மத்ததை விடுங்க.. இப்படி ஒரு முடிவை எடுக்க விஜயகாந்தால் மட்டுமே முடியும்.. தமிழ்நாடே வியந்த சம்பவம்
சென்னை: தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்தின் மறைவை ஒட்டி அவர் செய்த பல்வேறு நல்ல காரியங்கள் குறித்து மக்கள் நினைவு கூர்ந்து வருகின்றனர். அதில் அவர் செய்த இரண்டு முக்கியமான விஷயங்கள் கவனம் பெற்றுள்ளன.
பொதுவாக அரசியல் தலைவர்கள், நடிகர்கள் தங்களின் வருமானத்தை அதிகரிக்க கல்லூரிகள், மருத்துவமனைகள், பள்ளிகள் நடத்துவது வழக்கம். விஜயகாந்தும் இப்படி ஒரு கல்லூரியை தொடங்கினார். ஆனால் அவர் கல்லூரி தொடங்கிய பின் செய்த காரியம்தான் பெரிய அளவில் கவனம் பெற்றது.
விஜயகாந்த் ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரியை நிறுவியபோது 100% இடங்களை அரசு ஒதுக்கீட்டிற்கு விட்டுக்கொடுத்தார். அதாவது எதுவுமே மேனேஜ்மேண்ட் கோட்டா கிடையாது. எல்லாம் அரசு கோட்டா. இதனால் அரசு விதிக்கும் அடிப்படை கட்டணம்தான்.

கூடுதலாக எந்த கட்டணமும் கிடையாது. அதேபோல் கொரோனா தமிழ்நாடு முழுக்க பரவிய போது, அவர் தனது கல்லூரி மற்றும் DMDK தலைமையகத்தை நோயாளிகளுக்கு பயன்படுத்த அரசாங்கத்திற்கு வழங்கினார்.
அறிக்கை: இது தொடர்பாக அப்போது அவர் வெளியிட்ட அறிக்கையில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு காஞ்சிபுரம் மாவட்டம் ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரி, சென்னை தேமுதிக தலைமை கழகத்தை பயன்படுத்தி கொள்ளலாம் என்று தமிழக அரசுக்கு விஜயகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
( விஜயகாந்த் உடலை பொது இடத்தில் அடக்கம் செய்ய வேண்டும்.. ஸ்டாலினை பார்த்ததும் பிரேமலதா வைத்த கோரிக்கை)
கொரோனாவிற்கு எதிராக மத்திய மாநில அரசுகள் எடுத்து வரும் நடவடிக்கைக்கு தேமுதிக ஆதரவு தெரிவித்து வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில், ஆண்டாள்அழகர் பொறியியல் கல்லூரியையும், சென்னையில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேமுதிக தலைமை கழகத்தையும் தமிழக அரசு பயன்படுத்தி கொள்ள வேண்டும் என கேட்டு கொள்கிறேன். கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அந்தந்த வார்டுகளில் வசிக்கும் தேமுதிக நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரும் அத்தியாவசியப் பொருட்களான உணவு காய்கறி, உடை, மருந்து, முககவசம் உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை வழங்க வேண்டும்.
துப்புரவு பணியாளர்களுக்கும், தேவையான உபகரணங்களை வழங்க வேண்டும்.ஊரடங்கு உத்தரவால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள ஆட்டோ, ஷேர்ஆட்டோ ஓட்டுனர்களின் குடும்பத்தினருக்கும் மற்றும் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் தினக்கூலி தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கும் தங்களால் இயன்ற உதவிகளை செய்ய வேண்டும், என்று உத்தரவிட்டார்.
அவரின் இந்த குணமும், உத்தரவும் மக்களிடையே பெரிய வரவேற்பை பெற்றது. கொஞ்சமும் சுயநலமின்றி அவர் வெளியிட்ட இந்த அறிவிப்பு மக்கள் இடையே பெரிய அளவில் வரவேற்பை பெற்றது.

விஜயகாந்த் மரணம்: இன்று காலை தேமுதிக தலைவர் விஜயகாந்த் காலமானார். மியாட் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். அவருக்கு இன்று அதிகாலை தீவிர சிகிச்சை வழங்கப்பட்டது. அதிகாலை அவரின் உடல்நிலை மிக மோசமடைந்தது. ஐசியூவில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சையோ பலனின்றி அவர் மரணம் அடைந்தார்.
வழக்கமான பாதிப்பு இல்லை: அவருக்கு அவ்வப்போது இப்படி உடல்நிலை மோசமானது வழக்கம். இதற்காக அவர் வெளிநாட்டில் சிகிச்சை பெறுவதும் வழக்கம். ஆனால் இந்த முறை அவரின் உடல்நிலை மிகவும் நலிவுற்றதாக கூறப்பட்டது. நிமோனியா பாதிப்பு அவருக்கு அதிகம் இருந்த காரணத்தால் சிகிச்சை பலனின்றி அவர் பலியானார்.












Click it and Unblock the Notifications