எல்லாத்தையும் இழந்த ஓபிஎஸ்.. மலைபோல் நம்பும் வழக்கு! நாளை முதல் வழக்காக விசாரிக்கும் உயர்நீதிமன்றம்
சென்னை: அதிமுக பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை பயன்படுத்த விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை எதிர்த்து ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கு நாளை முதல் வழக்காக விசாரிக்கப்படும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்து உள்ளது.
அதிமுகவில் ஒற்றை தலைமையை கொண்டு வந்த தீர்மானத்திற்கும், ஓ.பன்னீர்செல்வம் உள்பட 4 பேரை நீக்கிய தீர்மானத்துக்கும் தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்த நிலையில், அதிமுக கட்சி, சின்னம் ஆகியவற்றை பன்னீர்செல்வம் தரப்பினர் தொடர்ந்து பயன்படுத்த தடை விதிக்கக் கோரி கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதிமுக பொதுச் செயலாளராக தன்னை தேர்தல் ஆணையமும், உயர் நீதிமன்றமும் அங்கீகரித்துள்ள நிலையில், பன்னீர்செல்வம் ஒருங்கிணைப்பாளர் என தொடர்ந்து கூறிவருவதாகவும், இது தொண்டர்களிடையே குழப்பத்தை விளைவிப்பதாகவும் மனுவில் குறிப்பிட்டு உள்ளார்.

இந்த மனு நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, பன்னீர் செல்வம் தரப்பில் இதுவரை பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் கேட்கப்பட்டது. இந்த வழக்கு கடந்த 7 ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது இ.பி.எஸ். தரப்பில் மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண் ஆஜராகி, இந்த வழக்கு 3 வது முறையாக விசாரணைக்கு வருகிறது. இதுவரை பதில் மனுதாக்கல் செய்யவில்லை, தன்னை பொது செயலாளராக தேர்ந்தெடுத்தது செல்லும் என்ற உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளதாக கூறி அவகாசம் வாங்கினார்கள், ஆனால் அதில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என வாதிட்டார்.
ஒபிஎஸ் தரப்பில் வழக்கறிஞர் ராஜலட்சுமி ஆஜராகி, உச்ச நீதிமன்றத்தில் தாகல் செய்த வழக்கு நம்பர் ஆகிவிட்டது, இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய உள்ளோம், குறுகிய கால அவகாசம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். அப்போது நீதிபதி சதீஷ்குமார், எத்தனை முறை இந்த விவகாரத்தில் இப்படி வழக்கு தொடர்வீர்கள்? நேரம் கேட்பீர்கள்? எத்தனை முறை ஒரே வாதத்தை வைப்பீர்கள்? என கேள்வி எழுப்பினார்.
"நான்கைந்து மாதங்களில் முக்கியமான எம்.பி தேர்தல் வரவுள்ளது, ஆனால் கட்சியிலிருந்து நீக்கப்பட்டு ஒன்றரை ஆண்டுகளாக அதே பதவியை பயன்படுத்துகிறார். எங்களை கட்சியிலிருந்து நீக்கி அறிவிக்கிறார். பொதுமக்கள் மற்றும் கட்சியில் குழப்பம் ஏற்படுத்தி கொண்டிருக்கிறார்." என இ.பி.எஸ். தரப்பில் வாதிடப்பட்டது. வாதங்களை கேட்ட நீதிபதி, பொது செயலாளர் தேர்தல் செல்லும் என்கிற சென்னை உயர் நீதிமன்ற உத்தரவிற்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு ஏதும் பிறப்பிக்கவில்லை என்பதால், அதிமுக பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை பயன்படுத்த கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஒ.பன்னீர்செல்வத்திற்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார்.
இதனை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பு மேல்முறையீடு செய்தது. நீதிபதிகள் ஆர்.மகாதேவன் - முஹம்மது ஷபீக் அமர்வு கடந்த 8 ஆம் தேதி இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்பதாக தெரிவித்தனர். அறிவிக்கப்பட்டபடி வெள்ளிக்கிழமை இந்த வழக்கு விசாரணைக்கு பட்டியலிடப்படவில்லை. இது தொடர்பாக ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் நீதிபதிகளிடம் முறையிட்டதை தொடர்ந்து இன்று விசாரணைக்கு எடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.
அதன்படி இந்த மேல் முறையீட்டு வழக்கு, நீதிபதிகள் மகாதேவன் மற்றும் முகமது சபீக் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தனி நீதிபதி உத்தரவின் சான்றளிக்கப்பட்ட நகல் இல்லாமல் மனுவை பட்டியலிட உத்தரவிட்ட நீதிபதிகள், நாளை முதல் வழக்காக இந்த மேல்முறையீட்டு மனு விசாரிக்கப்படும் என தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications