ரூல்ஸ் எல்லாம் பேசாத.. விஜய் ஆட்சி அமைப்பாரா மாட்டாரா? குழம்பி கிடக்கும் ரசிகர்களுக்கு எளிய விளக்கம்
சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிந்தைய சூழல் ஒரு த்ரில்லர் திரைப்படம் போல ஒவ்வொரு மணிநேரமும் மாறிக்கொண்டே இருக்கிறது. பெரும்பான்மைக்குத் தேவையான இடங்கள் எந்த ஒரு தனிப்பட்ட கட்சிக்கும் கிடைக்காத நிலையில், தமிழகத்தின் அடுத்த முதலமைச்சர் யார் என்பதில் பெரும் இழுபறி நீடிக்கிறது. இதுவரை நடந்தது என்ன? இனி நடக்கப்போவது என்ன? என்பதை விரிவாகப் பார்ப்போம்.
உங்களுடைய கேள்வி புரிகிறது.. விஜய் ஆட்சி அமைப்பாரா.. இல்லையா.. ரூல்ஸ் பேசாமல் சொல்லு என்று கேட்கலாம். அதை இங்கே விளக்கமாக பார்க்கலாம்!
தேர்தல் முடிவுகளும் தற்போதைய பலப்பரீட்சையும்
தமிழக சட்டமன்றத்தின் மொத்த இடங்களான 234-இல், ஆட்சி அமைக்கத் தேவையான மந்திர எண் 118 ஆகும். ஆனால், தேர்தல் முடிவுகள் எந்தக் கட்சிக்கும் தெளிவான பெரும்பான்மையை வழங்கவில்லை:
தமிழக வெற்றிக் கழகம் (TVK): 108 இடங்கள்
திமுக (DMK): 59 இடங்கள்
அதிமுக (AIADMK): 47 இடங்கள்
தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தாலும், விஜய்க்கு இன்னும் 10 இடங்கள் தேவைப்படும் சூழல் உருவானது. இதுவே தற்போதைய அரசியல் குழப்பங்களுக்குத் தொடக்கப்புள்ளியாக அமைந்தது.

1. தொடக்கத்தில், அதிமுகவின் முக்கியப் புள்ளியான சி.வி. சண்முகத்தின் உதவியுடன் அக்கட்சியிலிருந்து சுமார் 30 எம்.எல்.ஏ-க்களைத் தன் பக்கம் இழுக்க விஜய் திட்டமிட்டதாகத் தகவல்கள் வெளியாகின. இதன் மூலம் எளிதாகப் பெரும்பான்மையை நிரூபிக்கலாம் எனக் கணக்கிடப்பட்டது.
இருப்பினும், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி (EPS) மிகவும் துரிதமாகச் செயல்பட்டார். தனது கட்சி எம்.எல்.ஏ-க்களைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து, அவர்களைப் புதுச்சேரியில் பாதுகாப்பாகத் தங்க வைத்தார். சி.வி. சண்முகம் தரப்பிலிருந்தும் எதிர்பார்த்த ஆதரவு கிடைக்காததால், விஜய்யின் இந்தத் திட்டம் தோல்வியில் முடிந்தது.
2. இதனைத் தொடர்ந்து, தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணியை விஜய் உருவாக்கினார். காங்கிரஸின் 5 எம்.எல்.ஏ-க்கள் தவெக-விற்கு ஆதரவு அளிக்க முன்வந்தனர். 107 தவெக எம்.எல்.ஏ-க்கள் (விஜய் ராஜினாமா செய்யும் ஒரு சீட் போக) மற்றும் 5 காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் என மொத்தம் 112 உறுப்பினர்களின் ஆதரவுக் கடிதத்துடன் விஜய் ஆளுநர் ஆர்.வி. அர்லேகரைச் சந்தித்தார். தனிப்பெரும் கட்சி என்ற அடிப்படையில் ஆட்சி அமைக்க உரிமை கோராமல், ஒரு கூட்டணியாக அவர் உரிமை கோரியதால், ஆளுநர் அதனை ஏற்க மறுத்துவிட்டார். "ஆட்சி அமைக்க 118 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு கட்டாயம் தேவை" என்பதில் ஆளுநர் உறுதியாக இருந்தார்.
