"செங்கோட்டையனை விரைவில் சந்திப்பேன்”.. அடித்துச் சொன்ன ஓபிஎஸ்.. முன்கூட்டியே சென்ற ஆதரவாளர்!
சென்னை: அதிமுகவில் இருந்து வெளியேறியவர்களை இணைக்கும் செங்கோட்டையனின் முயற்சிக்கு எனது முழு ஆதரவு உண்டு என்றும் அவரை உறுதியாக நான் விரைவில் சந்திப்பேன் என்றும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். செங்கோட்டையனின் கட்சிப் பொறுப்புகளை எடப்பாடி பழனிசாமி பறித்த நிலையில், ஓபிஎஸ் செங்கோட்டையனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி - முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இடையேயான பனிப்போர் உச்சக்கட்டத்தை எட்டியது. அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் இணைக்க, எடப்பாடி பழனிசாமிக்கு செங்கோட்டையன் 10 நாள் கெடு விதித்திருந்தார். அவரது கருத்துக்கு ஓபிஎஸ், சசிகலா ஆகியோர் ஆதரவு தெரிவித்த நிலையில், செங்கோட்டையன் அதிரடியாக கட்சி பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டார்.

அதிமுகவின் அமைப்புச் செயலாளர் மற்றும் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் பொறுப்புகளில் இருந்து செங்கோட்டையன் விடுவிக்கப்பட்டுள்ளார். கட்சி தலைமைக்கு எதிராக பேசியதாகவும், விதிகளை மீறி செயல்பட்டதாகவும் கூறி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் செங்கோட்டையன் ஆதரவாளர்களின் கட்சிப் பதவிகளும் பறிக்கப்பட்டுள்ளது. செங்கோட்டையனின் பதவிப் பறிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவை சேர்ந்த 2000 நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா செய்துள்ளனர்.
இந்நிலையில் தேனி பெரியகுளத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம், "அதிமுகவை ஒருங்கிணைக்க வேண்டும் என்ற செங்கோட்டையனின் முயற்சிக்கு உறுதியாக ஆதரவு அளிக்கிறேன். செங்கோட்டையனை உறுதியாக விரைவில் சந்திப்பேன். 10 நாட்கள் அவகாசம் முடிந்த பின்னர் அனைவரையும் அழைத்து பேசுவேன். செங்கோட்டையனுக்கு அளிக்கப்பட்டுள்ள தண்டனை ஏற்கத்தக்கது அல்ல, கட்சி ஒருங்கிணைய வேண்டும் எனக் கூறினார் செங்கோட்டையன். அவரது பதவி பறிக்கப்பட்டிருப்பது சர்வாதிகாரத்தின் உச்சம். செங்கோட்டையன் கெடு விதித்ததில் தவறில்லை. எடப்பாடி பழனிசாமிக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்." எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, செங்கோட்டையனை நேற்று அவரது வீட்டில் சந்திக்க வந்த தனது ஆதரவு நிர்வாகியின் செல்போனுக்கு நேரடியாக தொடர்பு கொண்ட ஓ.பன்னீர்செல்வம், அந்த போன் வாயிலாக செங்கோட்டையனிடம் பேசியுள்ளார். பின்னர் செல்போனை வாங்கிக்கொண்டு தனி அறைக்குச் சென்ற செங்கோட்டையன் சுமார் 5 நிமிடங்கள், ஓபிஎஸ் உடன் பேசியதாக கூறப்படுகிறது. அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பாக இருவரும் ஆலோசித்ததாக கூறப்படுகிறது.
அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை கோபிசெட்டிபாளையத்தில் உள்ள அவரது பண்ணை வீட்டில் அதிமுக ஒருங்கிணைப்புக் குழுவைச் சார்ந்த பெங்களூர் புகழேந்தி நேரில் சந்தித்தார். தொடர்ந்து இருவரும் நீண்ட நேரம் உரையாடினர். இதையடுத்து, செய்தியாளர்களிடம் பெங்களூர் புகழேந்தி, "கட்சியை நாசம் செய்யும் பணியில் எடப்பாடி பழனிசாமி ஈடுபட்டுள்ளார். இந்தச் சூழ்நிலையை மக்களும், தொண்டர்களும் ஏற்கவில்லை. கட்சியை ஒருங்கிணைக்காவிட்டால், அதிமுக 4 ஆம் இடத்துக்குச் சென்று விடும். நாம் தமிழர் கட்சியோடுதான் போட்டி போட வேண்டும்.
நான்கரை ஆண்டுகளாக ஊழல் செய்தவர்கள் மற்றும் கொடநாடு கொலை வழக்கில் தொடர்புடையவர்கள் மீது முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்கவில்லை என்பது மன வருத்தத்தை ஏற்படுத்துகிறது. ஓபிஎஸ், சசிகலா உள்ளிட்ட அனைவரும் இணைந்து செயல்பட உள்ளோம். நாங்கள்தான் உண்மையான அதிமுக. இந்தக் கட்சி பழனிசாமிக்கு சொந்தமில்லை என்பதை நீதிமன்றமும், மக்கள் மன்றமும் சொல்ல உள்ளது" எனத் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications