கட்சி மாறி சென்றவர்.. பாஜக வி.பி.துரைசாமி அதிமுகவுக்கு சான்றளிக்க தேவையில்லை.. எடப்பாடி நறுக் பதிலடி
சென்னை: இன்று செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விபி துரைசாமி பேச்சுக்கு சுளீர் பதிலடி கொடுத்துள்ளார்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள நடைபெற்ற ஜெயலலிதா பேரவை மாவட்டச் செயலாளர்களுக்கான செயல் திறன் மேம்பாட்டுப் பயிற்சி முகாமில் அதிமுக மூத்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய பொன்னையன் பாஜகவைச் சாடும் வகையில் கருத்து கூறி இருந்தார். நீட், காவிரி, ஜிஎஸ்டி, ஈழ தமிழர்கள் விவகாரத்தைக் குறிப்பிட்டு அவர் சாடி இருந்தார்.

அதிமுக vs பாஜக
அவர் பேசுகையில், "தமிழ்நாட்டில் பாஜக ஆட்சிக்கு வர நினைத்தால் மக்கள் ஏற்க மாட்டார்கள். தமிழ்நாட்டில் இன, மொழி, திராவிட உணர்வு உள்ள மாநிலம். இங்கு பாஜகவின் பருப்பு வேகாது. பாஜக தான் தமிழ்நாட்டில் பிரதான எதிர்க்கட்சி என்ற மாயை உருவாக்கப்படுகிறது. அது உண்மையில்லை" என்று கூறி இருந்தார். இதற்கு பாஜகவினர் பதிலடி கொடுத்து வரும் நிலையில், அக்கட்சியின் துணைத் தலைவர் விபி துரைசாமி, "பொன்னையன் விரக்தியில் பேசுகிறார். ராஜ்ய சபா எம்பி சீட்டு கிடைக்காததால் இப்படிப் பேசுகிறார்" என்று பதிலடி கொடுத்து இருந்தார்.

விபி துரைசாமி
மேலும், 65 எம்எல்ஏக்களை கொண்டிருந்தாலும் அதிமுக ரெய்டு கண்டு அஞ்சுவதாகவும் பாஜகவே எதிர்க்கட்சியாகச் செயல்படுவதாகவும் அவர் தெரிவித்தார். இந்நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, விபி துரைசாமி பேச்சுக்கு சுளீர் பதிலடி கொடுத்துள்ளார். கட்சி மாறி செல்லும் விபி துரைசாமி அதிமுகவுக்குச் சான்றளிக்கத் தேவையில்லை என்று சாடியுள்ளார்.

எடப்பாடி பழனிசாமி
செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, "அதிமுக ராஜ்ய சபா வேட்பாளர்கள் சிவி.சன்முகம், ஆர் தர்மர் ஆகியோர் இன்று போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் இருவருக்கும் நான் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். அவர்கள் வெற்றிக்குத் துணை நின்ற அதிமுக எம்எல்ஏக்கள், பாமக, பாஜக ஆகியோருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சான்றளிக்க வேண்டாம்
அதிமுக சட்டசபையில் எப்படிச் செயல்படுகிறது என்று செய்தித்தாள், டிவி பார்த்தால் தெரியும். இது நாட்டு மக்களுக்குத் தெரியும். அதிமுகவுக்கு துரைசாமி சான்றளிக்கத் தேவையில்லை. நாட்டு மக்களின் பிரச்சினையை நானும், ஓபிஎஸும், அதிமுக உறுப்பினர்களும் புள்ளி விவரத்துடன் எடுத்துக் கூறி வருகிறோம். அதோடு பாஜகவின் சட்டசபை கட்சித் தலைவர் எப்படிப் பேசுகிறார் என்று நாட்டு மக்களுக்கும் தெரியும்.