3. இடைப்பட்ட காலத்தில், விஜய்யின் ஆட்சியை தடுக்க பிரதான கட்சிகளான திமுக மற்றும் அதிமுக, இடதுசாரிகள், விசிக, தேமுதிக மற்றும் அமமுக ஆகியவற்றுடன் இணைந்து ஒரு மாற்று கூட்டணியை உருவாக்கப் பேச்சுவார்த்தை நடத்தியதாகச் செய்திகள் கசிந்தன. இருப்பினும், இந்த வினோதமான கூட்டணி நடைமுறைச் சாத்தியங்கள் இல்லாத காரணத்தால் இறுதி வடிவம் பெறவில்லை.
4. நேற்றைய நிலவரப்படி, தவெக தரப்பில் சிபிஎம், சிபிஐ, விசிக, ஐயுஎம்எல் மற்றும் அமமுக ஆகிய கட்சிகளுடன் கூட்டணி உறுதி செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. மீண்டும் விஜய் ஆட்சி அமைக்க உரிமை கோரினார். விசிக மற்றும் ஐயுஎம்எல் கட்சிகள் முறைப்படி ஆதரவுக் கடிதம் வழங்கவில்லை என ஆளுநர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதோடு ஐயுஎம்எல் தவெகவிற்கு ஆதரவு தரப்போவதில்லை என்று அறிவித்தது.
5. இதையடுத்து அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் அதிர்ச்சிகரமான புகாரை முன்வைத்தார். தனது கட்சியின் ஒரே எம்.எல்.ஏ-வான காமராஜ், தவெகவினரால் கடத்தப்பட்டதாகவும், அவரது கையெழுத்து போலியாக இடப்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டினார். இதனை உறுதிப்படுத்தும் வகையில் ஊடகங்கள் முன் தோன்றிய அமமுக எம்.எல்.ஏ காமராஜ், தான் விஜய்க்கு ஆதரவு அளிக்கவில்லை என்றும், தனது கையெழுத்து மோசடி செய்யப்பட்டதாகவும் தெரிவித்தார்.
6. தற்போது தவெக வசம் சிபிஎம், சிபிஐ மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் 116 உறுப்பினர்கள் இருப்பதாகக் கருதப்படுகிறது. ஆட்சி அமைக்க இன்னும் 2 உறுப்பினர்களின் ஆதரவு மட்டுமே தேவை. இதில் விசிகவின் நிலைப்பாடு மிக முக்கியமானது.
7. ஆளுநரின் அழைப்பு: ஒருவேளை விசிக தனது ஆதரவை முறைப்படி தெரிவித்தால், விஜய் மீண்டும் உரிமை கோரலாம். ஆனால், ஏற்கனவே 'குதிரை பேரம்' மற்றும் 'கையெழுத்து மோசடி' புகார்கள் எழுந்துள்ளதால், ஆளுநர் உடனடியாக அனுமதி வழங்குவாரா என்பது சந்தேகமே. சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்த பின்னரே அவர் முடிவெடுப்பார்.
8. ஆளுநர் ஆட்சி அல்லது குடியரசுத் தலைவர் ஆட்சி: எந்தக் கட்சியாலும் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத சூழல் நீடித்தால் அல்லது குதிரை பேரம் நடப்பதாக ஆளுநர் கருதினால், சட்டமன்றத்தை முடக்கி வைத்துவிட்டு ஆளுநர் ஆட்சி அல்லது குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தப் பரிந்துரைக்க வாய்ப்புள்ளது.
தமிழக அரசியல் வரலாற்றில் இது போன்ற ஒரு சூழல் இதற்கு முன் நிகழ்ந்ததில்லை என்பதால், அடுத்த சில நாட்கள் தமிழகத்தின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் மிக முக்கியமான நாட்களாக அமையப்போகின்றன.












Click it and Unblock the Notifications