ஓபிஎஸ் தரப்புக்கு 12 சீட்.. அமித்ஷா கொடுத்த மெகா ஆபர்.. டிசம்பர் 15ல் எடுக்கப்போகும் முக்கிய முடிவு!
சென்னை: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் 2 நாட்களுக்கு முன்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்த நிலையில், பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. தனிக் கட்சி தொடங்கும் முடிவில் இருக்கும் ஓபிஎஸ்ஸை, என்டிஏ கூட்டணிக்குள் இணைக்க அமித்ஷா முடிவு எடுத்து பேசி இருப்பதாகவும், என்டிஏ கூட்டணியில் 12 சீட்களை வரை ஒதுக்கலாம் என்று பேசப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
2 நாட்களுக்கு முன்பாக கோவையில் இருந்து கொச்சி சென்று, அங்கிருந்து டெல்லி புறப்பட்ட ஓபிஎஸ், திடீரென மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தார். என்டிஏ கூட்டணியில் இருந்து வெளியேறிவிட்டதாக ஓபிஎஸ் அறிவித்தாலும், பாஜக உடனான நெருக்கம் குறையவில்லை. இதன் காரணமாகவே அமித்ஷாவின் அழைப்பு வந்தவுடன், ஓபிஎஸ் டெல்லி சென்றதாக கூறப்படுகிறது.

அமித்ஷா மற்றும் ஓபிஎஸ் இடையில் சுமார் 20 நிமிடங்கள் சந்திப்பு நடைபெற்றுள்ளது. இந்த சந்திப்பின் போது தமிழக அரசியல் சூழல் குறித்து பேசப்பட்டதாக ஓபிஎஸ் கூறி இருந்தார். ஆனால் இந்த பேச்சுவார்த்தையில் ஓபிஎஸ்ஸின் தனிக்கட்சி முடிவு குறித்தே ஆலோசிக்கப்பட்டிருக்கிறது. அந்த ஆலோசனையில் ஓபிஎஸ் தரப்பில், என்னை நம்பி ஆதரவாளர்கள் இருக்கிறார்கள்.
எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போராட்டத்தை தொடங்கிய போது, பலரும் பதவியில் இருந்தார்கள். தற்போது சட்டசபைத் தேர்தல் நெருங்கிவிட்டது. இன்னும் அதிமுக உடனான இணைப்புக்கு சாத்தியமா என்பது சந்தேகம்தான். அதனால் ஆதரவாளர்களின் நலன் கருதி தனிக்கட்சி முடிவை எடுத்துள்ளதாக ஓபிஎஸ் தெரிவித்ததாக சொல்லப்படுகிறது. இதனை அமித்ஷாவும் ஏற்றுக் கொண்டுள்ளார்.
அதேபோல் லோக்சபா தேர்தலின் போது எங்கள் கூட்டணியில் இருந்து ஆதரவு அளித்தீர்கள். அதனால் கைவிட்டுவிட மாட்டோம் என்றும் அமித்ஷா உறுதி கொடுத்ததாக கூறப்படுகிறது. இதன்பின் மீண்டும் என்டிஏ கூட்டணியில் இணைந்து, பாஜகவுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளில் இருந்து 12 தொகுதிகள் வரை உங்கள் தரப்புக்கு உள்ஒதுக்கீடாக கொடுப்பதாக அமித்ஷா கூறி இருக்கிறார்.
அப்போது அமித்ஷா 12 சீட்களை வரை கொடுக்கலாம் என்றும் கூறியதாக விவரம் அறிந்தவர்கள் சொல்கின்றனர். இதனை ஏற்றுக் கொண்ட ஓபிஎஸ், அடுத்தக் கட்ட பணிகளை முடுக்கிவிட்டதாக தெரிகிறது. அதேபோல் இன்னும் சில வாரங்களில் தமிழ்நாடு வரும் அமித்ஷா, இதுதொடர்பாக முக்கிய முடிவினை எடுக்க உள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
ஆனால் ஓபிஎஸ் தரப்புக்கு இன்னொரு சிக்கலும் இருக்கிறது. அதாவது எடப்பாடி பழனிசாமியை எதிர்த்து இத்தனை நாட்களாக அரசியல் செய்துவிட்டு, அவரை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தும் என்டிஏ கூட்டணியில் இணையக் கூடாது என்று அவரின் ஆதரவாளர்கள் ஆலோசனை கூட்டத்திலேயே கூறி இருக்கின்றனர். இதனால் ஓபிஎஸ் என்ன முடிவு எடுப்பார் என்ற கேள்வி எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications