நோ சொன்ன விஜய்.. தனிக்கட்சி தொடங்கி என்டிஏ கூட்டணியில் ஐக்கியமாகும் ஓபிஎஸ்?
சென்னை: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்துவிட்டு திரும்பி இருக்கும் சூழலில், அவர் தனிக்கட்சி தொடங்கும் பணிகளை முடுக்கிவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. தனிக்கட்சி தொடங்கிய பின்னரும், என்டிஏ கூட்டணியில் தொடர ஓபிஎஸ் திட்டமிட்டுள்ளதாகவும், அதற்கு அமித்ஷா சிக்னல் கொடுத்துள்ளதாகவும் விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.
ஆகஸ்ட் மாதத்தில் என்டிஏ கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்த ஓபிஎஸ், அதன்பின் அதிமுக ஒருங்கிணைப்பு என்ற கோஷத்தை மீண்டும் முன்னெடுத்தார். அரசியல் ரீதியாக எந்த மாவட்டத்திற்கும் சுற்றுப்பயணம் கூட மேற்கொள்ளாத ஓபிஎஸ், திடீரென தேவர் ஜெயந்தியின் போது செங்கோட்டையனுடன் காரில் ஒன்றாக வந்து தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.

இதன்பின் ஓபிஎஸ், செங்கோட்டையன் மற்றும் டிடிவி தினகரன் ஆகிய மூவரும் ஒன்றாக இணைந்து செயல்படுவோம் என்று அறிவித்தாலும், அவர்கள் ஒருமுறை கூட சந்திக்கவே இல்லை. இப்படியான சூழலில், செங்கோட்டையன் திடீரென தவெகவில் இணைந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் திடீரென ஓபிஎஸ், கொச்சியில் இருந்து டெல்லிக்கு விமானம் ஏறினார்.
இதன்பின் டெல்லியில் அமித்ஷா மற்றும் ஜேபி நட்டா உள்ளிட்டோரை ஓபிஎஸ் சந்தித்துள்ளார். அமித்ஷாவுடன் சுமார் 20 நிமிடங்கள் வரை சந்திப்பு நடந்திருக்கிறது. இந்த சந்திப்பின் போது தமிழக அரசியல் சூழல் குறித்து விவாதித்ததாக ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். இதனிடையே ஓபிஎஸ் தனிக் கட்சி தொடங்கும் பணிகளை தீவிரப்படுத்தி இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
ஓபிஎஸ் முன்பாக விஜய் மற்றும் என்டிஏ கூட்டணி என்ற இரு வாய்ப்புகள் மட்டுமே இருந்தது. அதில் விஜய்யுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது. விஜய் மறைமுகமாக நோ சொல்லிவிட்டதால், ஓபிஎஸ் உடனடியாக என்டிஏ உடன் கூட்டணி அமைக்கும் பணிகளை முடுக்கிவிட்டுள்ளதாக தெரிகிறது.
அதாவது தன்னுடன் இருக்கும் நிர்வாகிகளை இந்த சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற வைக்கவில்லை என்றால், ஓபிஎஸ் அரசியல் எதிர்காலமே கேள்விக்குறி தான். மறுபக்கம் எடப்பாடி பழனிசாமி எந்தக் காரணம் கொண்டு அதிமுகவில் சேர்க்க முடியாது என்பதில் பிடிவாதமாக இருக்கிறார். இதனால் தனிக் கட்சி தொடங்குவதே ஓபிஎஸ் முன் இருக்கும் வாய்ப்பாக உள்ளது.
தனிக்கட்சி தொடங்கி என்டிஏ கூட்டணிக்குள் ஐக்கியமாகலாம் என்று ஓபிஎஸ் தரப்பில் முடிவுக்கு வந்திருக்கிறது. அதிமுகவுடன் நேரடியாக கூட்டணி வைக்காமல், பாஜகவுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளில் உள் ஒதுக்கீடாக பெறலாம் என்று கணக்கு போட்டுள்ளனர். இந்த விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை என்று கூறப்படுகிறது.
ஏனென்றால் ஓபிஎஸ் தனிக்கட்சி தொடங்கினால், அதிமுக முழுமையாக எடப்பாடி பழனிசாமியின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும். இதனால் பாஜகவுக்கு கூடுதல் தொகுதிகளை ஒதுக்கி, அதில் சிலவற்றை ஓபிஎஸ் ஆதரவாளர்களுக்கு ஒதுக்கும் முடிவுக்கு எடப்பாடி பழனிசாமி இறங்கி வரலாம். ஏனென்றால் தென் மாவட்டங்களில் அதிமுகவின் நிலை நாளுக்கு நாள் மோசமாகி வருவதாக விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications