"அண்ணாமலை வாயை மூடிக்கொண்டு இருந்தால் தான்.. அதிமுக- பாஜக கூட்டணி உருப்படும்!" ஆவேசமான பழ கருப்பையா
சென்னை: தமிழ்நாட்டில் சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு எடுக்கப்படும் நடவடிக்கைகள் இப்போதே சூடுபிடித்துவிட்டன. இதற்கிடையே சட்டசபைத் தேர்தலில் பாஜக அதிக சீட்களை பெறக்கூடாது என்று நமது ஒன்இந்தியாவுக்கு அளித்த பேட்டியில் பழ கருப்பையா தெரிவித்துள்ளார். பாஜக அதிக இடங்களை வீம்பிற்குப் பெற்றுப் போட்டியிட்டால் அது திமுகவுக்கே சாதகமாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் அடுத்தாண்டு தான் சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. ஆனால், இப்போதே தேர்தலை முன்வைத்து பல்வேறு அரசியல் கட்சிகளும் காய்களை நகர்த்தத் தொடங்கிவிட்டன. அதிமுக பாஜக கூட்டணி உறுதியாகவிட்ட நிலையில், இதர கட்சிகளை உள்ளே அழைத்து வரும் பணிகள் நடந்து வருகிறது.

பழ கருப்பையா
இதற்கிடையே அதிமுக கூட்டணியில் பாஜக 80 இடங்கள் வரை கேட்கலாம் எனச் செய்திகள் வெளியானது. இது தமிழக அரசியல் வட்டாரத்தில் பேசுபொருள் ஆனது. இதற்கிடையே நமது ஒன்இந்தியாவுக்கு பேட்டி அளித்துள்ள பழ கருப்பையா, பாஜக அதிக சீட்களில் போட்டியிடக்கூடாது எனத் தெரிவித்துள்ளார். திமுக ஆட்சிக்கு வரக்கூடாது என்றால் பாஜக அதிக சீட்களில் போட்டியிடக்கூடாது என அவர் கூறியுள்ளார்.

அண்ணாமலை மீது சாடல்
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "அண்ணாமலை இந்த கூட்டணி உருவாகிவிடக்கூடாது என்பதில் தீவிரமாக இருந்தார்.. அவர் செய்யும் வேலை தான் திமுகவை ஆட்சிக்குக் கொண்டு வரும் கூட்டணி.. ஸ்டாலின் யாருக்காவது நன்றிக்கடன் பட்டிருக்கிறார் என்றார் அது அண்ணாமலைக்குத் தான். தேர்தலில் 80 சீட் வேண்டும் என்பார். 80 சீட் வாங்கும் அளவுக்குக் கட்சியை எங்கு வளர்த்து வைத்து இருக்கிறாய்?

2019 தேர்தலை மனதில் வைத்து சீட் கேட்பது எப்படிச் சரியாக இருக்கும். அது லோக்சபா தேர்தல். மேலும், அப்போது பாஜக உடன் பாமக கூட்டணியில் இருந்தது. இப்போது கூட்டணி எதுவுமே இறுதியாக இல்லை. எனவே, அண்ணாமலை 80 சீட் கேட்பது எல்லாம் லாஜிக்கே இல்லாதது. அப்படியே கேட்டால் தனியாக நிற்க முடிந்தால் நிற்கட்டும் என விட்டு விட வேண்டும்..
ஸ்டாலின் vs எடப்பாடி
இந்த தேர்தல் ஸ்டாலின் vs எடப்பாடி என்ற கேள்விக்கே விடை தருவதாக இருக்கும். இந்த இடத்தில் நான் தான் பாஜகவின் தலைமை என வந்தால் அந்த கூட்டணி தமிழகத்தில் வேர் பிடிக்காது. லோக்சபா தேர்தலிலும் எல்லாம் முயன்று பார்த்தார்கள். ஆனால், யாராலும் வெல்ல முடியவில்லை. லோக்சபா தேர்தலில் அந்த கூட்டணியில் பாஜக இல்லாமல் இருந்தாலும் பாமக இதர கட்சிகளுடன் சேர்ந்து 10 இடங்களை வென்றிருக்க முடியும். பாஜக அச்சுறுத்தி கூட்டணியை ஏற்படுத்தியது. ஆனால், வெல்ல முடியவில்லை.
லோக்சபா தேர்தலில் ஸ்டாலின் 40 இடங்களில் வெல்ல அண்ணாமலை தான் காரணம். பாஜகவுக்கு 4% அல்லது 3% வாக்கு தான் இருக்கும். சீமானுக்கே 8% வாக்கு தான் இருக்கிறது. பாஜகவுக்கு அதை விட குறைவாகவே இருக்கும்.

அமைதியாக இருக்கணும்
திமுக இந்த தேர்தலில் வெல்ல கூடாது என்றால் பாஜகவும் அண்ணாமலையும் அமைதியாக இருக்க வேண்டும். தகுதியான இடங்களை மட்டுமே பெற வேண்டும். இந்தத் தேர்தல் ஸ்டாலின் vs எடப்பாடி என்பதே கேள்வி! லோக்சபா தேர்தல் தான் மோடிக்கான தேர்தல்.. பாஜக அதில் பார்த்துக் கொள்ள வேண்டும். ஹெச் ராஜா எம்எல்ஏ ஆகவும், இப்போது நான்கு பேர் எம்எல்ஏ ஆகவும் கூட்டணியே காரணம். பாஜக தனித்து இங்குக் களமிறங்கினால் ஒன்றும் நடக்காது" என்றார்












Click it and Unblock the Notifications