தமிழ்நாட்டில் ஒரு அரசு பள்ளிக்கு வெறும் 3.11 மாணவர்களே சேர்ப்பு.. அன்புமணி வெளியிட்ட புள்ளி விவரம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைத் தொடங்கி இரு மாதங்கள் நிறைவடையவுள்ள நிலையில், இதுவரை 1.12 லட்சம் மாணவர்கள் மட்டுமே சேர்ந்துள்ளனர். இதை வரலாற்றுச் சாதனை என திமுக அரசு கூறிக் கொண்டிருக்கிறது. உண்மையில் ஒவ்வொரு பள்ளியிலும் ஒன்றாம் வகுப்பில் சராசரியாக 3.11 மாணவர்கள் மட்டுமே சேர்ந்திருக்கும் நிலையில் இதை சாதனை என்று கூறுவது ஏமாற்றும் செயல் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இதுபற்றி மேலும் கூறுகையில், "தமிழ்நாட்டில் தொடக்கக் கல்வி இயக்குநரகத்தின் கீழ் செயல்படும் 31,336 பள்ளிகள், பள்ளிக்கல்வி இயக்குநரகத்தின் கீழ் செயல்படும் 6,218 பள்ளிகள் என மொத்தம் 37,554 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 2026&27ஆம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை கடந்த மார்ச் 1&ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

Only 3 11 Students Enrolled in a Government School in Tamil Nadu Anbumani Releases Statistics

ஏப்ரல் 27 ஆம் நாள் திங்கள் கிழமை வரை தொடக்கக் கல்வித்துறையின் கீழ் செயல்படும் 31,336 அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பில் 97,737 மாணவர்கள் மட்டுமே சேர்ந்துள்ளனர். மழலையர் வகுப்புகளில் 6,796 குழந்தைகளும், இரண்டு முதல் எட்டு வரையிலான வகுப்புகளில் 8,176 மாணவர்களும் சேர்ந்துள்ளனர். ஒட்டுமொத்தமாக ஒரு லட்சத்து 12,711 மாணவர்கள் புதிதாக சேர்ந்திருப்பதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. இதில் கொண்டாடுவதற்கு எதுவும் இல்லை.

2025&26ஆம் கல்வியாண்டில் தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் 3 லட்சம் மாணவர்களை புதிதாக சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால், மே மாத இறுதி வரை 1.79 லட்சம் மாணவர்களை மட்டுமே சேர்க்க முடிந்தது. நடப்பாண்டில் 5 லட்சம் மாணவர்களைச் சேர்க்க திமுக அரசு இலக்கு நிர்ணயம் செய்திருந்தது. ஆனால், மாணவர் சேர்க்கைத் தொடங்கி 58 நாள்கள் நிறைவடைந்து விட்ட நிலையில், இதுவரை 1.12 லட்சம் மாணவர்கள் மட்டுமே புதிதாக சேர்ந்திருக்கின்றனர். கடந்த ஆண்டில் மாணவர் சேர்க்கை தொடங்கிய 54 நாள்களில், அதாவது ஏப்ரல் 23&ஆம் தேதி வரை 1.50 லட்சம் மாணவர்கள் அரசு பள்ளிகளில் சேர்ந்திருந்தார்கள். ஆனால், நடப்பாண்டில் அந்த எண்ணிக்கை மேலும் குறைந்துள்ளது.

எந்த ஒரு ஆண்டிலும் முதலாம் வகுப்பில் தான் மாணவர்கள் அதிக எண்ணிக்கையில் சேர்வார்கள். அந்த வகையில் நடப்பாண்டில் 31,336 பள்ளிகளில் 97,737 மாணவர்கள் மட்டுமே சேர்ந்திருக்கின்றனர். அதாவது ஒவ்வொரு பள்ளியிலும் சராசரியாக 3.11 மாணவர்கள் மட்டுமே சேர்ந்திருக்கின்றனர். இதிலும் கூட ஒரு பள்ளியில் 6 மாணவர்கள் சேர்ந்திருக்கிறார்கள் என்றால், இன்னொரு பள்ளியில் ஒரே ஒரு மாணவர் கூட சேரவில்லை என்று பொருள். ஒட்டுமொத்தமாக சில ஆயிரம் பள்ளிகளிலாவது ஒரு மாணவர் கூட இதுவரை சேராமல் இருந்திருக்கலாம். அது குறித்த விவரங்களை திமுக அரசு திட்டமிட்டு மறைக்கிறது.

ஒரு காலத்தில் அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் ஒவ்வொரு வகுப்பிலும் குறைந்தபட்சம் இரு பிரிவுகளும், அதிகபட்சமாக 4 பிரிவுகளும் இருக்கும். ஒவ்வொரு வகுப்பிலும் சராசரியாக 40 முதல் 50 மாணவர்கள் என ஒரே பள்ளியில் முதலாம் வகுப்பில் மட்டுமே 160 முதல் 200 மாணவர்கள் சேர்க்கப்பட்ட வரலாறு உண்டு. சில ஊர்களிலும் அதற்கும் அதிகமான எண்ணிக்கையில் மாணவர்கள் சேர முன்வந்ததால், அருகில் உள்ள கிராமங்களில் புதிய பள்ளிகள் தொடங்கப்பட்ட வரலாறும் உண்டு. அவை அனைத்தும் அரசு பள்ளிகள் வரலாற்றில் பொற்காலங்கள். ஆனால், இப்போது ஒரு பள்ளியில் சராசரியாக 3.11 மாணவர்கள் மட்டுமே சேரும் அளவுக்கு அரசு பள்ளிகளும், உதவி பெறும் பள்ளிகளும் திட்டமிட்டு சீரழிக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் தொடக்கக் கல்வித்துறையில் செயல்பட்டு வரும் 31, 336 பள்ளிகளில் பயிலும் மொத்த மாணவர்களின் எண்ணிக்கை 25.50 லட்சம் மட்டும் தான். அதாவது ஒவ்வொரு பள்ளியிலும் சராசரியாக 81 பேர் மட்டுமே பயில்கின்றனர். அதே நேரத்தில் 4498 தனியார் பள்ளிகளில் 30.60 லட்சம் மாணவர்கள், அதாவது ஒவ்வொரு பள்ளியிலும் சராசரியாக 680 மாணவர்கள் பயில்கின்றனர். அரசு பள்ளிகளுக்கும், தனியார் பள்ளிகளுக்கும் இடையிலான வேறுபாட்டை இந்த புள்ளிவிவரங்கள் தெளிவாக விளக்குகின்றன.

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்ததற்கு மாணவர்கள் மற்றும் பெற்றோரின் மனநிலையை குறை கூற முடியாது. அரசு பள்ளிகளில் இலவசக் கல்வி வழங்கப்படும் நிலையில், ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பத்து பெற்றோர் அனைவரும் தங்களின் பிள்ளைகளை அவற்றில் சேர்க்கவே விரும்புவர். ஆனால், அரசு பள்ளிகளில் தரமான கல்வி வழங்கப்படாததும், போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லாததும் தான் ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பத்து பெற்றோர் கடன் வாங்கியாவது தங்களின் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் சேர்க்கத் துடிப்பதற்கு காரணம். இது அரசின் தோல்வியே தவிர பெற்றோரின் தவறு அல்ல.

தொடக்கக் கல்வி இயக்குநரகத்தின் கீழ் உள்ள 31,336 அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் ஒரு லட்சத்து 3000 ஆசிரியர்கள் மட்டும் தான் உள்ளனர். அதாவது, ஒரு பள்ளிக்கு சராசரியாக 3.28 ஆசிரியர்கள் மட்டுமே பணியாற்றுகின்றனர். 8-ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகளில் சராசரியாக 3 அல்லது 4 ஆசிரியர்கள் மட்டுமே உள்ளனர். ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட வகுப்புகளுக்கு ஆசிரியர்களே இல்லை. இத்தகைய அவலச் சூழலில் அரசு பள்ளிகளால் தரமான கல்வியை எவ்வாறு வழங்க முடியும்?

தமிழ்நாட்டில் அனைவருக்கும் தரமான கல்வி கிடைக்க வேண்டுமானால், அது அரசு பள்ளிகளால் மட்டுமே சாத்தியமாகும். அனைவராலும் தனியார் பள்ளிகளில் லட்சங்களைக் கொட்டி குழந்தைகளை படிக்க வைக்க முடியாது. எனவே, அனைவருக்கும் கல்வி வழங்குவதற்கு வரமாகக் கிடைத்த அரசு பள்ளிகளுக்கு புத்துயிரூட்ட வேண்டும். அதற்கான அரசு பள்ளிகளின் உட்கட்டமைப்புகளை மேம்படுத்துதல், போதிய எண்ணிக்கையில் ஆசிரியர்களை நியமித்தல், இவற்றுக்காக பள்ளிக்கல்வித்துறை ஒதுக்கப்படும் நிதியை அதிகரித்தல் உள்ளிட்டவை அடங்கிய சிறப்புத் திட்டத்தை அரசு உருவாக்கி செயல்படுத்த வேண்டும்" இவ்வாறு கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+