கட்சி மாறி செல்பவர்
ரெய்டுக்கு எல்லாம் அதிமுகவினர் அஞ்ச மாட்டோம். விபி துரை சாமி எங்கு இருந்து எங்குச் சென்றார் என அனைவருக்கும் தெரியும். நான் 1977 முதல் 48 ஆண்டுகளாக நான் ஒரே இயக்கத்தில் இருந்து வருகிறேன். அதிமுக நிர்வாகிகள் அனைவரும் அப்படி தான். அவரை போலக் கட்சி மாறி செல்பவர்கள் நாங்கள் இல்லை" என்று சாடி உள்ளார்.

ரவுடிகள்
தொடர்ந்து சட்ட ஒழுங்கு விவகாரம் குறித்துப் பேசிய அவர், " டெல்டா மாவட்டங்களுக்குச் சுற்றுப்பயணம் சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின் தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு சிறப்பாக இருப்பதாகக் கூறி இருந்தார். அன்றைய தினமே சென்னையில் ரவுடிகள் அட்டகாசம் தொடர்பான செய்தி ஊடகத்தில் வெளியாகி இருந்தன. அதோடு போலீசாரின் ஒத்துழைப்போடு தான் குற்றவாளிகள் தலைமறைவு ஆவதாக மதுரை உயர் நீதிமன்றமே கருத்து கூறி உள்ளது. அந்த அளவுக்குத் தான் மாநிலத்தில் சட்ட ஒழுங்கு இருந்து வருகிறது.

குற்றச் சம்பவங்கள்
தமிழகத்தில் கொலை நடக்காத நாளே இல்லை என்ற நிலை உருவாகி உள்ளது. இத்துடன் வழிப்பறி, திருட்டு, கட்டப்பஞ்சாயத்து போன்ற சம்பவங்களும் அதிகரித்து வருகிறது. திமுக ஆட்சிக்கு வந்த ஓராண்டில் ஏரளமான கொலைகள், திருட்டு உள்ளிட்ட சம்பவங்கள் நடந்துள்ளது. இதைக் கட்டுப்படுத்த முடியாத திறமையில்லாத அரசு தான் பார்க்கிறோம். திமுக ஆட்சியில் மக்களுக்குப் பாதுகாப்பு இல்லை. குறிப்பாகப் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை.. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, கூட்டுப் பாலியல் பலாத்காரம், சிறுமிக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

போலீஸ் கைகள் கட்டப்பட்டுள்ளது
போலீஸ் துறையைக் கையில் வைத்திருக்கும் முதல்வர் ஸ்டாலின் இந்த துறையை முறையாகக் கவனிக்கவில்லை. இதனால் சட்ட ஒழுங்கு சீர்கெட்டுச் சந்தி சிரிக்கும் நிலையில் உள்ளது. அதிமுக ஆட்சியில் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. திமுகவைச் சேர்ந்தவர்கள் ஆங்காங்கே போலீஸ் நடவடிக்கையில் தலையிட்டு, குற்றவாளிகளைக் காப்பாற்றுகிறார்கள். இதனால் குற்றங்களின் எண்ணிக்கை குறையவில்லை. போலீசாரின் கைகள் கட்டப்பட்டு உள்ளது. அவர்களால் சந்திரமாகச் செயல்பட முடியவில்லை. திமுக ஆட்சியில் சட்ட ஒழுங்கு அடியோடு சீர்குலைந்துள்ளது.

கஞ்சா விற்பனை
போதைப்பொருள் பயன்பாடும் அதிகரித்துள்ளது. மாநிலத்தில் கஞ்சா விற்பனை நடைபெறாத இடமே இல்லை என்ற நிலை உருவாகி உள்ளது. கிரமங்கள் தொடங்கி அனைத்து இடங்களிலும் கஞ்சா விற்பனை தொடர்கிறது. அதையும் அரசால் தடுத்து நிறுத்த முடியவில்லை. ஆளும் கட்சியினர் கஞ்சா வியாபாரிகளுக்குத் துணை நிற்கிறதோ என்ற சந்தேகம் எழுகிறது. நிலைமை இப்படியே தொடர்ந்தால் தமிழ்நாடு கஞ்சா மாநிலமாக மாறிவிடுமோ என்று அச்சம் எழுந்துள்ளது" என்று சாடி உள்ளார்.












Click it and Unblock the Notifications