகின்றனர். பலரது குடும்பம் ரோட்டில் நிர்கதியாக நிற்கின்றனர். எனவே ஆன்லைன் தடை சட்ட மசோதாவிற்கு கூடிய விரைவில் ஒப்புதல் தர வேண்டும் என்று முதல்வர் சார்பில் ஆளுநரிடம் கேட்டுகொண்டுள்ளோம் என்றும் அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications