ஓபிஎஸ் எங்க கட்சிக்காரர்.. எப்ப என்ன செய்யனும்னு தெரியும்.. எனக்கு கெப்பாசிட்டி இருக்கு.. சசிகலா
சென்னை: ஓபிஎஸ் எங்க கட்சிக்காரர்; எப்போது வேண்டுமானாலும் என்னை சந்திக்கலாம்; அதிமுகவை ஒன்றிணைப்பேன். எப்ப என்ன செய்யனும்னு எனக்கு தெரியும், நாடாளுமன்ற தேர்தலில் எந்த கூட்டணிக்கு ஆதரவு என்பதை விரைவில் தெரிவிப்பேன் என்று சசிகலா கூறினார்.
அதிமுகவில் இருந்து ஓ பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் நீக்கப்பட்ட நிலையில், பாஜக கூட்டணியில் இருந்தும் எடப்பாடி பழனிசாமி வெளியே வந்துவிட்டார். இந்த சூழலில் சசிகலா டிடிவி தினகரன் ஆகியோர் அடுத்து என்ன செய்ய போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. பாஜக ஆதரிப்பார்களா, அல்லது அதிமுகவில் அனைவரும் ஒன்றிணைவார்களா என்ற கேள்விகள் எழுந்துள்ளது.

அதிமுகவை ஒன்றிணைப்பதே தன்னுடைய இலக்கு என்று சசிகலா கூறி வருகிறார். இது தொடர்பாக செய்தியாளர்கள் சசிகலாவிடம் அதிமுகவை ஒன்றிணைப்பது குறித்து உங்கள் யுக்தி என்ன என்று கேள்வி எழுப்பினார்கள்.
அப்போது பதில் அளித்து பேசிய சசிகலா, "அதை போய் உங்களிடம் டிவியில் நான் சொல்ல முடியுமா? நீங்க என்னுடைய அனுபவத்தை போகப்போக தானாக தெரிந்து கொள்வீர்கள்.. அவ்வளவு தான் நான் சொல்ல முடியும்..
என்னை பொறுத்தவரை அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தில் உள்ள அத்தனை தொண்டர்களுக்கும் முகவரி கொடுத்தது இந்த இயக்கம். இந்த இயக்கத்தில் இருப்பதாகத்தான் எல்லாரையும் நினைத்துக் கொள்கிறேன்.. எனக்கு பயமே கிடையாது.. எனக்கு சுத்தமாக பயமே இல்லை.. இன்னொன்றும் சொல்கிறேன்.. நான் மக்களை மட்டும் தான் பார்ப்பேன்.. எங்க கட்சிக்காரங்களா இருந்தாலும் தப்புன்னா தப்புதான்.. நாங்க திமுக மாதிரி கிடையாது. நீங்க அம்மா (ஜெயலலிதா) இருக்கும் போதே பார்த்திருப்பீங்க.. அதனால் எங்களுக்கு என்று ஒரு வழி இருக்கிறது.. எங்கள் இரண்டு தலைவர்கள் சொல்லிக்கொடுத்த வழியில் இந்த இயக்கம் நிச்சயமாக நன்றாக வரும்.
எப்போதுமே இந்த இயக்கத்தில் ஒரு சின்ன பிரச்சனை வரும். ஒரு தலைவர் மறைந்த உடனே அந்த பிரச்சனைவரும்.. அந்த பிரச்சனை அப்படியே இருந்தது இல்லை.. திருப்பி சேர்ந்துவிடும்.. அதனால் இது இரண்டாவது நடந்திருக்கு.. முதல்முறை சரி செய்ததும் நான் தான்.. முதல்முறை பண்ணும் போது எனக்கு என்ன வயசு இருக்கும் என்று உங்களுக்கு தெரியும்.. இப்போது பண்ணும் போது என் அனுபவத்தையும் சேர்த்து என்னால் பண்ண முடியும் என்று நான் நினைக்கிறேன்" என்றார்.
டிடிவி தினகரனும் ஓபிஎஸ்சும் இணைந்திருக்கிறார்கள். ஓபிஎஸ் உங்களை சந்திக்க காத்திருக்கிறார். நீங்கள் எப்போது அவருக்கு அனுமதி தரப்போகிறீர்கள் என்று செய்தியாளர் ஒருவர் கேட்டார். அதற்கு சசிகலா, "ஓபிஎஸ் எங்கள் கட்சிக்காரர்.. அவர் என்ன விருந்தாளியா.. திமுகவில் இருந்த ஒருத்தர் காத்துக் கொண்டிருக்கிறார் என்றால் அவரை முன்னாடி சந்தியுங்க என்று கேட்கலாம்.
ஆனால் ஓபிஎஸ் அப்படிஅல்ல.. வீட்டில் உள்ளவர்களை போன்றவர்.. எப்போது வேண்டுமானாலும் சந்திக்கலாம். எங்கள் கட்சியில் எல்லாரையும் சரி பண்ண முடியும். அந்த கெப்பாசிட்டி எனக்கு இருக்கு.. பெருமைக்காக சொல்லவில்லை.. அந்த அனுபவம் எனக்கு இருக்கு.. எந்த சமயத்தில் என்ன செய்ய வேண்டும் என்று எனக்கு தெரியும்.. நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெறுமா அல்லது பாஜக கூட்டணி வெற்றி பெறுமா என்பது மக்களின் மனநிலையை பொறுத்தது.. நாடாளுமன்ற தேர்தலில் எந்த கூட்டணிக்கு ஆதரவு என்பதை விரைவில் தெரிவிப்பேன்" இவ்வாறு சசிகலா கூறினார்.












Click it and Unblock the Notifications