நேரம் பார்த்து வேலையைக் காட்டிய ’மாஜி’.. தேனியில் தத்தளித்த ’குக்கர்’ ஓனர்.. ஓ அப்படியா விஷயம்?
சென்னை: மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டாலும் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக ஓ.பன்னீர்செல்வம் தேனியில் தேர்தலில் பணியாற்றவில்லை என மனக்கசப்பில் இருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக ஓபிஎஸ்ஸின் சொந்த ஊரான தேனியில் போட்டியிட்ட டிடிவி தினகரனுக்கு, ஓபிஎஸ் ஆதரவாளர்கள் பெரும்பாலும் பிரசாரத்தில் பங்கேற்கவில்லை என்கின்றனர் உள்ளூர் நிர்வாகிகள்..
18ஆவது மக்களவைக்கான 643 உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் லோக்சபா தேர்தல் 2024 இந்தியாவில் ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. ஜூன் ஒன்றாம் தேதி வரை தேர்தல் நடைபெறும் நிலையில் ஜூன் நான்காம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

அப்போது இந்தியாவின் அடுத்த பிரதமர் யார் என்ற கேள்விக்கு விடை கிடைத்து விடும். முன்னதாக இரு கட்ட தேர்தல்கள் நிறைவடைந்து இருக்கும் நிலையில் மூன்றாம் கட்ட தேர்தல் ஆனது நடைபெற இருக்கிறது.
பாஜக கூட்டணி: இந்த நிலையில் தமிழகத்தில் நடைபெற்ற தேர்தல் கூடுதல் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. காரணம், இன்னும் இரு ஆண்டுகளில் அதாவது 2026இல் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அதற்கு முன்னோட்டமாக நாடாளுமன்ற தேர்தல் பார்க்கப்படுகிறது. கடந்த காலங்களில் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற கட்சிகளே சட்டமன்றத்தில் கால் பதித்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தமிழகத்தில் அதிமுக திமுக தலைமையிலான கூட்டணி களமிறங்கிய நிலையில் இந்த முறை பாஜகவும் தனது தலைமையில் புதிய கூட்டணியை அமைத்தது. அதில் ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன், பாரிவேந்தர், ஜான்பாண்டியன் உள்ளிட்டோர் இணைந்தனர்.
ஓ.பன்னீர்செல்வம்: இதுவரை சட்டமன்ற தேர்தல்களில் மட்டும் போட்டியிட்டு வந்த ஓ.பன்னீர்செல்வம் நாடாளுமன்ற தேர்தலிலும் களமிறங்கி இருக்கிறார். டிடிவி தினகரன் ஏற்கனவே எம்பியாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பாஜக கூட்டணியில் இருந்தாலும் டிடிவி தினகரன் போட்டியிட்ட தேனியில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் பெரிய அளவில் தேர்தல் பணியாற்றவில்லை என கூறப்படுகிறது. ஓ. பன்னீர்செல்வத்தின் மகன் மட்டும் அவ்வப்போது பிரசாரங்களில் கலந்து கொண்டார்
டிடிவி தினகரன்: தேனியில் டிடிவி தினகரனின் தேர்தல் செலவுகளை ஓரளவு கவனித்துக் கொள்கிறோம் என்ற பேச்சு வார்த்தையின் அடிப்படையிலேயே தேர்தல் களம் காணப்பட்டது. ஆனால் சொன்னபடி ஓபிஎஸ் தரப்பினர் டிடிவி தினகரன் தேர்தல் செலவுகளை ஏற்றுக் கொள்ளவில்லை என கூறப்படுகிறது. மேலும் ஓ.பன்னீர்செல்வம் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டதால் பெரும்பான்மையான ஆதரவாளர்கள் அங்கே முகாமிட்டு அவருக்காக தேர்தல் பணி ஆற்றி வந்தனர்.
தேர்தல் பணி: இதனால் தான் டிடிவி தினகரனுக்கு தேர்தல் பணி செய்ய முடியவில்லை என விளக்கம் அளித்து இருக்கின்றனர். அதே நேரத்தில் கூட்டணி தர்மத்தின் அடிப்படையில் ராமநாதபுரத்தில் போட்டியிட்ட ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு தங்கள் முழு ஆதரவு இருந்தது. மாவட்ட நிர்வாகிகள் முதல் கிளை செயலாளர்கள் வரை அவருக்காக வேலை பார்த்தோம். ஆனால் தேனியில் ஓபிஎஸ் தரப்பு அதை செய்ய தவறிவிட்டது என்று கூறுகின்றனர் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினர்.
என்ன காரணம்?: தேர்தலில் போட்டியிட வேண்டாம் என ஒதுங்கி இருந்த ஓபிஎஸ் தரப்பை பாஜக நிர்பந்தத்தின் பேரிலேயே அவர் போட்டியிட சம்மதித்த தகவல்கள் கூறுகின்றன. அதே நேரத்தில் தேனியில் தான் போட்டியிடுவேன் எனக் கூறிய அவரை ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடுங்கள் அங்கு சமுதாய வாக்கும், பாஜக வாக்கு வங்கியும் இருக்கிறது இதனால் வெற்றி பெறலாம் என அவரை அங்கு போட்டியிட வைத்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாகவும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் தேனியில் போட்டியிட முடியவில்லை என்ற காரணத்தினால் டிடிவி தினகரனுக்காக தேர்தல் பணிகளை புறக்கணித்து இருப்பதாகவும் சொல்லப்படுகிறது
நிர்வாகிகள் அதிருப்தி: தேர்தல் பணி என்று இல்லாமல் செலவுகளுக்கும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு தரவில்லை எனக் குறிப்பிடுகிறது டிடிவி தினகரன் தரப்பை பொறுத்தவரை பணம் என்பது பெரிய அளவிலான பிரச்சனை இல்லை என்றாலும் ஏற்கனவே பேசி வைத்தபடி தங்கள் பகுதியில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு ஆதரவாளர்கள் தங்களுடன் வரவில்லை என்பதே நம்மிடம் பேசிய தேனி அமமுக நிர்வாகிகளின் குற்றச்சாட்டாக இருக்கிறது. மற்ற கூட்டணியில் தேர்தல் முடிவுகள் ஒன்றுதான் இலக்கு என்று இருக்கும் நிலையில் பாஜக கூட்டணியில் சிறிது சிறிதாக தற்போது சிக்கல்கள் முளைத்திருப்பது அந்த தலைமையை சற்று அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.
முன்கதை சுருக்கம்: தேனியில் டிடிவி தினகரன் போட்டியிடுவதற்கு முக்கியமான காரணம் ஒன்றும் இருக்கிறது. ஓபிஎஸ் தீவிர அரசியலுக்கு வருவதற்கு முன்னதாக அதாவது கழகத்தின் பொருளாளராக வருவதற்கு முன்னதாகவே அந்த பதவியை வகித்தவர் டிடிவி தினகரன். மேலும் இவர் தேனி நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்திருக்கிறார். டெல்லி அரசியலை கவனித்துக் கொண்டதால் தேனியில் ஒருவர் வேண்டும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் தான் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலைப்படுத்தப்பட்டார். ஜெயலலிதாவின் நம்பிக்கையை பெற்ற அவர் முதலமைச்சராகவும் ஜெயலலிதாவால் அமர வைக்கப்பட்டார். அதனால் ஜெயலலிதாவுடன் நெருக்கத்தை வளர்த்துக் கொண்ட ஓ.பன்னீர்செல்வம் தரப்பு டிடிவி தினகரன் தரப்பில் இருந்து மெல்ல மெல்ல விலக ஆரம்பித்தது. ஒரு கட்டத்தில் ஜெயலலிதா இருக்கும் வரை டிடிவி தினகரன் கட்சிக்குள்ளேயே வர முடியவில்லை. அதன்பிறகு கட்சிக்குள் வந்தபோது ஓ.பன்னீர்செல்வம் கட்சியிலேயே இல்லை. இந்த நிலையில் தான் மீண்டும் எடப்பாடி உடன் கைகோர்த்து ஓ.பன்னீர்செல்வம் டிடிவி தினகரனை ஒபிஎஸ் ஓரம் கட்டி வைத்தார். இப்போது கூட்டணியில் சேர்ந்தாலும் பழமையான கசப்புகள் காரணமாக தேனியில் அவர் பணியாற்றாமல் இருந்திருக்கலாம் என்கின்றனர் அரசியல் நிபுணர்கள்.












Click it and Unblock the Notifications