தவெக விஜய் உடன் கூட்டணியா? “எதிர்காலத்தில் எதுவும் நடக்கலாம்".. சஸ்பென்ஸ் வைத்த ஓபிஎஸ்!
சென்னை: தவெக உடன் கூட்டணி வைப்பீர்களா என்ற கேள்விக்கு, "எதிர்காலத்தில் எதுவும் நடக்கலாம். அது நல்லதாகவே நடக்கும்" என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பதில் அளித்துள்ளார். மேலும், செங்கோட்டையன் விரைவில் நல்ல செய்தி சொல்வார் என்றும் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனை சந்திப்பேன் என்றும் ஓபிஎஸ் கூறியுள்ளார்.
சென்னை செல்வதற்காக திண்டுக்கல் ரயில் நிலையம் வந்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பத்து நாள் கெடு இன்றுடன் முடிவடைய உள்ளது. செங்கோட்டையன் நல்ல செய்தி சொல்வார்." என்றார்.

ஓபிஎஸ் பேட்டி
மேலும் பேசிய அவர், "அதிமுகவில் நிலவும் தற்போதைய சூழ்நிலையில் சசிகலாவை சந்திக்க வாய்ப்புள்ளது. உரிய நேரத்தில் சந்திப்பேன். அதேபோல் டிடிவி தினகரன், செங்கோட்டையன் ஆகியோரையும் சந்திப்பேன். டெல்லி செல்வதற்கு வேலையில்லை. பயணங்கள் எதுவும் தற்போது இல்லை.
தவெக தலைவர் விஜய் பிரச்சாரத்தில் மின்சாரம் இல்லை என்ற குற்றச்சாட்டு எனக்கு தெரியவரவில்லை. விஜய் உடன் கூட்டணி குறித்து, எதிர்காலத்தில் எதுவும் நடக்கலாம் அது நல்லதாகவே நடக்கும். பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் 2 நாட்களுக்கு முன்பு தொலைபேசி மூலம் என்னுடன் பேசினார். சந்திக்க வேண்டும் எனக் கூறியுள்ளார். உறுதியாக சந்திப்போம் எனக் கூறியுள்ளேன்" எனத் தெரிவித்துள்ளார்.
செங்கோட்டையன் விவகாரம்
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி - முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இடையேயான பனிப்போர் உச்சகட்டத்தை எட்டியது. அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் இணைக்க, எடப்பாடி பழனிசாமிக்கு செங்கோட்டையன் 10 நாள் கெடு விதித்திருந்தார். அவரது கருத்துக்கு ஓபிஎஸ், சசிகலா ஆகியோர் ஆதரவு தெரிவித்த நிலையில், செங்கோட்டையன் அதிரடியாக கட்சி பொறுப்புகளில் இருந்து எடப்பாடி பழனிசாமியால் நீக்கப்பட்டார்.
அதிமுகவின் அமைப்புச் செயலாளர் மற்றும் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் பொறுப்புகளில் இருந்து செங்கோட்டையன் விடுவிக்கப்பட்டுள்ளார். கட்சி தலைமைக்கு எதிராக பேசியதாகவும், விதிகளை மீறி செயல்பட்டதாகவும் கூறி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் செங்கோட்டையன் ஆதரவாளர்களின் கட்சிப் பதவிகளும் பறிக்கப்பட்டது. செங்கோட்டையனின் பதவிப் பறிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவை சேர்ந்த சுமார் 2000 நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா செய்துள்ளனர்.
செங்கோட்டையனுக்கு ஓபிஎஸ் ஆதரவு
அதிமுகவை ஒருங்கிணைக்க வேண்டும் என்ற செங்கோட்டையனின் முயற்சிக்கு உறுதியாக ஆதரவு அளிக்கிறேன். செங்கோட்டையனை உறுதியாக விரைவில் சந்திப்பேன். 10 நாட்கள் அவகாசம் முடிந்த பின்னர் அனைவரையும் அழைத்து பேசுவேன். செங்கோட்டையனுக்கு அளிக்கப்பட்டுள்ள தண்டனை ஏற்கத்தக்கது அல்ல, கட்சி ஒருங்கிணைய வேண்டும் எனக் கூறினார் செங்கோட்டையன். அவரது பதவி பறிக்கப்பட்டிருப்பது சர்வாதிகாரத்தின் உச்சம். செங்கோட்டையன் கெடு விதித்ததில் தவறில்லை. எடப்பாடி பழனிசாமிக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்திருந்தார்.












Click it and Unblock the Notifications